ரூட்டு மாறும் அசோக் செல்வன்
பொதுவா சினிமா நட்சத்திரங்கள் பலரும் நல்ல கதையில் நடிக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனால் தான் நடிக்கும் படத்தில் நல்ல கதை மட்டுமின்றி வித்தியாசமான திரைக்கதையாக இருக்கவேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடிப்பவர் அசோக் செல்வன்.
அசோக் செல்வனின் வித்தியாச தேடலுக்கு தீனியாக இருந்த படங்களாக ’ஒ மை கடவுளே’, ‘மன்மத லீலை’, ‘தெகிடி’, ‘கூட்டத்தில் ஒருவன்’ போன்ற படங்களை சொல்லலாம். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்த அசோக் செல்வன் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் அதில் சில துளிகள்…
“நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள். அதை சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ஆனால் எனக்கு நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துக்களும் தான் என்னை செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள் தான். உங்கள் கருத்துக்களின் படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும். அதுவே என் விருப்பம்.
ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். ‘நித்தம் ஒரு வானம்’ படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன்.
கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம். விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம். எனக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை. ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது.
அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.” என்றார்.