திரை விமர்சனம்

‘யசோதா’ திரை விமர்சனம்

அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் வியாபார வெறி, ஏழை பெண்களை குறிவைத்து குதறும் சட்ட விரோத தொழில் செய்யும் கார்பரேட் நிறுவனங்களில் மோசடி ஆகியவற்றை தோலுரித்துக்காட்டும் கதையை கையில் எடுத்ததற்காகவே இயக்குனர்கள் ஹரி – ஹரிஷ் இரட்டையர்களை பாராட்டலாம்.

தனது தங்கைதான் உலகம் என்று இருக்கும் சமந்தா தங்கைக்காக எதையும் செய்யத் துணிந்தவர். தங்கையின் ஆபரேஷனுக்கு நிறைய பணம் தேவைப்படும் நிலையில் வாடகை தாயாக சம்மதிக்கிறார். அவர் கர்ப்பம் தரித்தவுடன் குழந்தை நல்லவிதமாக வளர்த்தெடுப்பதற்காக ரகசியமாக செயல்படும் ஒரு இடத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.

அங்கு சென்றபிறகுதான் தன்னைப்போல பல பெண்கள் அங்கு இருக்கும் உண்மை தெரிகிறது. நேரத்திற்கு சாப்பாடு, கேட்பதெல்லாம் கிடைப்பது, சொகுசு கவனிப்பு என்று ராணி போன்ற கவனிப்பு கிடைத்தாலும் அது தங்க சிறையாகவே இருக்கிறது சமந்தாவுக்கு. ஒரு கட்டத்தில் அந்த இடம் ஒரு நரகம் என்ற உண்மை தெரியவர அதிர்ச்சியாகிறார். உள்ளே வந்தவர்கள் உயிருடன் திரும்பமுடியாது என்ற சூழ்நிலையில் சமந்தா அங்கிருந்து தப்பிக்கிறாரா? மற்ற பெண்களின் கதி என்னவாகிறது என்பதுதான் கதை.

சர்வதேச அளவில் பிரபலமான இரு மாடல் அழகிகளின் கொலை; அதன் பின்னணியில் இருக்கும் சதி என போலீஸ் விசாரணை டிராக் ஒரு பக்கம் தடதடக்க,  வாடகை தாயாகும் சமந்தா, அவர் பார்க்கும் புது உலகம் என இன்னொரு டிராக் வேறொரு திசையில் படபடக்க இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு முடிச்சு என திரைக்கதையை சுவாரஷ்யமாக செய்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

வாடகை தாயாக தாய்மையின் உன்னதத்தை அனுபவிப்பதை அழகான உடல்மொழிகளால் சமந்தா வெளிப்படுத்தும் விதம் ஆஹா… தான் சென்ற இடத்தில் நடக்கும் தவறுகளை தெரிந்துகொள்ள துணிச்சலாக களமிறங்குவதும் தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டிய சூழலில் பெண்புலியென மாறி ஆக்‌ஷனில் பின்னி பெடலெடுப்பதுமாக சமந்தா சபாஷ்!

வாடகை தாய் நிறுவனத்தின் இயக்குனராக வரும் வரலெட்சுமிக்கு பசுத்தோல் போர்த்திய புலி கேரக்டர். ஆனால் நடிப்பு செயற்கையாக இருப்பதால் மனதில் ஒட்டவில்லை. மற்ற கேரக்டர்களும் வழக்கமான ஒன்று.

இடைவேளை வரை அட..  களம் புதுசா இருக்கே என ஆவலை தூண்டினாலும் இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் லாஜிக் இல்லாத பல படங்களில் பார்த்து சலித்ததாக இருக்கிறது. சமந்தா என்னவாக இருப்பார் என்ற சஸ்பென்ஸ் யூகிக்கக்கூடியதுதான். ஆக்‌ஷன் படங்களில் ஹீரோவை நோக்கி ஆயிரம் தோட்டாக்கள் வந்தாலும் ஒன்றுகூட அவரது உடலை உரசிச்செல்லாதது போலவே இந்தப்படத்திலும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி நகைப்புக்குரியதாக இருப்பது ஏமாற்றம்.

கலை இயக்குனர் வடிவமைத்த செட்டுகள் அத்தனையும் அசத்தல். சுகுமாரின் ஒளிப்பதிவும் பளிச். லொக்கேஷனுக்கு ஏற்ற லைட்டிங்ஸ் பிரமாதம். மணிசர்மவின் பின்னணி இசை படத்துக்கு பலம்.

இரண்டாம் பாதி கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால்  ‘யசோதா’ பெரிதும் கவர்ந்திருப்பாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE