‘காரி’ திரை விமர்சனம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமார் என்ற நல்ல நடிகனை வெற்றியின் முதுகில் சவாரி செய்ய வைத்திருக்கும் படம் ’காரி’.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனெந்தல் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் பொதுவாக ஒரு கோயில். அந்தக் கோயில் நிர்வாகம் யாருக்கு என்பதில் இரண்டு ஊருக்கும் போட்டா போட்டி. வரவிருக்கும் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்தி, ஒரு கிராமத்து சார்பில் காளைகளையும், இன்னொரு கிராமத்து சார்பில் காளையர்களையும் களத்தில் இறக்கி யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த ஊருக்குதான் கோயில் நிர்வாகம் என பேசி முடிவெடுக்கப்படுகிறது. போட்டி நாள் நெருங்கி வரும் வேளையில் மாட்டை அடக்க காரியூருக்கு ஒரு வீரனும், சிவனெந்தலுக்கு ஒரு காளையும் தேவைப்படுகிறது. சென்னையில் குதிரை ஜாக்கியாக இருக்கும் சசிகுமாரை மாடுபிடி வீரராக அழைத்து வருகிறது ஒரு சூழல். அதேபோல் எந்த போட்டியிலும் பிடிபடாத கதாநாயகி பார்வதி அருணின் காரி காளை சிவனெந்தல் கிராமத்திற்கு கிடைக்கிறது. சசிகுமாருக்கு காரி காளை அடங்குகிறதா காரியூர் கெளரவத்தை நாயகன் காப்பாற்றுகிறாரா இல்லை என்பது க்ளைமாக்ஸ்.
கதை சுருக்கத்தின்படி ஜல்லிக்கட்டு அதனைச் சுற்றிய கலாச்சாரம், காதல் என்று திரைக்கதை பண்ணியிருந்தாலே படம் கம்பீரமாக நின்றிருக்கும். ஆனால் கார்பரேட் அரசியல், கிராமத்தை மலடாக்க நினைக்கும் சதி என வெவ்வேறு திசையில் கதை கிளை பிரிவதால் ஆங்காங்கே படத்தில் தொய்வு ஏற்படுகிறது.
எனினும் தமிழ் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் இவற்றை மீட்டெடுப்பதற்கான குரல் ஓங்கி ஒலிப்பதால் ‘காரி’யை உச்சிமுகரலாம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சசிகுமார் நிறைவு. இறந்துபோன தந்தையை நினைத்து உருகுவது. காதலி பார்வதியிடம் மருகுவது, அவரது இழப்பை உயிரை கொடுத்து திருப்பி தருவது என சசிகுமார், நடிப்பின் எல்லா ரசங்களிலும் ஜொலிக்கிறார்.
நாயகி பார்வதி அருண் தமிழுக்கு கிடைத்த நல்வரவு. தம்பிபோல் நினைத்த தனது காரி காளை, அடிமாட்டுக்கு விற்கப்பட்ட செய்தி அறிந்து மண்ணில் புரண்டழுகும் அந்த ஒரு காட்சி அவரை நடிப்பு ராட்சசியாய் அடையாளம் காணச்செய்கிறது. வெல்டன் பார்வதி.
ஜல்லிக்கட்டு காளைகளின் உயிரணுக்களை வெளிநாட்டுக்கு விற்கும் கார்பரேட் வில்லனாக ஜே.டி.சக்கரவர்த்தி வருகிறார். அவரது உடல்மொழி செயற்கைத்தனமாக இருக்கிறது. அதிலும் முரட்டுக்காளைகளை முழுதாக வறுத்தெடுத்து சாப்பிட நினைக்கும் சைகோத்தனம் ஜீரணிக்கமுடியாத காட்சிகள்.
காரியூர் தலைவராக வரும் நாகி நீடு, நாயகியின் குடிகார தந்தையாக வரும் பாலாஜி சக்திவேல், சசிகுமாரின் தந்தையாக ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் காட்சியை தவிர்த்திருக்கலாம்.
டி.இமான் இசையில் “தகப்பன் தோளில் சாமி பார்த்தோம்..” என்ற மறைந்த கவிஞர் லலிதானந்தின் பாடல் கண்களை ஈரமாக்குகிறது. “சாஞ்சிக்கவா..” பாடலும் இனிமை.
”நீ உன் நண்பனுக்கு உதவி செய்யல.. உன்னையே நம்பியிருந்த ஒரு உசுருக்கு துரோகம் பண்ணிட்ட” என்பதுபோன்ற வசனங்களில் இயக்குனரின் ஆளுமை தெரிகிறது. 18 வகையான காளைகள் இருக்கிறது என்ற செய்தியை சொல்லும் இயக்குனர் ஹேமந்த், ஜல்லிக்கட்டை பற்றி தெரியாத விஷயங்களையும் டீட்டெயில் செய்திருந்தால் ‘காரி’ இன்னுமும் அழுத்தம் பெற்றிருக்கும்.
சில குறைகள் இருந்தாலும் சமூக நோக்கம் கொண்ட கதையை கையில் எடுத்ததற்காகவே ஹேமந்தையும் இதனை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாரையும் வெகுவாக பாராட்டலாம்.
‘காரி’ வெற்றி திமிலை அணைக்கும்!