‘கட்டா குஸ்தி’ திரை விமர்சனம்
எச்சரிக்கை: நீங்கள் இந்தப் படம் பார்க்கப் போவதாக இருந்தால் வெறும் வயிற்றில் செல்வது நல்லது. ஏனெனில் காட்சிக்கு காட்சி நீங்கள் குலுங்க குலுங்க சிரிக்கும் சூழல் உள்ளது.
ஆங்.. இப்போ விமர்சனத்திற்கு வரலாம்
குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் என்று விளம்பரம் செய்யப்படும் படங்கள் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. ஆனால் ‘கட்டாகுஸ்தி’ உண்மையிலேயே குடும்பத்துடன் அமர்ந்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும் ரசிக்கவைக்கும் ஒருபடம்.
தனக்கு மனைவியாக வருபவருக்கு கூந்தல் அதிகமா இருக்கணும் படிப்பு குறைவா இருக்கணும். இப்படியொரு பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறார் பொள்ளாட்சியில் ஒரு வீடு இருபது ஏக்கர் தென்னந்தோப்போடு இருக்கும் விஷ்ணுவிஷால்.
கட்டா குஸ்தியில் சாதனைபுரியும் வெறியோடு களத்தில் இறங்கி எதிராளியை புரட்டித்தள்ளுகிறார் பாலக்காட்டு பெண்புலி ஐஸ்வர்யா லட்சுமி. பெரிய படிப்பு, கொஞ்சம் கூந்தலுடன் இருக்கும் இவரை கல்யாணம் செய்துவைக்க துடிக்கிறது குடும்பம். இப்போ பொள்ளாட்சி விஷ்ணுவுக்கு பாலக்காடு ஐஸ்வர்யா லட்சுமி பொண்டாட்டி ஆனா என்னவாகும்? அழகான இந்த முரணை முடிச்சுப்போட்டு இயக்குனர் செல்லா அய்யாவு திரைக்கதையில் காட்டியிருக்கும் காமெடி குஸ்தி, கண்ணீர் வரும் அளவுக்கு சிரிப்பை வரவைக்கிறது.
பாப் கட்டிங் வைத்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு சவுரிமுடி வைத்து; படிப்பையும் குறைத்துச் சொல்லி விஷ்ணுவுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் ஐஸ்வர்யா குடும்பத்தினர். முதலிரவு முடிந்த அன்றே கனவனிடம் சவுரி முடி சிக்கிக்கொள்ள அதை மீட்க ஐஸ்வர்யா போராடும் காட்சியில் தொடங்கும் காமெடி தர்பார் க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது.
கதாநாயகிக்கு நாயகனுக்கு சமமான கேரக்டர் என்று தெரிந்தும் கதையும் படத்தின் வெற்றியுமே முக்கியமாக கருதி இந்த படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஷ்ணுவிஷால் பாராட்டுக்குரியவர். திருமணமான புதிதில் மனையிடம் பில்டப் செட் பண்ணுவதில் தொடங்கி ரவுடிகளுடன் மனைவி சண்டை போடும்போது ஐஸ்வர்யா லட்சுமியின் சவுரிமுடி ரவுடியின் கையோடு வருவதும் அங்கே விஷ்ணுவிஷாலின் கனவும் கலைந்துபோகும் காட்சியில் விழுந்து விழுந்து சிரிக்கமுடிகிறது.
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலியாக மனதில் இடம்பிடித்த ஐஸ்வர்யா லட்சுமி, இந்தப்படத்தில் இன்னும் ஒருபடி மேலேபோய் அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதிலும் மருதாணியாய் ஒட்டிவிட்டார். கட்டா குஸ்தி வீராங்கனைகளுக்கே உரிய உடல்வாகு, உடல்மொழி என தத்ரூபம் காட்டியிருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்புக்கு விருதுகள் வண்டி கட்டுவது நிச்சயம்.
விஷ்ணுவின் தாய் மாமனாக வரும் கருணாஸ், ஐஸ்வர்யாவின் சித்தப்பாவாக வரும் முனிஸ்காந்த், கேஸ் கட்டுகளுக்கு பதிலாக மேக்கப் பெட்டியுடன் அலையும் முட்டாள் வக்கீலாக காளிவெங்கட், ரெடின் கிங்ஸ்லி என எல்லா கதாபாத்திரங்களுமே படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கின்றன. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரின் இசை, அன்பறிவின் சண்டை பயிற்சி என தொழில் நுட்ப கலைஞர்களும் படத்திற்கு பலம்.
வெறும் காமெடி மசாலா மட்டுமின்றி ஆணுக்கு பெண் நிகரானவள் என்ற கருத்தை அழுத்தமாகவும் பதித்திருக்கும் இயக்குனர் செல்லா அய்யாவுக்கு தமிழ்சினிமாவில் பெரிய அங்கீகாரம் காத்திருக்கிறது.
‘கட்டா குஸ்தி’ கருத்து தெளிப்புள்ள காமெடி குஸ்தி.