சினிமா செய்திகள்

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ : சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார்.

இதற்கு முன்னதாக யூடியூப் விமர்சகர் இளமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ஆன்டி இண்டியன் படத்தை ஆதம்பாவா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு மொலோடி கிங் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்தப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE