த்ரிஷா படத்துக்கு உதவி செய்த உஸ்பெகிஸ்தான் ராணுவம்
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’. நாளை வெளியாகவுள்ள படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் சக்தி பேசியதாவது:-
“இயக்குநர் சரவணனுடன் மூன்று படங்கள் வேலை பார்த்து இருக்கிறேன். இது எனக்கு கனவு படம். உலக திரைப்படங்கள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை சரவணன் இந்த கதை சொல்லும்போதே இருந்தது. உஸ்பெகிஸ்தானில் நாங்கள் அனைவரும் சென்று கடுமையாக உழைத்திருக்கிறோம். ஏனெனில், படத்தின் பல காட்சிகள் மலை மீதுதான் இருக்கும். பொருட்களை மேலே எடுத்து கொண்டு போவது படப்பிடிப்பு என அதிக நேரம் எடுக்கும். படத்தின் இசை அற்புதமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் சத்யா மிரட்டி இருக்கிறார். படத்தில் பனித்துளி பாடலை விஷூவலாக சுபாராக் அழகாக கொடுத்திருக்கிறார். கதைக்கு உஸ்பெகிஸ்தான் களமாக தேவைப்பட்டபோது தயாரிப்பு நிறுவனமான லைகா எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அனுப்பி வைத்தார்கள். திரையில் நிச்சயம் ஒரு மேஜிக் இருக்கும்”.
படத்தின் இசையமைப்பாளர் சி. சத்யா பேசியதாவது:-
“முதலில் சரவணன் சாருக்கு நன்றி. அவருடன் எனக்கு இது நான்காவது படம். முதல் படத்தில் இருந்தே எங்களுக்குள் அந்த பிணைப்பு இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில்
“மாசமா.. ஆறு மாசமா..” பாடலுக்கு முதலில் ட்யூன் கேட்டார் சரவணன். ஆனால், நான் பாடல் வரிகளுக்கு ஏற்ப இசையமைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன். அது நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே வந்தது. பாடல் வரிகளுக்காக நா. முத்துக்குமாரிடம் போனபோது, இதுவே நன்றாக இருக்கிறதே எதற்காக புது வரிகள் என்று சொன்னபோதுதான் தன் வரிகள் மீதே சரவணனுக்கு நம்பிக்கை வந்தது. அதனால், எப்போது நான் பாடலுக்கு இசையமைத்தாலும் இயக்குநரை டம்மியாக வரிகள் எழுத வைப்பேன். அப்படிதான் ‘பனித்துளி’ பாடலையும் எழுத வைத்து பின்பு கபிலன் சார் எழுதினார். இந்தப் படம் பொருத்தவரைக்கும் எனக்கு நிஜமாகவே சவாலான ஒன்று. இசையில் படத்திற்காக வழக்கமாக ஒன்று செய்வது என்பதைத் தாண்டி, படத்தின் திரைக்கதைதான் இன்னும் சிறப்பான இசையை கொண்டு வரும். அந்த வகையில், இந்த கதையில் பல புது முயற்சிகள் நான் செய்து பார்க்க முடிந்தது. அரேபியாவில் இருந்து இரண்டு இசைக்கலைஞர்கள் வந்து வாசித்து இருக்கிறார்கள். அந்த அரபி பாடல் படத்தின் க்ளைமாக்ஸில் வரும்.”என்றார்.
படத்தின் இயக்குநர் சரவணன் பேசியதாவது:-
“முதலில் நான் மூன்று பேருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். லைகா புரொடக்ஷன் சுபாஷ்கரன் சார், தமிழ்க்குமரன் சார், இந்த கதையை கொடுத்த ஏ. ஆர். முருகதாஸ் சார். அவர்தான் இந்த கதையை லைகாவில் ஓகே செய்தார். அதற்கு பின்பு தான் நான் திரைக்கதை எழுதி, இயக்கினேன். என் படக்குழுவுக்கும் நன்றி. என் படக்குழுவில் யாரும் அதிகம் பேச மாட்டார்கள் ஆனால் வேலையை மிகச் சரியாக முடிப்பார்கள். ராஜசேகர் மாஸ்டர் பற்றி நான் சொல்லியாக வேண்டும். க்ளைமாக்ஸ் காட்சி எடுப்பதற்காக நாங்கள் உஸ்பெகிஸ்தான் சென்றுவிட்டோம். எங்கள் டீம் வருவதற்கு ஒரு வாரம் தாமதமானது. அதுவரை மாஸ்டர் மலையாள படம் ஒன்றை தள்ளி வைத்துவிட்டு வேலை எதுவும் செய்யாமல் எங்களுடனேயே அவரும் ட்ராவல் செய்தார். அது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் வேறு ஒருவராக இருந்தால் என்னுடைய தேதிகள் வீணாகிறது என்று சொல்லி உடனே கிளம்பி போயிருப்பார். அதற்கு மாஸ்டருக்கு நன்றி. சக்தி இந்த படத்தின் காட்சிகளை அவ்வளவு அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார். இந்த கதையை முதலில் நான் லீனியராகதான் எழுதி படமாக்கி மிக்ஸ் செய்து எடிட் செய்தோம். அதன் பிறகு எங்களுக்கு நேரம் கிடைத்து படம் பார்த்தபோது இதை வேறுவிதமாக எடிட் செய்யலாமே என்று பேசினோம். அதன் பிறகு படத்தை மீண்டும் முதலில் இருந்து எடிட் செய்து நான்- லீனியராக எடுத்து வந்தோம். அதுதான் இப்பொழுது நீங்கள் பார்க்கும் வெர்ஷன். கிட்டத்தட்ட ஒரு மூன்று படத்திற்கான வேலையை எடிட்டர் செய்திருக்கிறார். அவருக்கு நன்றி. இசையமைத்துக் கொடுத்த சத்யா சாருக்கும் நன்றி. அடுத்து படத்தின் கதாநாயகி த்ரிஷா. முதலில் எனக்கு இவரிடம் எப்படி கதை சொல்ல வேண்டும், எப்படி வேலை வாங்க வேண்டும், எந்த அளவுக்கு சொல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அவர் வந்த முதல் நாளில் இருந்தே எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் தான் இந்த படத்தை இந்த அளவுக்கு சிறப்பாக எடுக்க முடிந்தது. என்னுடைய அசிஸ்ட்டெண்ட் டீமுக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த ஷார்ட் டைமில் படத்திற்கு இந்த அளவிற்கு புரோமோஷன் செய்து படத்தை எடுத்துச் சென்ற லைகா புரொடக்ஷனுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி”.
படத்தின் நாயகி த்ரிஷா பேசியதாவது:-
“ஒரு படத்தில் நடிகையாக என்னுடைய வேலையை நான் செய்து முடித்து விடுவேன். ஆனால் அந்த படத்தின் இசை, படத்தொகுப்பு இதெல்லாம் தான் எந்த ஒரு படத்தையும் இன்னும் மேம்படுத்த உதவும். அந்த வகையில் நான் போன வாரம்தான் முழு படத்தையும் பார்த்தேன். இசை, படத்தொகுப்பு என அனைத்து பணிகளும் சிறப்பாக வந்து ஒரு நம்பிக்கை கொடுத்தது. இதற்கு மேல் இந்த படத்தை பார்வையாளர்கள்தான் பார்த்து எப்படி இருக்கிறது என்று முடிவு செய்ய வேண்டும். ஷூட்டிங் போன பின்பு ஷூட்டிங் போனது போலவே தெரியாத அளவுக்கு ஜாலியாக வேலை பார்த்தேன். மாஸ்டர் நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அதற்கு நன்றி. இந்தப் படத்தில் சண்டை காட்சிகளை பொறுத்தவரை சூப்பர் வுமன் படம் அளவிற்கு இல்லை. மிக இயல்பாக அந்த சூழ்நிலைக்கு என்ன தேவையோ அது மட்டும்தான் கொடுத்திருப்பேன். உஸ்பெகிஸ்தானில் முதல் முறையாக ஒரு படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். மிகவும் சவாலான விஷயம் அது. இதுவே யூரோப், அமெரிக்கா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகவும் எளிது. ஏனென்றால் அங்கு இதற்கு முன்பே நிறைய படங்களின் படப்பிடிப்பு நடந்ததும் ஒரு காரணம். ஆனால், உஸ்பெகிஸ்தானில் எங்கள் மொழி அவர்களுக்கு புரியவில்லை அவர்களது மொழி எங்களுக்கு புரியவில்லை. மேலும் அங்கு நாளே கொஞ்சம் மெதுவாக தான் தொடங்கும். மிலிட்டரியை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் அது சார்ந்த எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் உண்மையாக வேண்டும் என்று சரவணன் எதிர்பார்த்தார். அதையெல்லாம் உஸ்பெகிஸ்தானில் இருந்த மிலிட்டரிதான் எங்களுக்கு கொண்டுவந்து கொடுத்தது. நானும் உஸ்பெகிஸ்தானுக்கு செல்வது இதுதான் முதல்முறை. அந்த ஊரின் அழகை எந்த ஒரு சமரசமும் இல்லாமல் சக்தி சார் படத்தில் அழகாக கொடுத்துள்ளார். மொத்த படக் குழுவுக்கும் நன்றி. என்னதான் கதாநாயகியை மையப்படுத்திய படம் என்று சொன்னாலும் அந்த படக்குழு சரியாக இல்லை என்றால் படம் ஓகேவாதான் வரும். ஆனால் இந்த படம் பொருத்தவரைக்கும் எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது” என்றார் பேசினார்.