‘டிரைவர் ஜமுனா’ திரை விமர்சனம்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.. என்று நடிகைகள் பேட்டிகளில் சொல்வதுண்டு. ஆனால் உண்மையாகவே தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் தெளிவானர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதோ மீண்டும் ஒரு வித்தியாச கதைக்களத்தில் அவர் நடித்திருக்கும் படம்தான் ‘டிரைவர் ஜமுனா’.
படம் எப்படி இருக்கிறது?…
கால்டாக்ஸி டிரைவரான ஐஸ்வர்யாவின் காரில் அரசியல்வாதி ஆடுகளம் நரேனை போட்டுத்தள்ள திட்டமிட்ட ஒரு கூலிப்படை பயணிக்கிறது. அவர் கூலிப்படை என்பதை தெரிந்துகொள்ளும் ஐஸ்வர்யா.. ஆரம்பத்தில் மிரண்டாலும் அவர்களிடமிருந்து தப்பிக்க வழி பார்க்கிறார்.
இதற்கிடையே ஐஸ்வர்யாவின் காரில் கூலிப்படை ஏறி இருப்பதை மோப்பம் பிடிக்கும் போலீஸ், கால் டாக்ஸியை டிரேஸ் செய்கிறது. இந்த தகவல் கூலிப்படையினருக்கும் தெரியவர, ஐஸ்வர்யாவை மிரட்டி காரை நிறுத்தாமல் ஓட்டச்சொல்கிறார்கள். கூலிப்படையிடமிருந்து ஐஸ்வர்யா தப்பிக்கிறாரா இல்லையா என்பதே மீதி கதை.
பெண் கால்டாக்ஸி டிரைவர், மிரட்டும் கூலிப்படை, போலீஸ் துரத்தல், டிராவல் என லட்டு மாதிரியான கதை, கதைக்களம். ஆனால் அதற்கான சுவாரஷ்ய திரைக்கதை, அழுத்தமான காட்சியமைப்புகள், கேள்விகள் எழ வைக்காத லாஜிக் போன்றவைகளில் இயக்குனர் கின்ஸிலி பிசகி இருப்பதால் சூப்பர் ஹிட்டாக வேண்டிய படம் பெட்ரோல் இல்லாத வண்டியாக பிரக்டவுன் ஆகி நிற்கிறது.
கொல்லப்பட்ட அப்பா, பக்கவாதத்தில் வீழ்ந்த அம்மா, வீட்டைவிட்டு வெளியேறிய தம்பி.. இந்தக் குடும்பச் சூழ்நிலையை தனி ஒருத்தியாக எதிர்கொள்ளும் கால்டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா செவ்வன செய்திருக்கிறார் என்றாலும், லாஜிக் ஓட்டை அவரது இன்னொரு வெற்றிக்கு முட்டுக்கட்டையாகிவிட்டது. பசுத்தோல் போர்த்திய அரசியல்வாதி பாத்திரத்தில் ஆடுகளம் நரேன் வழக்கமான கேரக்டர்.
வாலாஜாபாத்தில் இருந்து சென்னைக்கு கால்டாக்ஸி சவாரி போவது, துப்பாக்கி வைத்திருக்கும் போலீஸையே கூலிப்படை வெட்டிவிட்டு எளிதாக தப்பிப்பது, கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போதே வழியில் நிறுத்தி அப்பா, அம்மாவின் நினைவு வந்து ஐஸ்வர்யா கலங்குவது என நாடகத்தனமான காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவது அந்தோ பரிதாபம். கார் பயண காட்சிகளில் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் உள்ளிட்ட படக்குழுவினரின் உழைப்பிற்கு பாராட்டுகள். ஜிப்ரானின் பின்னணி இசைக்கு சலாம்.
’டிரைவர் ஜமுனா’ அலுப்பான பயணம்.