“உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதில்லை” : ஆர்.வி.உதயக்குமார் வருத்தம்
மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘மாளிகப்புரம்’ தமிழில் வருகிற 26ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ள இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:-
“இந்த மாதிரி படத்திற்கு நான் பாடல் எழுதுவேன் என்று நினைக்கவில்லை. அதற்கு ஐயப்பனின் அருள்தான் காரணம். நான் திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது, என்னுடன் படித்த மாணவனுக்கு மூளையில் கட்டி. இரவு நேரத்தில் நானும், என் நண்பனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர் மண்டை வெடிக்கப் போகிறது என்று கூறினார். அவருடைய பெற்றோர்கள் ஊரில் இருக்கிறார்கள். அப்போது, என்னுடைய நண்பன் ஐயப்பனுக்கு வேண்டுதல் வைத்தார். இவனுக்கு சரியாகிவிட்டால், நாங்கள் மூவரும் மாலைபோட்டு சபரிமலைக்கு வருகிறோம் என்று வேண்டினான். அவன் பிழைத்துவிட்டான். இன்றுவரை நன்றாக இருக்கிறான்.அந்த சம்பந்தமோ என்னவோ இந்தப் படத்திற்கு பாடல் எழுதும்படியாக அமைந்துவிட்டது.
என்னால் முடிந்த அளவிற்கு பாடல் எழுதியிருக்கிறேன். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக டைட்டில் ரோலில் நடித்த குழந்தை தேவ நந்தாவின் முகபாவனைகள் தான் பாடல் எழுத உந்துதலாக இருந்தது. உன்னி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இப்போது வரும் பெரிய திரைப்படங்கள் உணர்வு ரீதியாக இல்லை. பலரும் திரையரங்கிற்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் திரைப்படம் ஆரோக்கியமாக இருக்கும்.” என்றார்.
நடிகர் உன்னி முகுந்தன் பேசும்போது,
“மாளிகப்புரம் என்னுடைய மற்ற படங்களைப் போல் வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான படமாக மாளிகப்புரம் இருக்கும். இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனக்கு ஒரு நல்ல குடும்ப படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் ஐயப்பன் பக்தன்தான். இறுதிக் காட்சியில் என்னை மாற்றிக் கொள்ளும் அருமையான காட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.”என்றார்.
நடிகர் சம்பத்ராம் பேசும்போது,”நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. அதில் இந்த படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தில் அனைவரும் விரதம் இருந்து தான் படப்பிடிப்பு நடத்தினோம். 6 முறை இப்படத்தை பார்த்தேன்.
6 முறையும் கண்கள் கலங்கியது.
உன்னி சார் படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் படபிடிப்பு தளத்திற்கு வந்து அனைத்து பணிகளையும் செய்வார். இப்படத்திற்கு தூணாக இருந்தது இசையும், பின்னணி இசையும் தான். இந்த படத்திற்கு எங்களின் கடின உழைப்பு வீண் போகவில்லை” என்றார்.
மாக்கெட்டிங் ஹெட் விபின் பேசும்போது,”இந்த படம் பக்தி, யுக்தி இரண்டும் கலந்திருக்கும். கேரளாவில் குழந்தைகளும், முதியோர்களும் அதிகளவில் திரையரங்கில் வந்து பார்க்கிறார்கள். நீண்ட வருடங்களாக வராமல் இருந்த முதியவர்கள் அதிகம் வந்து கொண்டே இருக்கிறார்கள்.” என்றார்.
சிறுமி தேவ நந்தா பேசும்போது,”இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதேபோல், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி. அனைவரும் மாளிகப்புரம் படத்தை திரையரங்கிற்கு வந்து பார்த்து மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும்”என்றார்.
தமிழில் சூர்யா – ஜோதிகா நடித்த பேரழகன் படத்தை டைரக்ட் செய்த சசி சங்கரின் மகன் விஷ்ணு சசி சங்கர் டைரக்ட் செய்த முதல் படம் இது. அவர் பேசியதாவது:-
“மேடையில் எனக்கு பேசத் தெரியாது. பிரசாத் லேபிற்கு வரும்போது எனது தந்தையின் நினைவு வந்தது. முதன்முதலாக என்னுடைய அப்பாவுடன் தான் இங்கு வந்தேன். இப்பட தயாரிப்பாளர்களான பிரியா வேணு, வேணு குந்தம்பள்ளி அவர்களுக்கு நன்றி.
இந்த படம் உன்னி முகுந்தனை நோக்கி பயணிக்கும். அவருக்கு நன்றி. தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன்”என்றார்.