கதாநாயகியை கண்ணுல காட்டல: மிர்ச்சி சிவா கலாட்டா
லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. நாளை வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் கே. குமார் பேசியதாவது:-
“எங்களுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘பாரிஸ் ஜெயராஜ்’. அந்தத் திரைப்படத்தையும் விநியோகஸ்தர் பிரபு திலக் வெளியிட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தைத் தயாரித்தோம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போது, நாயகன் மிர்ச்சி சிவா, உற்சாகத்துடன் நம்பிக்கையாக பேசி, ஊக்கமளித்து என்னை அதிலிருந்து மீட்டார். இயக்குநரிடம் கதை கேட்ட பிறகு, மிர்ச்சி சிவா இதில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகுதான் படத்தைத் தொடங்கினோம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லாஜிக் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம் தான். திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.”
இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். பேசுகையில், “இது எனக்கு முதல் மேடை. பொறியியல் பட்டதாரியான பிறகு திரைப்படத்துறையில் பணியாற்ற போகிறேன் என்று சொன்னவுடன் அனுமதித்த என்னுடைய பெற்றோருக்கு நன்றி. 2016 ஆம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்த குறும்படம் தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. இதற்கு முழு முதற் காரணம் தயாரிப்பாளர் குமார். அனைவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். வாய்ப்பு கிடைத்தால்தான் அந்த திறமை வெளிப்படும். அந்த வகையில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த திரைப்படத்தை வெளியிடும் டாக்டர் பிரபு திலக், நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ.. என படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
பாடகர் மனோ பேசுகையில், “இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர், நாயகன் மிர்ச்சி சிவா ஆகியோருக்கு நன்றி. ‘சிங்காரவேலன்’ படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, ‘மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது’ என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.” என்றார்.
படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசியதாவது:-
“கொரோனா தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட திரைப்படம் இது. தயாரிப்பாளர் குமார், தயாரிப்பாளர் போல் அல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, பட குழுவினருடன் இணைந்து பணியாற்றுவார். அவருடைய எளிமைக்கும், நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் இன்னும் கூடுதல் உயரங்களை தொடுவார். இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். உணவை விநியோகிக்கும் ஊழியருக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்று கிடைக்கிறது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? அவனுக்கு அவன் விரும்பியது அனைத்தும் கிடைக்கிறது. அவனுக்கும், போனுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு ஏற்படுகிறது. அதன் பிறகு அதற்கான தீர்வு என்ன?.. என திரைக்கதை இருக்கிறது.
இந்தப் படத்தில் கதாநாயகி யார்? என கேட்டேன். ‘மேகா ஆகாஷ்’ என சொன்னார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, ‘நீங்கள் ஷங்கர் அவர் சிம்ரன்’ என்றார். நானும் சரி என்று, ‘சிம்ரன் எங்கே?’ என்று கேட்டேன். ஒரு போனை கொண்டு வந்து கொடுத்தனர். நான் மேகா ஆகாஷ் நாளைக்கு வருவார் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் மட்டுமல்ல.. இதுவரையிலும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. சரி இன்றாவது அவர்கள் வருவார்களா..! என எண்ணி வந்தேன். இங்கும் அவர்கள் வரவில்லை.
சிலர் அருகில் இருக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அந்த மாதிரியான நேர்நிலையான அதிர்வை ஏற்படுத்தும் சாதனையாளர் தான் பாடகர் மனோ. இதுவரை இருபத்தாறாயிரம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த மாபெரும் சொத்து. இவருடன் நடிக்கும் போது, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அருகில் அமர வைத்து, அவர் பாடிய பாடல்களை பாடுமாறு கேட்பேன். அவரும் சலிக்காமல் பாடி, அனைவரையும் உற்சாகப்படுத்துவார். இதன் தொடர்ச்சியாக அவர் அவருடைய வீட்டிலிருந்து மதிய உணவை வரவழைத்து பட குழுவினருக்கு வழங்கி அவருடைய விருந்தோம்பலை வெளிப்படுத்துவார். இதற்காகவே அவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் நானும் அவருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் தவறவிட்ட குழந்தைத்தனத்தை அவர் இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”