‘வெள்ளி மலை’ திரை விமர்சனம்
ஒரு மலை கிராமத்தில் எந்த நோய்க்கும் தன்னிடம் மருந்து இருப்பதாக சொல்லும் நாட்டு வைத்தியர். இவரது நம்பிக்கை மீதும் மருந்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டவர் வைத்தியரின் மகள் அஞ்சு கிருஷ்ணா. ஆனால் இந்த இருவர் மீதும் துளி அளவும் நம்பிக்கை இல்லாத கிராமத்து மக்கள், அவர்களை கேலி கிண்டலாக பார்க்கிறார்கள்.
இந்தச்சூழ்நிலையில் அந்த கிராமமே விநோத நோயால் தாக்கப்பட, அதற்கு மருந்து இல்லாமல் தத்தளிக்கின்றனர் கிராம மக்கள். ஒரே ஒருவர் மட்டும் வைத்தியரை நம்பி அவரிடம் சிகிச்சை பெற, அவர் பூரண குணமடைகிறார். அப்புறமென்ன ஒட்டுமொத்த கிராமத்தினரும் வைத்தியரிடம் சரணாகதியாகிறது. ஊருக்கே வைத்தியம் பண்ணுமளவிற்கு தன்னிடம் மருந்தில்லை என சொல்லும் வைத்தியர், மேல் வெள்ளி மலையில் அதற்கான மூலிகை இருப்பதாக சொல்லி அதை பறித்துவர கிராமத்தினர் சிலரை அழைத்துக்கொண்டு மலைக்குச் செல்கிறார். மலையில் எங்கெங்கோ தேடி அலைந்தும் அந்த மூலிகை தென்படாமல் சோர்ந்து போகிறார்கள். வைத்தியருக்கு மருந்து கிடைத்ததா ? கிராம மக்களின் நோய் குணமடைகிறதா இல்லையா என்பதே மீதி கதை.
கதையை தாண்டி நம்மை வெகுவாக ஈர்ப்பது கதைக்களம்தான். ஆஹா.. மேற்கு தொடர்ச்சி மழையின் ஈரம் சொட்டும் அழகும் கிராமத்தின் இயல்பும் எதார்த்த முகங்களும் ஆகச்சிறப்பு.
பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் பார்த்திருக்கக்கூடிய சூப்பர்குட் சுப்பிரமணி, இதில் வைத்தியராக கிட்டத்தட்ட கதையின் நாயகனாக தனது பங்களிப்பை மிகச்சரியாகவே செய்திருக்கிறார். அவரது மகளாக அஞ்சு கிருஷ்ணாவின் நடிப்பில் எதார்த்தம் மீறாத நேர்த்தி. பெரிய படங்களில் நல்ல வாய்ப்பு வந்தால் தேசிய விருது வாங்குமளவிற்கு தேர்ச்சிப் பெறுவது நிச்சயம். மற்ற கதாபாத்திரங்களும் கச்சிதம்.
மணிப்பெருமாளின் அழகு ஒளிப்பதிவு, என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசை இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஆரம்பத்தில்.. மறக்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாட்டு மருத்துவத்திற்கு இயக்குனர் மகத்துவம் சேர்க்கிறாரே என்று கதையின் போக்கு பிடித்துப்போனாலும் அடுத்தடுத்த காட்சிகளில் சித்த மருத்துவத்திற்கு சீரியஸ் பிரச்சாரம் செய்வதுபோல கொண்டு செல்வது அலுப்பை ஏற்படுத்துகிறது. மருந்துத் தேடி மலைக்குச் செல்லும் காட்சிகளில் படத்தின் வேகம் பாதாளத்தில் விழுகிறது. காமெடி என்ற பெயரில் கடித்துக்குதறுவதும் திரைக்கதையின் சறுக்கல்.
இந்த குறைகளையெல்லாம் இயக்குனர் ஓம் விஜய் களைந்து திரைக்கதையை கடைந்தெடுத்திருந்தால்.. ‘வெள்ளி மலை’ வெற்றிச்சிகரம் தொட்டிருக்கும்.