ஹாலிவுட் தோற்றத்தில் மிரட்டும் ‘யாத்திசை’ சாம்சன்
சினிமாவில் போராடிக்கொண்டிருப்பவர்களை கலைமகள் கவனிக்காமல் இருப்பதும் உண்டு. இனி சினிமாவே வேண்டாம் என்று பாதை மாற நினைப்பவர்களின் கைகளை அதே கலைத்தாய் இறுகப் பற்றிக்கொண்டு நீ பயணிக்கவேண்டிய பாதை இதுதான் என ஆசிர்வதித்துச் செல்வதும் உண்டு. இதில் இரண்டாம் வகையை சார்ந்தவர்தான் சாம்சன்.
‘யாத்திசை’ சாம்சன் என்றால் சால பொருத்தமாக இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாமல்; பெரிய விளம்பரங்கள் இல்லாமல் சமீபத்தில் வெளியாகி, பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களின் பாராட்டை குவித்த படம் ‘யாத்திசை’. இதில் மீன்கொத்தி பறவையாக தேவரடியார்கள் மீது கண்ணும் கவனமும் வைக்கும் கோயில் குருக்களாக நடித்திருக்கிறார் சாம்சன். படத்திற்கு கிடைத்த பாராட்டும் வரவேற்பும் சாம்சனின் நடிப்புக்கும் கிடைத்துள்ளது.
சமீபத்தில் அவரை சந்தித்து பேசச் சென்றபோது.. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான செந்நிற தோற்றத்தில் ஹாலிவுட் நடிகரை போன்ற தோற்றத்தில் இருக்கிறார் சாம்சன். விளையாட்டில் ஆர்வம் உள்ள சாம்சன் த்ரோ பாலில் தேசிய அளவில் வெற்றி பெற்றவர். தவிர மார்ஷியல் ஆர்ட்ஸ், களறி பயின்றவர். கிரிக்கெட், அத்லடிக் என்றால் சாம்சனுக்கு சர்க்கரைதான். மாநில அளவில் பதக்கங்களையும் வென்றவர்.
இனி சாம்சன் பேசுவார்..
“சொந்த ஊர் பாலக்காடு. கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து லயோலாவில் டிப்ளமோ கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு புரொடக்ஷன் மேனஜர் மூலமாக சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. சினிமாவில் நடிக்கப்போனால் ஹீரோ ஹீரோயின்களை பார்க்கவும் முடியும் சாப்பாட்டுடன் பாக்கெட் மணியும் கிடைக்கும் என்று நினைத்துதான் முதலில் நடிக்கப்போனேன். நாளடைவில் நடிப்பும் சினிமாவும் பிடித்துப்போகவே இதையே நமது முழுநேர வேலையாக்கிக்கொள்ளலாம் என்று தோன்றியது. கிடைத்ததோ சிறு சிறு வேடங்கள்தான். அதில் முக்கியமானது, நாகாவின் ‘அனந்தபுரம் வீடு’. சளைக்காமல் பல இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறேன்.
ஒரு கட்டத்தில் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்தபோது காஸ்ட்யூம் டிசைனரான எனது நண்பர் சுரேஷ்குமார் மூலமாக ‘ யாத்திசை’ இயக்குனர் தரணி ராசேந்திரனை சந்தித்தேன். அதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரிக்கான காஸ்ட்யூம்களை போடச் சொல்லி மேக்கப் டெஸ்ட் எடுத்தார். மிகப் பொருத்தமாக இருக்கவே படப்பிடிப்புக்கு செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போய் நடிக்கவைத்தார்.
நான் எதிர்பாராமல் யாத்திசை பட வாய்ப்பும் எனது நடிப்புக்கு நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது. படம் பார்த்த நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பாராட்டுக் கால்கள் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது சில படங்களில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. மலையாளம் தெரியும் என்பதால் சில மலையாளப் பட வாய்ப்புகளும் வந்திருக்கிறது. இந்த வேடம்தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று மன நிறைவோடு பேசுகிறார் சாம்சன்.
தமிழுக்கு நல்ல வில்லன்கூட கிடைத்துள்ளார்.
சினிமா களத்திலும் சாம்சன் த்ரோ பால் விளையாட வாழ்த்துகள்!