‘சிறுவன் சாமுவேல்’ விமர்சனம்
ஒரு திரைப்படம் சினிமா சாயலற்று, செயற்கை பூச்சுகள் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் உருவாகி அதனை பார்க்கநேர்ந்தால் அம்மியில் அரைத்துவைத்த அம்மா சமையல் மாதிரி ருசிக்கும். அப்படி ஒரு திருப்தியை தரும் படம்தான் ‘சிறுவன் சாமுவேல்’.
முழுக்க முழுக்க புதுமுகங்கள், இயல்பான மனிதர்கள்தான் படத்தின் கலைஞர்கள். அதனால்தான் இது சினிமா இல்லை நிஜம் என்ற உணர்வை தருகிறது. இயக்குனருக்கு வாழ்த்துகள்!
படத்தின் கதை…
ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஷாமுக்கு கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. தனது கனவை நனவாக்கித்தரும் கடவுளாக கிரிக்கெட் மட்டையை நினைக்கிறான். எப்படியாவது ஒரு கிரிக்கெட் மட்டையை வாங்கிவிடவேண்டும் என்ற ஆசை அவனுக்குள் அலை அடிக்கிறது. இந்தச்சூழ்நிலையில் அவனுடன் நட்பாக பழகும் ராஜேஷ் மீது திருட்டு பட்டம் கட்டப்படுகிறது. இதனால் அவனது பள்ளிப் படிப்பு பாதியில் நின்றுபோகிறது. ஷாமின் கிரிகெட் ஆசை நிறைவேறுகிறதா? ராஜேசின் பாதியில் நின்ற படிப்பு தொடர்கிறதா என்று நீளும் திரைக்கதையின் முடிவு, சினிமாத்தனமற்ற க்ளைமாக்ஸ்.
சிறுவன் ஷாமாக அஜிதன் தவசிமுத்துவும் ராஜேஷாக விஷ்ணுவும் அருமையான தேர்வு. குறிப்பாக தனது ஆசையையும் ஏக்கத்தையும் கண்கள் வழி கடத்தும் ஷாம், ஆஹா… பாதியில் பறிபோன படிப்பு ஒரு பக்கம்; கூலி வேலையில் இருக்கும் வேதனை என சூழ்நிலைக்கேற்ப சோக முகபாவனையில் ராஜேஷ் இதயம் தொடுகிறான். ஷாமின் அம்மா; டியூஷன் அக்கா, திருட்டு பட்டம் கட்டும் பெண் என அனைத்து நடிகர், நடிகைகளும் இயல்பாக நடித்துள்ளனர்.
கன்னியாகுமரி, நாகர்கோயில் வட்டார வழக்கு, படத்தின் வசனத்தை புரிந்துகொள்ள கடினப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் V.சிவானந் காந்தியின் ஒளிப்பதிவில் இயல்பும் அழகும் இரட்டைச் சுவை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒன்றரை மணி நேர படம் என்றாலும் சட்டென்று கடந்துபோகவேண்டிய சில காட்சிகளை நீட்டி முழக்குவது அலுப்பை தருகிறது.
இப்படி சில குறைகள் இருந்தாலும் குறைந்த பட்ஜெட்டில் மனசுக்கு நெருக்கமான படத்தை இயல்பு மாறாமல் இயக்கியிருக்கும் இயக்குனர் சாது ஃபெர்லிங்டன் பாராட்டுக்குரியவர். இவரை நம்பி தாராள பொருட்செலவு செய்ய தயாரிப்பாளர் தயாராக இருந்தால் நிச்சயம் தரமான படத்தை இவரால் எடுக்கமுடியும் என்ற நம்பிக்கையை தருகிறார்.
‘சிறுவன் சாமுவேல்’ மனதின் அருகே.