சினிமா செய்திகள்

‘வீரன்’ மண் சார்ந்த சூப்பர் ஹீரோ கதை : ஹிப் ஹாப் தமிழா ஆதி பேச்சு

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க,’மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’ ஜூன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகரும் பிரபல யூடியூபருமான சசி பேசியதாவது:-

” கோயம்புத்தூரில் வெறும் சினிமா கனவுகளோடு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் மூலம் இப்படியான ஒரு மேடை கிடைத்திருப்பது எனக்கு கனவாகவே உள்ளது.நான் ஒரு படம் நடித்து வெளியாகிவிட்டது. அடுத்து எப்போது திரையில் என்னை பார்ப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருந்தபொழுது சரவணன் சார் இப்படத்தில் ‘சக்கரை’ எனும் ஒரு கேரக்டரை கொடுத்துள்ளார். ‘உன்னாலே உன்னாலே’ படம் வந்த சமயத்தில் நான்தான்டா வினய் என்று சுற்றிக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவருடைய பெரிய ரசிகன். படத்தில் அவருடன் எனக்கு காம்பினேஷன் சீன் எதுவும் இல்லை. அதனால் டப்பிங்கில் வினய் வரும் வரை காத்திருந்து என்னுடையதை முடித்துவிட்டு சென்றேன். கோயம்புத்தூரில் இருந்து சினிமாவுக்கு எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் இருந்த பல யூடியூபருக்கும் ஆதி அண்ணா மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு யூடியூபரை கொண்டு வருவது பாராட்ட வேண்டிய விஷயம்.”

நடிகர் காளி வெங்கட் பேசியபோது, “‘முண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு நானும் முனிஷ்காந்தும் இந்த படத்தில் நல்ல நகைச்சுவை தந்திருக்கிறோம் என நம்பிக்கையோடு சொல்கிறேன். இந்த படம் குழந்தைகளோடு குடும்பமாக தியேட்டரில் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். ஆதி சாரோடு வேலை பார்த்தது மகிழ்ச்சி. தமிழில் இது போன்ற முதல் நேட்டிவிட்டி சூப்பர் ஹீரோ கதையை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்க்கு நன்றி. இயக்குநர் சரவணன் சிறப்பாக படத்தை எடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் வினய் பேசியதாவது:-

” கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். மிகச் சிறந்த தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். இந்த படத்தின் இயக்குநர் சரவணன் இந்தப் படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டபோது நான் உடனே சம்மதித்து விட்டேன். ஏனென்றால், சூப்பர் ஹீரோ படம் என்றால் அதை எப்படி அவர்கள் நம்பும்படி தர போகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் உங்களை போல எனக்கும் இருந்தது. அடுத்து ஆதி. இனிமையாக பழகக் கூடியவர். நல்ல நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகள் கொண்டவர். ஒரு படக்குழு ஒற்றுமையாக இருக்கும் பொழுதே அந்த படம் வெற்றியடைந்து விடும் என்று நான் நம்புவேன். அது ‘வீரன்’ படத்தில் உள்ளது. தொழில்நுட்பக்குழுவினர் தங்களுடைய சிறந்த பணியை கொடுத்துள்ளனர்”என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசியபோது, “நீண்ட நாட்கள் கழித்து ரிலாக்ஸாக ஒரு படம் செய்து இருக்கிறேன். படத்தின் குழுவே புரமோஷனல் பணிகள் உட்பட அத்தனையும் அழகாக செய்து இருக்கின்றனர். தினமும் கிச்சனில் சமைக்கும் அம்மாவை ஒரு நாள் ஹோட்டலுக்கு வெளியே அழைத்து போய் சாப்பிட வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற ஒரு உணர்வை இந்த படம் கொடுத்துள்ளது. ஒரு நல்ல படம் அதற்கான இடத்தை தானே அமைத்துக் கொள்ளும் என்பது போல ஜூன் இரண்டாம் தேதி குழந்தைகளுக்கான படமாக ஒரு விடுமுறை கொண்டாட்டமாக இது வெளியாக உள்ளது” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் பேசியதாவது:-

“ஒரு சூப்பர் ஹீரோவாக இந்த படத்திற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கான நேரம் ஒதுக்கி, அவ்வளவு பொறுமையாக இன்று வரைக்கும் எங்களுக்கு ஆதி ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இது பொள்ளாச்சி கதை. அதற்கேற்ற ஒரு முகம் தேவைப்பட்டதால் ஆதிராவை தேடி கண்டுபிடித்தோம். அவர் மிகவும் சிரமப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டு நடித்தார். முனீஸ்காந்த், காளி வெங்கட், பத்ரி, சசி, சின்னி ஜெயந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் இசை சிறப்பாக வந்துள்ளது. சில படங்கள் தான் காலம் கடந்தும் நம்முடைய நினைவில் இருக்கும். அதுபோல ‘வீரன்’ இருக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறேன். ஜூன் இரண்டாம் தேதி படம் வெளியாகிறது பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் ஆதி பேசியதாவது:-

“சத்யஜோதி பிலிம்ஸ் உடன் எனக்கு இது மூன்றாவது படம். மற்ற இரண்டு படங்களை போலவே இதுவும் வெற்றி அடையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். தியாகராஜன் சாருடைய இரண்டாவது மகன் அர்ஜூன் எனக்கு நல்ல நண்பர். அவர் ‘நட்பே துணை’ சமயத்தில் இருந்து அடுத்தடுத்து எங்களுக்கு படம் செய்து தர வேண்டும் என்று கேட்டார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை மிகப் பெரியது. வேலையைத் தாண்டி சிலர் மட்டும்தான் நம் வாழ்க்கையிலும் நண்பர்களாக வருவார்கள். அதில் எனக்கு சரவணனும் ஒருவர். இந்தப் படத்தின் சூப்பர் வில்லன், வினய் அண்ணன். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாலே படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி. இந்த படம் வெற்றி பெற்றால் காளி வெங்கட், முனீஸ்காந்த்தின் பங்கும் முக்கியமானதாக இருக்கும். ஆதிரா கேரளாவில் இருந்து வந்திருக்கிறார். படம் முடிவதற்குள்ளாகவே நிறைய தமிழ் கற்றுக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் தமிழ் கற்றுக் கொண்டு சிறப்பாக நடிப்பார். அவருடைய முயற்சிக்கு இன்னும் பெரிய இடத்தை அடைவார்.

இந்த படம் எடுக்கப்பட்டது மூன்று மாத காலத்தில் என்றாலும், அதற்கு முன்பு ஆறு மாத காலம் குதிரை பயிற்சியில் ‘முடியும் முடியும்’ என்று எனக்கு உத்வேகம் கொடுத்த மாஸ்டர் அப்பு, ஜான் அவர்களுக்கு நன்றி. ‘சிங்கிள் பசங்க’,  ‘கேரளா டான்ஸ்’ என என்னுடன் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்த சந்தோஷ் மாஸ்டர் தான் இதற்கும் நடனம் அமைத்திருக்கிறார். இந்த கதைக்கு அந்த மண்சார்ந்த நடன அசைவுகள் நிறைய ஒர்க் செய்து எங்களுக்கும் அதை சொல்லிக் கொடுத்தார். இந்த படத்தில் நான் நடித்ததை விட கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என படங்கள் வந்திருந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் எப்போதும் ஸ்பெஷல்தான். அந்த வகையில் இன்னும் 10 வருடங்கள் கழித்து ‘வீரன்’ ஒரு நினைவில் நிற்கக்கூடிய சூப்பர் ஹீரோ படமாக இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE