‘காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ – விமர்சனம்
கிராமத்து சாதிய மனோபாவம்; ஆ ஊனா வெட்டுக்குத்து; ஆங்காங்கே காதல்; அவ்வப்போது மோதல் என்ற பழைய ஃபார்முலா ஃபுட்போர்டில் தொடர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் முத்தையாவின் புத்தியை சாணை பிடிக்காவிட்டால் தமிழ் சினிமாவுக்கு ஆபத்து.
விமர்சனத்திற்காக கதையை தொட்டுக்கொள்ள நினைத்தால் எந்த கதையை சொல்வது? எப்படி சொல்வது என்ற இடியாப்ப சிக்கல், மண்டைக்குள்ளே ஏரோஃபிளைனை ஏற்றி இம்சிக்கிறது. அத்தனை கதைகள் நிறைந்த படமே ’காதர் பாட்சா’.
கட்டுமஸ்தான உடம்பை வளர்த்திருக்கும் ஆர்யா, கொஞ்சம் கதை ஞானத்தையும் வளர்த்துக்கொள்வது நல்லது. கதாநாயகி சித்தி இத்னானியுடன் கொஞ்சம் காதல், வில்லன்களுடன் புழுதி பறக்க பறக்க மோதல் என ஆக்ஷன் விருந்து படைக்கிறார் ஆர்யா. ஆனால் ஒரு டஜன் சண்டை காட்சிகள் இருப்பதால் படம் பார்ப்பவர்களையும் பொளந்து கட்டுவதுபோல் ஃபீலிங்.
கதாநாயகி சித்தி இத்னானிக்கு இதில் ஸ்கோர் செய்ய நிறைய வாய்ப்பு கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்கிறார் இயக்குனர். சித்தியும் நடிப்பில் ஆஹா.. அந்த கண்ணக்குழியில் எத்தனை இதயங்கள் சரிந்துகிடக்கிறதென கணக்கெடுத்தீங்களா சித்தி?..
ஹீரோ, ஹீரோயின் சம்பளத்தை காட்டிலும் வில்லன்களுக்கு அதிக செலவாகியிருக்கலாம். அந்த அளவுக்கு வில்லன்கள் கூட்டம் கதைக்குள் புகுந்து காவு வாங்குகிறது. அப்புறம் பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி என்று ரெண்டு லாரி நிறைய நடிகர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
இராமநாதபுரம் மண்ணின் இந்து – இஸ்லாமிய வாழ்வியல் முறை தமிழ் சினிமாவுக்கு சற்று புதிதே என்றாலும் கதையுடன் ஒட்டாத காட்சிகள் அழுத்தமற்றதாக் இருக்கிறது.
பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால் பாடல் காட்சிக்கு கேண்டின் பக்கம் போகலாம் என்று நினைத்தாலும் பாப்கார்ன் உள்ளிட்ட விலைவாசி, இருக்கையிலே உட்காருப்பா என்கிறது. ஒரு லோடு புழுதியை கொட்டினாலும் துள்ளியமா ஒளிப்பதிவு செய்திருக்கும் வேல்ராஜுக்கு வெல்டன்.
முத்தையா சார்.. இனியாவது கதையை புதுசா யோசிங்க சார். அரத பழசு கதையை அடுத்தடுத்து கொடுத்தாலும் தொடந்து படம் பண்றீங்களே அதுதான் அதிர்ஷ்டம் சாரே! ஆனாலும் எல்லா நேரமும் அதிர்ஷ்டம் கூட வராது என்பதை புரிந்துகொண்டால் நல்லது. இதை உங்க கிராமத்து கோடங்கி வாக்கா நினைச்சு திருந்துங்க!
‘காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ ஓங்கி அடிச்சா ஒன்பது டன் வெயிட்டு.