‘போர் தொழில்’ – விமர்சனம்
இப்படியொரு முழுநீள திக்திக் அனுபவத்தை தரும் க்ரைம் த்ரில்லர் பார்த்து ரொம்ப நாளாச்சு.. கடைசிவரை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களுக்கு கடத்தும் திரைக்கதை யுக்தி, ‘போர் தொழில்’ வெற்றிக்கு உதவியிருக்கிறது.
நெடுஞ்சாலையை ஒட்டிய அடர்ந்த இடத்தில் கொலையாகி கிடக்கும் பெண். அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று போலீஸ் ஆய்வை தொடங்கிய வேகத்திலேயே அதே ஸ்டலில் அடுத்தடுத்த கொலைகள் நடக்கிறது. லோக்கல் போலீஸ் கொலையாளியை கண்டுபிடிக்க திணற, சிறப்பு குற்றப்பிரிவு எஸ்பியான சரத்குமாருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படுகிறது. அவருக்கு துணையாக புதிதாக டிஎஸ்பியாகும் அசோக் செல்வனும் சேர்ந்துகொள்கிறார்.
இருவரும் களத்தில் இறங்கி வேலையை ஆரம்பிக்க, கொலையாளி இந்த இருவருக்குமே சிம்ம சொப்பணமாகி தண்ணி காட்டுகிறான். இந்த சவாலில் சரத்குமார் – அசோக் செல்வன் வெற்றி பெறுகிறார்களா இல்லையா? என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
ரொம்ப நாள் கழித்து பழைய பண்ணீர் செல்வமாக சரத்குமாரை திரும்ப வைத்திருக்கிறது அவரது நடிப்பு. முறைப்பும் விறப்புமாக கடமையில் கறார் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவம் பேசுகிறது. கொலையாளியை கண்டுபிடிக்க கையாளும் அனுகுமுறை, உயர் அதிகாரிகளிடமே நெஞ்சை நிமிர்த்தி வேண்டியவற்றை கேட்டு பெறும் திறன் என வர்ம் இடங்களிலெல்லாம் தனக்கு கொடுத்த வேலையை கட்சிதமாக செய்து கைத்தட்டல் பெறுகிறார்.
அமுல் பேபி முகத்துடன் பயந்த சுபாவம் கொண்ட புதிதாக டிஎஸ்பி பொறுப்பை ஏற்கும் அசோக் செல்வன் தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மேலதிகாரியான சரத்குமாரிடம் திட்டுவாங்கி திணறும் அசோக் செல்வன் ஒருகட்டத்தில் அவரின் பாராட்டை பெறும் அளவுக்கு குற்றவாளியை நெருங்க உதவுவது, தனது புத்தக அறிவை மெச்சிக்கொள்வது என நடிப்பில் செமையா ஸ்கோர் பண்ணியிருக்கிறார். உடன் பணியாற்றும் நிகிலா விமலுடன் எட்டிப்பார்க்கும் துளிர் காதலிலும் ரசிக்க வைக்கிறார்.
குற்றப்பிரிவில் வழக்கு விபரங்களை கையாளும் டெக்னீசியனாக வரும் நிகிலா ஓரிரு காட்சிகளில் மட்டுமே வேலை.
மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இதில் முக்கியமான ரோல். தன் அனுபவத்தைக்கொண்டு அந்த கேரக்டரை அசால்டாக மென்று சாப்பிட்டிருக்கிறார். பார்வையிலேயே மிரட்டியிருக்கிறார்.
க்ரைம் த்ரில்லருக்கு பொருத்தமான லைட்டிங்கை கொடுத்து ஒளிப்பதிவில் துல்லியம் காட்டியிருக்கும் கலைச்செல்வன் சிவாஜியும், தேவையான இடத்தில் மட்டும் பின்னணி அமைத்து பல இடங்களில் மெளனத்திலேயே படம் பார்ப்பவர்களை மிரளவைக்கும் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோயும் பாராட்டுகுரியவர்கள்.
பொதுவாக க்ரைம் த்ரில்லருக்கு திரைக்கதை அமைக்கும்போது தேவையற்ற சிக்கல்களை சேர்த்து குழப்பிவிடுவார்கள். இதில் அந்த குறை இல்லை. சொல்ல வந்த விஷயத்தை தண்டவாளம் மாறாமல் கதை, திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கும் ஆல்பிரட் பிரகாஷ், விக்னேஷ் ராஜா இரட்டையர்களுக்கு ஜோடி பூங்கொத்து பார்சல். இயக்குனர் விக்னேஷ் ராஜாவுக்கு ஸ்பெஷல் பாராட்டு.
இத்தனை ப்ளஸ்கள் நிறைந்த படத்தில் குற்றவாளிகளுக்கான ப்ளாஷ்பேக் காட்சிகள்; அவர்கள் குற்றவாளிகளாக மாறியதற்கான காரணங்கள் ஓவர் டோசேஜ். அதனாலேயே இடண்டாம் பாதி படத்தின் வேகத்தில் தொய்வு. அந்த போலீஸ்கார தந்தை இத்தனை கொடூரமானவராகவா இருப்பார்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
எனினும் ‘போர் தொழில்’ பார்க்கலாம்; பழகலாம்.