‘எல்ஜிஎம்’ திரை விமர்சனம்
சென்னையின் தத்துப் பிள்ளையாகிவிட்ட தல தோனி, திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் படம் ‘எல்ஜிஎம்’. தோனி நினைத்திருந்தால் ஹாலிவுட்டிலோ பாலிவுட்டிலோ முதல் படத்தை தயாரித்திருக்கலாம். ஆனால் தன்னை அதிகமாக நேசிக்கும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்காக ‘எல்ஜிஎம்’ படத்தை தமிழில் தயாரித்திருப்பது தமிழ் மக்கள் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை பறைசாற்றுகிறது.
சரி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்…
நாயகன் ஹரிஷ்கல்யாணும் நாயகி இவானாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்குள் காதலாகி கல்யாணம் வரை நெருக்கும் வேளையில் இந்த கலயாணம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார் இவானா. அதற்கு காரணம்… தனக்கு மாமியாராக வரப்போகிற நதியா.. கல்யாணத்திற்கு பிறகு எப்படி நடந்துகொள்வாரோ என்ற சந்தேகம்.
இவானாவின் முடிவால் அவரது வீட்டினரே அதிருப்தியாகி அறிவுரை சொல்ல, இவானாவுக்கு யோசனை ஒன்று தோன்றுகிறது. அதாவது இரண்டு குடும்பமும் சேர்ந்து கூர்க் சுற்றுலா செல்வது என்றும் அப்போது வருங்கால மாமியாருடன் பரஸ்பரம் புரிதல் ஏற்பட்டால் கல்யாணத்திற்கு சம்மதம் என்று சொல்கிறார் இவானா. அதன்படியே சுற்றுலா செல்கிறார்கள். போன இடத்தில் நதியாவும் இவானாவும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்களா? ஹரிஷ்கல்யாண் – இவானா காதல் ஜெயமாகிறதா? என்பதே க்ளைமாக்ஸ்!
மெல்லிய மிதமான காதல் கதைக்கு அம்சமான ஜோடியாக பொருந்தியிருக்கிறார்கள் ஹரிஷ்கல்யாணும் இவானாவும். இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்துள்ளது. அதிலும் இவானாவின் கண்களும் அழகும் உடல்மொழியும் கவிதையாய் மனம் ஈர்க்கிறது. தல தோனியின் முதல் படத்தில் கதாநாயகனாகும் அதிர்ஷ்டம் ஹரிஷ்கல்யாண் மீது வீசியிருக்கிறது. முடிந்த அளவு தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.
ஹரிஷின் அம்மாவாக நதியா வழக்கம்போலவே ஸ்கோர் செய்கிறார். அதிலும் கோவா பப்பில் அவர் ஆடும் நடனம் அத்தனை இளமை. நண்பனாக வரும் ஆர்ஜே விஜய் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பஸ் டிரைவராக வரும் யோகி பாபுவின் காமெடி உப்புச்சப்பில்லாமல் ஏமாற்றுகிறது.
ஒரு காதல் படத்திற்கு இவ்வளவு சுமாராக ஒளிப்பதிவு செய்திருப்பது இந்தப்படமாகதான் இருக்கும். கிராபிக்ஸ் வேலைகளும் அப்படித்தான். இயக்கம் – இசை இரண்டு வேலைகளையும் சேர்த்தே கவனித்திருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி. இரண்டிலுமே தேறவில்லை.
படத்தின் கதையை ஒன்லைனாக பார்க்கும்போது சுவாரஷ்யம்தான். ஆனால் அதற்கு செய்திருக்கும் திரைக்கதைதான் இம்சை அரசனாக சோதிக்கிறது. படத்தில் போதை ஜிலேபியை சாப்பிட்ட குதிரை தறிகெட்டு ஓடுவதுபோலதான் திரைக்கதை போகும் இடம் தெரியாமல் படம் பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி, இந்தக் குறைகளையெல்லாம் சரி செய்திருந்தால் எல்ஜிஎம் தோனியை தயாரிப்பாளராக சிக்ஸர் அடிக்க வைத்திருக்கும். ஆனால் இயக்குனரின் தவறால் டக் அவுட் ஆகியிருக்கிறார் தோனி.