தமிழ் சினிமாவின் கவனம் ஈர்க்க களமிறங்கும் எஸ்.கே.எம் சினிமாஸ்
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை தயாரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார் .
இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார். நாளைய இயக்குநர்கள் போட்டியில் கலந்துக்கொண்டு பாராட்டு பெற்ற விஜய் ஆனந்தன், பல குறும்படங்கள் இயக்கி தன்னை நிரூபித்திருக்கிறார். சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்றுக்கொண்டவர் எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
வட சென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘போத்தனூர் தபால் நிலையம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பு செய்கிறார். மக்கள் தொடர்பாளர்களாக தர்மதுரை & சுரேஷ் சுகு பணியாற்றுகிறார்கள்.
ஐந்து இளைஞர்களாக தமிழ் சினிமாவின் கனவத்தை ஈர்த்திருக்கும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். சென்னை பிரசாத் லேபில் எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான ‘புரொடக்ஷன்ஸ் 1’ துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி தானு, நாக் ஸ்டூடியோ கல்யாணம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு எஸ்.கே.ம் சினிமாஸ் நிறுவனத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்தினார்கள்.