‘வான் மூன்று’ திரை விமர்சனம்
இப்போதெல்லாம் திரையரங்கில் வெளியாகும் படங்களைவிட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில் ‘ஆஹா’ தளத்தில் வெளிவந்து பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் படம்தான் ‘வான் மூன்று’
எப்படி இருக்கிறது படம்?
ஒரு மருத்துவமனை அதில் சந்திக்கும் சில மனிதர்கள் அவர்களை சார்ந்த பிரச்சனைகளே படத்தின் ஒன்லைன். கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால்.. தற்கொலைக்கு முயற்சி செய்த அம்முஅபிராமி, காதல் தோல்வியால் உயிரை இழக்க துணிந்த ஒரு கதாபாத்திரம், மனைவியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் தவிக்கும் ஒரு முதியவர். இந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் தங்களது பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கின்றனர். மருத்துவமனையில் ஏற்படும் அவர்களுது நட்பு பிரச்சனைக்கு மருந்தாகிறதா அவர்களின் வாழ்வில் அடுத்த அத்தியாயம் என்ன? தீர்வு கிடைக்கிறதா இல்லையா என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.
ஒரு எளிமையான கதைதான். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகள் மிக வலிமையாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கொருவர் தங்களது பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளும்போது படம் பார்க்கும் பார்வையாளனுக்கும் அது கடத்தப்படுவதே திரைக்கதையின் வெற்றியாக அமைகிறது.
அம்மு அபிராமி உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களின் நடிப்பும் அழகு. குறிப்பாக வயதான தம்பதிகளாக வரும் டெல்லிகணேஷ் – லீமா சாம்சன் நடிப்பு சிறப்பு. ஆங்காங்கே நாடகத்தனம்; அநேக இடங்களில் நீளும் உரையாடல்களும் சற்றே அலுப்பு.
வாழ்வியலையும் மனித நேயத்தையும் கலந்துக்கட்டிய நேர்மையான திரைக்கதையில் ஜெயித்திருக்கும் இயக்குனர் ஏ.எம்.ஆர்.முருகேசுக்கு பாராட்டுகள்.
‘வான் மூன்று’ ஆஹாவில் தரிசிக்க!