கிளிசரின் இல்லாமல் கண்ணீர் : நடிப்பில் சாகசம் செய்யும் மாசூம் சங்கர்
சந்தானம் நடிப்பில் தயாரான ‘டி டி ரிட்டன்ஸ்’ எனும் திரைப்படத்தில் பிரெஞ்சு பெண் கிளாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மாசூம் சங்கர். இணையத்தில் வைரலான இவருடைய நேர்காணல் ஒன்றின் மூலம் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.
டெல்லியில் பிறந்த மாசூம் சங்கர், ‘டி டி ரிட்டன்ஸ்’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார். அதன் போது தொகுப்பாளர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த இடத்திலேயே கிளிசரின் இல்லாமல் கண்ணீர் விட்டு அழும் படி கேட்டுக் கொண்டார். உடனேயே மாசூம் சங்கர் கண் சிமிட்டாமல் கிளிசரின் இல்லாமல் கண்ணீர் விட்டு அழுது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த காணொளி இதுவரை இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
அவரது ஆளுமை மற்றும் ஈடுபாடு குறித்து அறியப்பட்ட அந்த வீடியோவை பார்வையிட்ட பல சர்வதேச பார்வையாளர்கள்.. ’50 ஷேட்ஸ் ஆப் கிரே’ எனும் திரைப்படத்தில் நடிகை டகோட்டா ஜான்சன் நடித்த அனஸ்டாசியா ஸ்டீல் எனும் கதாபாத்திரத்தை நினைவு படுத்துவதாகவும், நீங்கள் அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தனர்.
ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான ‘நாகேஷ் திரையரங்கம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை மாசூம் சங்கர்.. அப்படத்தைத் தொடர்ந்து ’90 எம்எல்’, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘டெடி’ மற்றும் ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘டி டி ரிட்டன்ஸ்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பணியாற்றுவது குறித்து கேட்டபோது, ”நான் தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக இருப்பதை மட்டும் நம்பவில்லை, என்னுள் ஒரு தமிழன் ஆன்மா இருக்கிறது என்று நான் உணர்கிறேன். அதனால் தான் நான் தமிழ் கற்றுக் கொள்வதை ஒரு குறிக்கோளாக கொண்டேன். மேலும் எனது கதாபாத்திரங்களுக்கு பின்னணி பேசுவதிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அதை நான் உறுதியாக நம்புகிறேன். மொழி தெரியாமல் நடிப்பது அநியாயம்” என்றார் நடிகை மாசூம் சங்கர்.
இவர் நடிகை மட்டுமல்ல இயல்பிலேயே மிகவும் துணிச்சலான சாகச பெண்ணும் கூட. சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் அசாதாரணமான சந்தர்ப்பங்களில் ஏதேனும் உடல் ரீதியான சவால்கள் வந்தால், அதனை எதிர்கொள்வதற்காக தற்காப்பு கலைகளிலும் பயிற்சி பெற்றிருக்கிறார் நடிகை மாசூம் சங்கர்.
தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல விரைவில் தெலுங்கு ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொள்ள தயாராகி வருகிறார். இது தொடர்பான முக்கியமான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. தெலுங்கு மொழியிலும் இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இவரே பின்னணி பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.