‘டீமன்’ திரை விமர்சனம்
சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர் சச்சின். ஒரு தயாரிப்பாளரிடம் பேய் கதை ஒன்றை சொல்லி அது அவருக்கு பிடித்துப்போக இயக்குனராக பட வேலைகளை தொடங்குகிறார். ஸ்கிரிப்ட் வேலைக்காக தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் குடியேறுகிறார் சச்சின்.
முதல் நாளிலிருந்து அவருக்கு கெட்ட கனவுகளாக வருகிறது. சில அமானுஷ்ய நிகழ்வுகளும் நடக்கிறது. கண்ணாடி முன் நின்றால் அவர் முகம் வயதான தோற்றத்தில் மிரட்டுகிறது. காரணம் தெரியாமல் தடுமாறும் சச்சின் ஒரு கட்டத்தில் பித்துப்பிடித்தது போல் ஆகிறார்.
இதற்கிடையே அவர் காணாமல் போக, அவரைத் தேடி நண்பர்களும், காதலியும் அலைகின்றனர். ஆனால் சச்சினோ அவரது வீட்டில் ஒரு அறையில்தான் இருக்கிறார். இது அவர்கள் கண்ணில் படவில்லை. சப்தம் எழுப்பினாலும் அது யார் காதிலும் விழாமல் இருக்கிறது.
சச்சினும் படம் பார்க்கும் ரசிகர்களும் உச்சக் கட்ட டென்ஷனில் தலையை பிய்த்துக்கொள்ளும்போதுதான் அந்த அறையில் ஒரு பேய்க்குடும்பம் வசிப்பது தெரிகிறது. அந்த பேய்களின் கதை என்ன? நாயகன் சச்சினின் நிலை என்ன? என்பதற்கு க்ளைமாக்ஸில் கிடைக்கிறது பதில்.
பேய்ப்பட வரிசையில் மாறுபட்ட கதை இது. சின்ன பட்ஜெட்டில் முடிந்தவரை ஆடியன்ஸை பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.
நாயகன் சச்சின் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். விடை தெரியா அமானுஷ்யத்தில் சிக்கி தவிக்கும்போது பலவிதமான முகபாவனை, உடல் மொழியில் ஸ்கோர் செய்கிறார்.
நாயகி அபர்ணதி நல்லாதான் இருக்கிறார். எளிமையான அழகில் ஈர்க்கிறார். ஆனால் ஒரு டூயட், நான்கைந்து காட்சிகளோடு அவருக்கு எண்ட் கார்டு போட்டது ஏனோ? நண்பர்களாக நடித்தவர்களின் நடிப்பில் நாடகத்தனம்.
சில காட்சிகள் பழைய ஃபார்முலாவில் இருப்பதும் சஸ்பென்ஸை யூகிக்க முடிவதும் படத்தின் பலவீனம். ஹாரர் படத்துக்கு பொருத்தமான பின்னணியை அமைத்திருக்கும் ரோனி ரபேல் சபாஷ்!
படத்தின் பாதி காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது ஆர்.எஸ்.ஆனந்த குமாரின் சிறப்பான ஒளிப்பதிவு.
க்ளைமாக்ஸ் காட்சிகள் ‘ஹவுஸ் ஆஃப் சீக்ரெட்ஸ்’ ஓடிடி தொடரை நினைவுபடுத்துகிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும் குறைந்த பட்ஜெட்டில் ஆடியன்ஸை பயமுறுத்தும் இயக்குனரை பாராட்டலாம்.
ஒரு கேள்வி… நாயகன் கதாபாத்திரத்தின் பெயரை நயன்தாரா கணவரின் பெயரான விக்னேஷ் சிவன் என்று வைத்தது ஏனோ?….