அரசியல்

பா.ம.கவை நிலைகுலைய வைத்த கருணாஸ்

’வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பா.ம.க-வை நிலைகுலையவைத்திருக்கிறது என்றால், வழக்கு தொடுத்திருந்த ‘முக்குலத்தோர் புலிப்படை’யை உற்சாகத்தில் திளைக்க வைத்திருக்கிறது. இதையடுத்து ‘முக்குலத்தோர் புலிப்படை’ நிறுவனத் தலைவர் கருணாஸிடம் பேசினோம்…

“முக்குலத்தோர் என்பதற்காக மட்டுமே வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறீர்களா?’’

“அப்படிக் கிடையாது. இந்த வழக்கின் எந்தவோர் இடத்திலும் நாங்கள் சாதியை முன்னிறுத்தவில்லை; சமூகநீதியைத்தான் முன்னிறுத்தியிருக்கிறோம். அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களையும் மக்கள்தொகை அடிப்படையில் கணக்கெடுத்து, கூடவே கல்வி, பொருளாதாரம் சார்ந்த அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் கருத்திற்கொண்டு உள் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுமேயானால், அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஏனெனில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர் சமுதாயத்தையும் சேர்த்து மொத்தம் 116 சாதிகள் அடங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில், வன்னியர் சமூகத்தினருக்கு மட்டுமே 10.5%-ஐ உள் இட ஒதுக்கீடாகக் கொடுத்துவிட்டால், மீதமுள்ள 115 சாதியினரும் வெறுமனே 9.5% இட ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? எனவே இந்த உள் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்யக் கோரி வழக்கு தொடுத்திருந்தோம்.’’

“மக்கள்தொகை அடிப்படையில், `பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூக மக்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு கொடுக்கலாம்’ என்ற அடிப்படையில்தானே சட்டமே இயற்றப்பட்டது?’’

“மக்கள்தொகை கணக்கெடுப்பே நடைபெறாத சூழலில், எதன் அடிப்படையில் வன்னியர் சமூக மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகச் சொல்கிறீர்கள்? 2021 தேர்தலில், வன்னிய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அன்றைய அ.தி.மு.க அரசும் கூட்டணியில் இருந்த பா.ம.க-வும் திட்டமிட்டு உருவாக்கியதுதான் இந்த உள் இட ஒதுக்கீடு நாடகம். ‘சட்டப்படி இது செல்லாது; நீதிமன்றத்தில் நிலைக்காது’ என்பது இவர்களுக்குமே தெரியும். ஆனால், சுயநல அரசியலுக்காக அப்பாவி வன்னிய மக்களின் மனதில், உள் இட ஒதுக்கீடு ஆசையை வளர்த்துவிட்டு ஏமாற்றியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். அன்றைய ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க-வும் பா.ம.க-வின் சூழ்ச்சிக்குத் துணையாக நின்று, வன்னிய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.’’
“பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்தபோது, மத்திய அரசுக்கு எதிராக நீங்கள் வழக்கு எதுவும் தொடுக்கவில்லையே?’’

“பொருளாதாரரீதியாக 10% இட ஒதுக்கீடு கொடுப்பதென்பது, ஜனநாயக அமைப்புக்கே எதிரானது என்று சொல்லி அப்போதே நான் கடுமையாகக் கண்டித்திருக்கிறேன். சட்டமன்றத்திலேயே என் எதிர்ப்பைப் பதிவும் செய்திருக்கிறேன். ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்ற பெயரில் சின்னதொரு அமைப்பை நடத்திவருபவன்தான் நான். நாங்கள் பெரிய அரசியல் கட்சி கிடையாது. என் சக்திக்கு உட்பட்டு, என் மொழிக்காகவும் மக்களுக்காகவும் நான் குரல் கொடுத்துவருகிறேன். இந்த வழக்கில்கூட என் சொந்தப் பணம் ஆறேழு லட்சம் ரூபாயைச் செலவழித்துத்தான் வாதாடிவந்தேன். சினிமா, நாடகம், கச்சேரி என்று ஆங்காங்கே பாட்டுப் பாடி நடித்துச் சம்பாதிக்கும் தொகையில்தான் இது போன்ற பொதுக்காரியங்களுக்கும் நான் செலவு செய்துவருகிறேன். இந்த நிலையில், என்னைவிடவும் பெரிய அரசியல் கட்சிகள், பொருளாதாரநிலையில் வலுவாக உள்ளவர்கள்தான் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்த வேண்டும்.’’

“ `இந்த விவகாரத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது’ என்ற உங்கள் கோரிக்கையை மீறி தி.மு.க தலைமையிலான தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றதே…’’

“எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், வெறுமனே அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த வழக்கைத் தமிழக அரசு, உச்ச நீதிமன்றக்கு எடுத்துச் சென்றதால்தான் இப்போது தமிழக அரசுக்குக் கெட்ட பெயர் கிடைத்திருக்கிறது!’’

“அந்த அதிருப்தியில்தான், அண்மையில் முதல்வரைச் சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் குழுவில் நீங்கள் இடம்பெறவில்லையா?’’

“அப்படியில்லை… அன்றைய தினம் எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால்தான் நான் முதல்வரைச் சந்திக்கச் செல்லவில்லை. மற்றபடி முதல்வருக்கு என்மீது எப்போதுமே தனிப்பட்ட அன்பும் அக்கறையும் உண்டு. நானும் அவரை மிகவும் மதிக்கிறேன். விரைவில் நானே அவரிடம் தேதி கேட்டுச் சந்திக்கவிருக்கிறேன்.’’

“நடிகர், உதவி இயக்குநர் என சினிமாவில் தீவிர கவனம் செலுத்துகிறீர்களே… அரசியலைவிட்டு விலகிவிட்டீர்களா?’’

“அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது. அரசியல் என்றாலே புலிவாலைப் பிடித்த கதைதான். வாலைப் பிடிப்பதை விட்டுவிட்டால், புலி கடித்துவிடும். ஆனால், ஐயப்பன் மாதிரி புலி மேல் அமர்ந்து சவாரி செய்யும் ஆசை இருக்கிறது. அதற்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும். என்னுடைய குடும்பத்தை வாழவைப்பதற்கு எனக்குப் பணம் தேவையாகயிருக்கிறது. எனவே, வருமானத்துக்காக எனக்குத் தெரிந்த நடிப்புத் தொழிலில் இப்போது முழுமையாக ஈடுபட்டுவருகிறேன். மக்கள் பணியும் நடிப்புத் தொழிலும் எனது இரு கண்கள்!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE