‘சந்திரமுகி 2’ ஹாலிடே ஸ்நாக்ஸ் – விமர்சனம்
17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து தமிழகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்ட ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்து வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.
இரண்டாம் பாகம் கதை…
கூட்டுக்குடும்பமான ராதிகாவின் குடும்பத்தில் தொடர்ந்து துர் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதற்கான காரணம்புரியாமல் தவிக்கும் ராதிகா, சாமியார் ஒருவரை வரவழைத்து கேட்கிறார். குல தெய்வ வழிபாடு நடத்தாததே குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம் என்று சொல்லும் சாமியார், குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு சென்று பூஜை நடத்தினால் பிரச்சனைகள் பனிபோல் விலகும் என்கிறார்.
எனவே அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. ராதிகாவின் இரண்டு பேர பிள்ளைகளுக்கு கார்டியனாக இருக்கும் ராகவ லாரன்சும் அவர்களுடன் இணைந்துகொள்கிறார். குல தெய்வ கோயிலில் இருந்து சிறிது தூரம் தள்ளியிருக்கும் வடிவேலுவுக்கு சொந்தமான வேட்டையபுரம் அரண்மனையில் தங்கிக்கொண்டு கோயில் தூய்மை பணிக்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் கோயிலை சுத்தம் செய்யும் அதே நேரத்தில் வேட்டையபுரம் அரண்மனையில் இருக்கும் சந்திரமுகியின் ஆவி ராதிகாவின் மகள் லஷ்மிமேனன் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. அதே சமயம் ராகவாலாரன்ஸ் உடம்புக்குள் வேட்டையனின் ஆவி புகுந்துவிடுகிறது. இப்போது சந்திரமுகிக்கும் வேட்டையனுக்கும் இடையே நடக்கும் சண்டையில் யாருக்கு வெற்றி? குலதெய்வ பூஜை நடந்ததா இல்லையா? என்ற கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் கிடைக்கிறது விடை.
பாண்டியன், வேட்டையன் என இருவேறு கேரக்டர்களில் அடித்து துவம்சம் செய்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். கதைப்படி வேட்டையன் ஆவி அவருக்குள் புகுந்துகொள்வதுபோல நடிப்பில் ரஜினி ஸ்டைல் அவருக்குள் புகுந்துகொண்டு விடமாட்டேன் பார்.. என்று சவால் விட்டு க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது. ப்ளாஷ் பேக் காட்சியில் கங்கனா ரனாவத்தை கவர்ந்து வந்து அவரை அடைய துடிக்கும் நடிப்பில் லகலகலக…
இடைவேளைக்குப் பிறகே கங்கனா ரனாவத் வருகிறார். ஆனாலும் அவரது அழகும் ஆட்டமும் இளம் ரசிகர்களை உம்மா… சொல்ல வைக்கிறது. குறிப்பாக சந்திரமுகி ஆவியாக வேட்டையனை பழிவாங்க துடிக்கும் சண்டை காட்சிகளில் வடநாட்டு விஜயசாந்தியாக பின்னி பெடலெடுக்கிறார். அதேபோல் ராதிகாவின் மகளாக வரும் லஷ்மிமேனன் சந்திரமுகியாக மாறும் காட்சி யாரும் எதிர்பார்க்காதது. பெற்ற அம்மாவையே கொல்ல மலைப்பாதையில் ஜெட் வேகத்தில் காரை ஓட்டிச் செல்லும் காட்சி சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. பால்க்காரர் மகளாக லாரன்ஸுடன் காதலாகி கசிந்துருகும் மகிமாவின் அழகு ஆஹா..
முதல் பாகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் வந்தாலும் இரண்டாம் பாகத்தில் அரண்மனை ஓனராக புரமோஷன் ஆகியிருக்கிறார் வடிவேலு. ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் அவரது காமெடி சுமார் ரகமாகி ஏமாற்றுகிறது.
ஆஸ்கார் விருதுவாங்கிய மரகதமணி இசையில் ஒரு பாடல் மட்டும் கேட்கும் ரகும் மற்றவற்றில் தெலுங்கு வாசனை இருப்பதால் ஒட்டவில்லை. பின்னணியில் பயமுறுத்தி இருக்கிறார். ஒளிப்பதிவும் கலை இயக்கமும் சிறப்பாக இருக்கிறது. கிராபிக்ஸ் வேலைகளில் இன்னும் தரம் கூட்டியிருக்கலாம்.
பொழுபோக்கு அம்சம் நிறைந்த கதையை கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்து கொடுத்து விருந்து வைப்பதில் கெட்டிக்காரரான இயக்குனர் பி. வாசு இதிலும் அதை செவ்வன செய்திருக்கிறார். எனினும் முதல் பாகம் அளவுக்கு ‘சந்திரமுகி 2’வுக்கான திரைக்கதை அமைப்பதில் திணறி இருப்பதும் சிறு சிறு குறைகள் இருப்பதும் படத்துக்கு திருஷ்டி பொட்டு.
‘சந்திரமுகி 2’ ஹாலிடே ஸ்நாக்ஸ்.