‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ – விமர்சனம்
காதலுக்கு கண் மட்டுமில்லை ஆண், பெண் பேதமும் இல்லை என்பதை துணிச்சலாக முன் வைக்கும் படம்.
கவிதையான தலைப்பை கொண்டுள்ள படத்தில் சொல்லப்படும் காதல், கவிதையாக இருக்கிறதா அல்லது கருத்து மாறுதலை கொண்டிருக்கிறதா? பார்க்கலாம் விமர்சனம்…
இஸ்லாமிய பெண்ணான ஷகிராவுக்கு விடிந்தால் நிக்காஹ்.. ஆனால் ஷகிராவும் அவளது அக்காவும் ஒருவித பதட்டமும் குழப்பமும் நிறைந்து காணப்படுகின்றனர். ஏனெனில் ஷகிராவுக்கு அவரது தந்தையால் ஏற்பாடு செய்ப்பட்ட நிக்காவில் விருப்பமில்லை. ஆக ஷகிரா மனசுக்குள் இருப்பது வேறொரு காதல் இருப்பது அடுத்தடுத்த காட்சிகளில் புரிந்துபோகிறது.
ஷகிராவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனுக்கும் ஷகிராவின் காதல் புரிந்துபோக ஷகிராவை அவள் விருப்பப்பட்டவருடன் சேர்த்துவைக்க முடிவு செய்கிறார். நீ காதலிப்பது யாரை என்று கேட்கிறார் மணமகன். இப்போது ஷகிராவின் உதடு உச்சரிக்கும் பெயர் வினோ. சரி உன் காதலை நான் சேர்த்துவைக்கிறேன் என்கிறான் மணமகன். அப்போது ஷகிரா சொல்கிறார் “வினோ என்பது ஆண் அல்ல பெண்” என்று.
அந்த காட்சியில் மணமகன் எப்படி அதிர்ச்சியாகிறானோ அதே அதிர்ச்சி படம் பார்ப்பவர்களின் மனசிலும் பட்டாசை கொளுத்துகிறது. வினோ மீது ஷகிரா கொண்டிருப்பது காதலா? ஷகிராவின் கனவு நனவாகிறதா? கானல் ஆகிறதா என்பதற்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்.
தன்பாலின ஈர்ப்பையும் காதலையும் சொல்லும் இதுபோன்ற படங்கள் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை பற்ற வைத்திருந்தாலும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’சொல்லும் வாழ்க்கை கொஞ்சம் புதிதே..
ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு இணையாக ஷகிரா – வினோவுக்கான காட்சிகள் ‘ஃபையராக’ இருக்கிறது. ஷகிராவாக நிரஞ்சனாவும் வினோவாக ஸ்ருதியும் அந்தந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பது படத்தின் வணிகத்துக்கு உதவும்.
உச்ச நீதிமன்றமே தன்பாலின திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில்.. ஏன் இதுபோன்ற கதை என்று விவாதத்திற்குள் நாம் போக வேண்டியதில்லை. நடிகை நீலிமாவும் அவரது கணவர் இசையும் சேர்ந்து தயாரித்திருக்கும் இந்தப்படம் ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது. இன்னும் இதற்கான விளிப்புணர்வோ, புரிதலோ பூரணமாக வரவிலை என்பதையெல்லாம் அலசும் இப்படத்தை ஜெயராஜ் பழனிச்சாமி இயக்கியிருக்கிறார்.
நிரஞ்சனாவை ஸ்ருதி நடுக்கடலுக்கு அழைத்து செல்லும் காட்சி கவிதை. அவர்களது வாழ்வு தொடங்குமிடமும் அதுவாகதான் அமைகிறது. சின்ன சின்ன நாடகத்தனமும், செயற்கையான வசனங்களும் படத்தின் மைனஸ்.
தயாரிப்பாளர்கள் நீலிமா – இசைக்கு தயாரிப்பாளர்களாக இந்தப்படம் வாழ்வு தொடங்குமிடமாக அமையுமா என்பது ரசிகர்கள் கண்களிலேயே இருக்கிறது.