அரசியல்

புதிய கட்சி அலுவலகம் : டெல்லியில் தெம்பு காட்டும் திமுக

பர்மா பஜாரில் வரிசையாக எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் இருப்பதுபோல், தி.நகர் ரங்கநாதன் தெருவில் வரிசையாகத் துணிக்கடைகள் இருப்பதுபோல் டெல்லி `தீனதயாள் உபாத்யா மார்க்’ என்ற இடத்தில் வரிசையாக அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் இருக்கும். இந்தியாவை தற்போது ஆளும் பா.ஜ.க முதல், பல ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சிவரை தீனதயாள் உபாத்தியா மார்க்கில் தான் அலுவலகங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க-வும் தனக்கான டெல்லி அலுவலகத்தை இந்தப் பகுதியில் கட்டி முடித்து திறந்துள்ளது.
டெல்லியில் தேசிய அளவிலான கட்சிகளுக்கு மட்டுமே அலுவலகம் இருந்துவந்தது. மாநில அளவிலான கட்சிகளில் சில கட்சிகள் மட்டும் வாடகைக் கட்டடங்களில் இயங்கிவந்தன. இந்நிலையில் ஏற்கெனவே ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து ஏழு எம்.பிக்கள் உள்ள கட்சிக்கு டெல்லியில் இடம் வழங்க முடிவு செய்தது. அந்த அடிப்படையில் தீனதயாள் உபாத்தியா மார்க் பகுதியில் அரசியல் கட்சிகள் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.

இந்தவகையில்தான் 2013-ம் ஆண்டு தி.மு.க-விற்கு 1000 சதுர அடிக்கும் கூடுதலான இடம் வழங்கப்பட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக தி.மு.க சார்பில் அங்கு அலுவலகம் திறக்க முடிவெடுக்கப்பட்டது.

வெளிப்புறத்தில் நான்கு பிரமாண்ட தூண்கள், மூன்று மாடிகளுடன் மாளிகை வடிவில் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் நுழையும்போதே வாயிலின் ஒருபுறம் கலைஞர் கருணாநிதியின் மார்பளவு சிலையும், மறுபுறம் அண்ணாவின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத் தோற்றம் செட்டிநாட்டுக் கட்டட பாணியில் இருந்தாலும், உட்புறம் முழுவதும் நவீன வசதிகளோடு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
கீழ்த்தளத்தில் கட்சிக்கூட்டம் நடத்துவதற்காக, மேடையுடன் கூடிய ஒரு பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே தலைவர்கள் ஓய்வெடுக்க சிறிய அறையும் உள்ளது. வாசலிலேயே மூன்று மாடிகளுக்குச் செல்ல லிப்ட் வசதியும் உண்டு, முதல்மாடியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசுவதற்கான இடம், தலைவருக்கான பிரத்யேக அறை, பிரமிக்க வைக்கும் சோபா செட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

முதல் தளத்திலும், இரண்டாம் தளத்திலும், கான்பரன்ஸ் ரூம்கள் நவீன வசதிகளுடன் அமைக்கபட்டுள்ளன. இதுதவிர நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இரண்டு அறைகளும் கட்டப்பட்டுள்ளன. இரண்டாவது தளத்தில் சென்னை அறிவாலயத்தில் உள்ளது போலவே நூலகமும், அங்கு அமர்ந்து படிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இத்தனை வசதிகளோடு அமைந்துள்ள இந்த அலுவலகத்திற்கு “அண்ணா கலைஞர் அறிவாலயம்” என்கிற பெயரை வைத்துள்ளார்கள்.
டெல்லியில் தி.மு.க-விற்கு அலுவலகத்திற்கான இடம் ஒதுக்கியது போலவே அ.தி.மு.க-விற்கும் தீனதயாள் உபாத்யா மார்க்கில் இடம் ஒதுக்கப்பட்டது. தி.மு.க-வின் அலுவலகக் கட்டடப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அ.தி.மு.க தரப்பு கட்டடப் பணிகளை ஆரம்பித்து. மூன்றுமாடிகள் கொண்ட கட்டடப் பணிகள் அ.தி.மு.க தமிழகத்தில் ஆட்சியிலிருந்த போது வேகமாக நடந்துவந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே பணிகள் முடிந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. இதுவரை அந்த அலுவலகத்தின் கட்டடப் பணிகள் முழுமையடையாமல் இருப்பதால், ஓர் ஆண்டாக அ.தி.மு.க அலுவலகத்தின் திறப்பு விழா குறித்து எந்தத் தகவலும் இல்லை.

பா.ஜ.க-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கப்போவது யார், அகில இந்திய அளவில் ஸ்டாலின் ஒருங்கிணைக்கும் சமூகநீதிக் கூட்டமைப்பு என்று தி.மு.க தேசிய அரசியலில் தன் அடையாளத்தை ஆழப்பதிக்க நினைக்கும் நிலையில் டெல்லியிலேயே இன்னோர் அறிவாலயம் அமைக்கப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE