“ என் வேலையை செய்ததில் என்ன தவறு? “ : சித்தார்த் ஆதங்கம்
பெண் குழந்தைகள் பாலியல் வன் கொடுமை; நம்மை சுற்றி தெரிந்தும் தெரியாமலும் நடந்துகொண்டிருக்கும் பயங்கரம் பற்றியும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுபோன ஒரு படைப்பை ‘சித்தா’ படமாக தயாரித்து நடித்திருந்தார் நடிகர் சித்தார்த்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை சித்தார்த் பெங்களூரில் நடத்தியபோது இந்நிகழ்ச்சி நடந்த அரங்கில் நுழைந்த சிலர், சித்தார்த்தைப் பேசவிடாமல் தடுத்து, “காவிரி நீர் தமிழகத்திற்குச் செல்கிறது. இதைக் கண்டித்து நாங்கள் இங்கு போராடுகிறோம். ஆனால், நீங்கள் இங்குத் தமிழ்ப் படத்தை புரொமோஷன் செய்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்…” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு நிகழ்ச்சியை நடக்கவிடாமல் இடைநிறுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் இது குறித்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
கன்னட நடிகர்களான பிரகாஷ் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் சித்தார்த்திற்கு நடந்த சம்பவத்திற்கு கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பும் கேட்டு வருத்தம் தெரிவித்திருந்தனர். மேலும், அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்காமல், மக்களுக்கும், கலைஞர்களுக்கும் தொந்தரவு கொடுப்பது தவறான செயல் என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ‘சித்தா’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சித்தார்த், “கடந்த செப்டம்பர் 28ம் தேதி காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் எந்த பந்த்தும் நடக்கவில்லை. அன்றைக்குத்தான் நான் அங்கு சென்று பேசினேன். அதுவும் தனியாக ஒரு ஹோட்டலை புக் செய்து அங்குதான் தனிப்பட்ட முறையில் ‘சித்தா’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியை நடத்தினோம். போராட்டம் நடக்கும் வேளையில் என்னுடைய சுய நலத்திற்காக நான், கர்நாடகாவிற்குச் சென்று பேசவில்லை. அடுத்த நாள்தான் பந்த். பந்த் இல்லாத நாளில் தான் நான் அங்கு சென்று பேசினேன்.
நாங்கள் ‘சித்தா’ என்ற நல்ல படத்தை எடுத்திருக்கிறோம். அங்கு நடந்த பிரச்னைகள் குறித்துப் பேசினால் எல்லோர் கவனமும் சிதறிவிடும். அதனால்தான் இதுகுறித்து நான் பேசாமல் தவிர்த்தேன். நடந்த பிரச்னைக்காக அந்தப் பிரச்னையில் சம்பந்தப்படாத நடிகர் பிரகாஷ் ராஜ், சிவராஜ் குமார் சார் எல்லாம் எனக்காக வருத்தப்பட்டு பேசி மன்னிப்புக் கேட்டது பெரிய விஷயம். அவர்களுக்கு நன்றி.
காவிரி பிரச்னையில் இருக்கும் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது. அது குறித்து நான் பேசியதே இல்லை. நான் பணம் செலவு செய்து தயாரித்த என் படத்தை புரோமோட் செய்தவதற்காக அங்கு சென்றேன். அன்றைக்கு என்ன பிரச்னை என்ன போராட்டம் நடக்குது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என் வேலையை நான் செய்தேன் இதில் என்ன தவறு இருக்கிறது. அந்தப் பிரச்னையை என் படத்தின் புரொமோஷனுக்காக நான் பயன்படுத்த விரும்பவில்லை.
இதுபோல் இனி எந்தத் தயாரிப்பாளருக்கும், கலைஞர்களுக்கும் நடக்கக் கூடாது. இது குறித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பேசவில்லை. அவர்கள் இது குறித்துப் பேசியிருக்க வேண்டும், பேச வேண்டும்” என்று பேசியுள்ளார்.