‘இறுகப்பற்று’ திரை விமர்சனம்
திரைக்கதைகளில் ஆறுபோல் ஓடும் வன்முறை; மனதில் மிச்சமீதி ஒட்டியிருக்கும் ஈரத்தை உறிந்து குடிக்கும் வன்மம்; நல்லவர்களே இல்லையோ என்று பதற வைக்கும் சைக்கோ கில்லர்கள் என தமிழ் சினிமா தொடர்ந்து கொட்டி வரும் குப்பைகளுக்கிடையே அவ்வப்போது மெலிதாக நம் கைகள் பற்றி மனது தொடும் படங்கள் ஆபூர்வம். அந்தப்பட்டியலில் இறுக்கமாகவே தனது இருப்பை பதிவு செய்யும் ஆகச்சிறந்த படம் ‘இறுகப்பற்று’.
நடுத்தர வர்க்கத்து கணவன், மனைவிக்கு இடையே விழும் விரிசல்; காதல் மனம் புரிந்துகொண்டு புரிதலற்ற வாழ்வை தொடங்கி அதில் சிக்கல் ஏற்படுத்திக்கொள்ளும் புதுமணத் தம்பதி. இந்த இரு குடும்பத்தின் உறவு சிக்கலை எளிதாக அனுகி அவர்களுக்கான தீர்வைச் சொல்லும் மனதத்துவ நிபுணருக்கு பிரச்சனைகள் இல்லாத வாழ்வே பிரச்சனையாகும் சூழல் என இல்லறத்தை நல்லறமாக மாற்ற தீர்க்கமான தீர்வை சொல்லுவதே ‘இறுகப்பற்று’ கதை.
உடல் பருமன் ஆகும் மனைவியை விவாகரத்து செய்ய துடிக்கும் கணவனாக விதார்த். உண்மையாகவே உடல் எடையை கூட்டி கதாபாத்திரத்திற்காகவே கஷ்டப்பட்டதுடன் கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்காக ‘ஏங்க உங்க கால்லகூட விழுறேன்.. டைவர்ஸ் வேணாங்க..” என்று அடுத்தடுத்த நிடங்களில் கலங்கவும் சிரிக்கவும் வைக்கும் அபர்ணதி. ஊருக்கெல்லாம் உறவு சிக்கலை தீர்க்கும் கடவுளாக இருக்கும் மனைவி, தன்னிடம் செலுத்தியதெல்லாம் செயற்கை அன்பு என்று தெரிந்து உடைந்து உருகும் விக்ரம் பிரபு. தங்கள் தரப்பை மட்டுமே நியாயமாக நினைத்து பரஸ்பரம் மன ரீதியான தண்டனைக்கு ஆளாகி உணர்வு குவியலை கொட்டும் ஸ்ரீ – சானியா.
இப்படி படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் படம் பார்ப்பவர்களின் கைகளை இறுகப்பற்றி வாழ்வின் அர்த்தத்தை கடத்தும்போது அவர்களது நடிப்பை மணக்க மணக்க வாழ்த்தி பாராட்டத் தோன்றுகிறது.
சன்னமான ஒலிகளை பயன்படுத்தி கேரக்டர்களின் வாழ்வோடு ஒன்றவைக்கும் ஜஸ்டின்பிரபாகரின் பின்னணி இசையில் அத்தனை லாவகம். ‘மாயா மாயா’ பாடல் ரசனை. பாடல் வரிகளில் தத்துவம் தெரிந்த வித்தைக்காரராக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவை பார்க்க முடிகிறது.
எதிர்வீட்டில், பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவத்தை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு உணர்வை கண்களுக்கு கடத்துவதில் கெட்டிக்காரராக இருக்கும் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு அழகோவியம். மூன்றுவித வாழ்க்கையை மாற்றி மாற்றி காட்டுவதென்பது படத்தொகுப்பாளருக்கு கத்தி மேல் நடக்கும் காரியம். அதை திறம்பட செய்திருக்கிறார் எடிட்டர். அவருக்கு வாழ்த்துகள்!
உறவு சிக்கல், மனச்சிக்கல், புரிதல் இல்லாத மண வாழ்வு இவற்றை திரைக்கதையாக்கி வசனம் எழுதுவது அத்தனை எளிதல்ல. கொஞ்சம் பிசகினாலும் முற்றிலும் நாடகமாகிவிடும். அப்படியான சிக்கலான திரைமொழியை திறமையாக கையாண்டு போரடிக்காமல் ரசிக்கவைக்கும் யுவராஜ் தயாளனை இனி பொறுப்பு மிகுந்த இயக்குனராக தமிழ் சினிமா புரிந்துகொள்ளும். இதனை தயாரிக்க முன்வந்த எஸ்.ஆர்.பிரபுவுக்கு பாராட்டு பூங்கொத்து!
சிறு சிறு குறைகள் இருப்பினும் படம் பார்க்கும் தம்பதிகளின் மனதின் வேர் தொட்டு அவர்களின் வாழ்வில் புதிய அத்யாயத்தை துளிர்க்கவைக்கும் இந்த ‘இறுகப்பற்று’ அவசியமான படம்.