திரை விமர்சனம்

‘ரத்தம்‘ – விமர்சனம்

சென்னை… வானம் பத்திரிகை :

வழக்கமான பரபரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழையும் இளைஞன், “செழியனை பார்க்கணும்” என்கிறான். உள்ளிருந்து ரிஷப்ஷன் வருகிறார் செழியன்..

செழியன் : உங்களுக்கு என்ன வேணும்?

இளைஞன் : நீதான் செழியனா?

செழியன் : ஆமா?

இளைஞன் : அப்ப சாவுடா…. என்றபடி

அடுத்த நொடி மறைத்து வைத்த கத்தியால் சதக்.. சதக்..

அவ்வளவுதான் ரத்த வெள்ளத்தில் செத்து சாய்கிறார் செழியன்.

அந்த செழியன் வானம் பத்திரிகையின் ஆசிரியர்.

கட் பண்ணினால் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி..

பிரபல புலனாய்வு பத்திரிகையாளராக இருந்து பின்னர் அந்த பணியிலிருந்து விலகி குவாட்டர் அடிச்சுட்டு குப்புற விழுந்துகொள்ளும் விஜய் ஆண்டனியை செழியனின் கொலை  சென்னைக்கு அழைத்து வருகிறது. செழியன் கொலையான பின்னணி என்ன என்பதை அறிய முற்படும் விஜய் ஆண்டனிக்கு அதே பாணியில் தொடர் கொலைகள் நடப்பது தெரியவருகிறது. அதற்கான காரணம்? செய்வது யார்? என்ற தேடுதல் வேட்டையும் சந்திக்கும் சவால்களுமே ‘ரத்தம்’  கதை.

நெகட்டிவ் டைட்டில், க்ரைம் த்ரில்லர் என்றால் விஜய் ஆண்டனிக்கு பீச் சுண்டல் டேஸ்ட் மாதிரி. அதே டெம்பிளேட்டில் மறுபடியும் தன்னை நுழைத்துக்கொண்டு ஸ்கோர் செய்ய பார்த்திருக்கிறார். ஆனால் சுண்டல்தான் சூடா இல்ல.

‘கொலை’ படத்தை தொடர்ந்து அதே ஸ்டைல். அதே சைலண்ட்.. சன்னமான வாய்ஸ் மாடுலேஷன் என ஒரே மாதிரியான ரியாக்‌ஷன் என்பதால் பவுண்டரியில் கேட்ச் செய்யப்பட்டு ஃபெவிலியன் திரும்புவதுபோன்ற ஏமாற்றம்.

கண்டிப்பான பத்திரிகை எடிட்டர் கேரக்டரில் நந்திதா கச்சிதம். ஆனால் அந்த பத்திரிகை ஆபீஸ் மாதிரி இருந்தால் எந்த ரிப்போர்ட்டராக இருந்தாலும் அடுத்தடுத்த பத்திரிகைகளுக்கு அதிக சம்பளமாக இருந்தாலும் தாவ மாட்டான். அவ்வளவு அழகா இருக்கிறது வானம் பத்திரிகை ஆபீஸ். ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல என்பதே நிதர்சனம்.

இந்தக் கிளியும் நான்வெஜ் சாப்பிடுமா என்பது போன்ற ஒரு கேரக்டரில் அசத்தி இருக்கும் மகிமா நம்பியார் சபாஷ்! கெரியரை கெட்டியா பிடிச்சுக்க இது ஒரு வாய்ப்பு. அப்படியென்ன சஸ்பென்ஸ் என்பவர்கள்.. அதற்காகவே படம் பார்க்கலாம். அப்புறம் ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன்னு சில கேரக்டர்கள் சொன்னதை நிரப்பி இருப்பது சிறப்பு.

போலீஸ் கமிஷனர் ஆபீஸிலிருந்து விஜய் ஆண்டனி  குதிரையில் தப்பிப்பது போன்ற ஒரு காட்சி.. நாலா பக்கமும் போலீல் சுத்துப்போட்டு டுமில் டுமில்னு சுடுது.. ஆனா விஜய் ஆண்டனிக்கோ அந்த குதிரைக்கோ ஒரு புல்லட்கூட துளைக்காமல் தடுப்பை தூள் தூளாக்கி தப்பிக்கிறார் ஹீரோ. தெலுங்கு பாலகிருஷ்ணாவிடம் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் விஜய் ஆண்டனிக்கு கற்றுக்கொடுத்து வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் சி.எஸ். அமுதன்.

‘தமிழ் படத்தில்’ பகடி செய்து ரசிக்க வைத்த சி.எஸ்.அமுதன் வேற ரூட் எடுத்தது தப்பில்ல.. ஆனா எந்த கதை பண்ணினாலும் சேதாரமற்ற திரைக்கதை பண்ணியிருந்தால் 50 மார்க்காவது தாண்டியிருக்கலாம். இது சற்றே விஷப்பரிட்சையானதால் ஆல்பாஸ் அவ்வளவே.

‘ரத்தம்’ லோ பிரஷ்ஷர்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE