சினிமா செய்திகள்

திரைக்கதை – வசனம் விஜய்சேதுபதி ஹீரோ விமல் : ரசிகனை கவருமா புது காம்பினேஷன்?

“சினிமாவில் வாய்ப்பிருந்தால் முடிந்தவரை மெசேஜ் சொல்லலாம். அதற்காக வலிந்து மெசேஜ் கொடுக்கிறேன்னு ஒரு நல்ல கலை வடிவத்தைக் கெடுக்கவும் கூடாது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க வருபவர்கள், பொழுதைக் கழிக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் சில நிதர்சனங்களை யதார்த்தமாகச் சொல்லணும். ‘குலசாமி’ அப்படியான திரைப்படம். நல்ல கதைகளும் புது விஷயங்களும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்கிறதுதான் எங்களை மாதிரியானவர்களுக்கு மூலதனம்” இயல்பாகப் பேசுகிறார், இயக்குநர் சரவண சக்தி.

“தாடி மீசையோடு விமல் முரட்டுத்தனமாக இருக்காரே…”

“ ‘குலசாமி’ கிராமப்புறத்தின் ஆக்‌ஷன் படம். தான் ஆசையாக வளர்த்த தங்கையை ஊரே சேர்ந்து படிக்க வைக்கும்போது அங்கே ஒரு பேராசிரியை அவர்களைத் தவறாக வழிநடத்தினால் எப்படியிருக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படி ஒரு பேராசிரியை மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதைக் கேள்விப்பட்டிருப்பீர்களே! அதை முன்னிலைப்படுத்திதான் கதை. அந்த இக்கட்டிலிருந்து தங்கையையும் மற்றவர்களையும் எப்படி ஹீரோ காப்பாற்றுகிறான், அந்தக் குற்றத்தை எப்படி முறியடிக்கிறான்னு கதை பயணப்படும். பெயர்தான் ‘களவாணி’ ஆனால் அந்தப் படத்தில் விமல் அப்படியே தனியா துண்டாகத் தெரிவார். அந்தப் படம் சிக்கின மாதிரி இப்ப வரைக்கும் இன்னும் வகையாக அவருக்குப் படம் சிக்கலைன்னு எனக்கு ஆதங்கம். இந்த உண்மைச் சம்பவத்தை ஒட்டி கதையை யோசிச்சதும் நான் நினைச்சது விமலைத்தான். ஒரு ஆட்டோ டிரைவராக இருந்துகொண்டு, இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறவராக விமல் வருகிறார்.”

“ஆனால் எந்த விளையாட்டுக்கும் சீக்கிரம் சரி சொல்ல மாட்டாரே விஜய் சேதுபதி… அவரை எப்படி திரைக்கதை – வசனம் எழுத வச்சீங்க?”

“விஜய் சேதுபதி அண்ணன் மிகச்சிறந்த பர்ஃபாமர். உலகத்திற்கே தெரியும். ஆனால் அவரே அற்புதமான எழுத்தாளர். அவர் பேச்சுகளை நோட் பண்ணிட்டு வந்தால் அதில் அவ்வளவு கருத்தும், உணர்ச்சியும் உத்வேகமும் வரும். ‘மாமனிதன்’ படத்தில் நடிச்சுட்டிருக்கும்போது அவர்கிட்டே இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. சினிமாவாக வந்தால் ரொம்ப நல்லாருக்கும்னு சொன்னார். அவர் ஏற்கெனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் வசனம் எழுதியிருக்கார். நீங்கதான் இதற்குத் திரைக்கதை வசனம் எழுதித் தரணும்னு கேட்டேன். ‘ஆசை இருக்கு. நேரமில்லையே சக்தி’ன்னு சொல்லிட்டார். அப்புறம் கொரோனா வந்து நம்மளை வீட்டில் உட்கார வெச்சதே, அப்ப போய் அவர் ஆபீஸில் பார்த்தேன். அவரால் மறுப்பு சொல்ல முடியவில்லை. அழகா உட்கார்ந்து எழுதிக் கொடுத்தார். சினிமா இப்ப வேடிக்கை சிரிப்புன்னு போய்க்கிட்டு இருக்கும்போது அந்த வகையில் சேராமல் வேறுவிதமாய் இருக்கும். சேதுபதி அண்ணனோட எழுத்து பேசப்படும்.”

“போலீஸ் அதிகாரியா ஜாங்கிட் வேற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் போல…”

“பெண்களின் பிரச்னை பத்திப் பேசுற படத்தில் அவர் பங்கும் இருந்தால் நல்லாருக்கும்னு நினைச்சேன். முக்கியமான ரோல். அவர்தான் க்ளைமாக்ஸை முடித்து வைக்கணும். ஒரு நேர்மையான ஆபீஸர் இருந்து நிஜமாகவே அவங்களாகவே வந்து நடித்துக் கொடுத்தால் நல்லாருக்கும்னு பார்த்தேன்‌. அவரைப் போய்ப் பார்த்துக் கதையைச் சொன்னேன். அதில் அவருக்கு இருக்கிற ரோலைப் பத்திச் சொல்லிட்டு அதன் முக்கியத்துவத்தையும் சொன்னேன். எதிர்பார்க்காமல் சட்டுனு சரின்னு சொல்லிட்டார். சந்தோஷம் தாங்க முடியலை. க்ளைமாக்ஸில் அவர் அதிரடியும் பிரமாதமா வந்திருக்கு. இவ்வளவு தூரம் அவர் நடிப்பார்னு நீங்க எதிர்பார்த்திருக்க முடியாது. யாருக்குள்ளே என்ன திறமை ஒளிஞ்சிட்டு இருக்குன்னு அவ்வளவு லேசில் கண்டுபிடிக்க முடியாது போல.

தான்யா ஹோப் வர்றாங்க. படத்துல ஜோடியெல்லாம் இல்லை. பரபரக்கிற கதையில் பெரிசா காதலுக்கெல்லாம் வேலை இல்லை. ‘வைடு ஆங்கிள்’ ரவிசங்கர் ஒளிப்பதிவு. ‘ஆவி பறக்கும் டீக்கடை’ன்னு பாடினார்ல மகாலிங்கம், அவரைத்தான் இசையமைக்க வச்சிருக்கேன். மகாலிங்கத்திடம் இசை புதுசா இருக்கு. ரொம்பவும் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு படத்தை எடுத்திருக்கேன்னு சந்தோஷமா இருக்கு.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE