ஆகாயத்தில் பறக்கிறேன் ஆனந்தத்தில் மிதக்கிறேன் – – நரேன் ‘விக்ரம்’ அனுபவம்
கைதி’க்குப் பின் மீண்டும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறார் நரேன். மலையாள இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் ஹீரோவாக ‘குரல்’ என்ற படத்தில் நடித்துள்ள நரேனிடம் பேசினேன்.
“நீங்களும் லோகேஷும் கமலின் தீவிர ரசிகர்கள்… ரெண்டு பேருமே இப்ப கமலின் ‘விக்ரம்’ படத்துல இருக்கீங்க… யூனிட்டே கலகலன்னு இருக்குமே?’’
‘`என்னோட இன்ஸ்பிரேஷன் கமல் சார்தான். நான் சினிமாவுக்கு வந்ததுக்குக் காரணமே அவர்தான். நான் பத்தாவது வரை துபாய்லதான் படிச்சேன். என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாருமே அமிதாப்பச்சன், கமல் சார் படங்கள் பார்ப்பாங்க. அதனால எனக்கும் இந்தி, தமிழ்ப் படங்கள் அறிமுகமாச்சு. அதில் கமல் சார் படங்கள் வரிசையா என்னைக் கவர்ந்துச்சு. நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. சென்னை வந்த பிறகு இன்ஸ்டிட்யூட்ல படிக்கறப்ப, கமல் சார் ஆபீஸுக்கு எதிரே உள்ள அப்பார்ட்மென்ட்ல தங்கினேன். நான் நடிக்க வந்த பிறகும் ரெண்டு மூணு தடவை கமல் சாரைச் சந்திச்சுப் பேசியிருக்கேன். என்னோட திருமண வரவேற்புக்கும் அவர் வந்திருந்து எங்கள ஆச்சரியப்படுத்தினார். வரவேற்பின் போது கமல் சார்கிட்ட எங்கப்பா, ‘என் பையனோட ஹீரோ நீங்கதான்’னு சொன்னார். அதைக் கேட்ட கமல் சார், ‘எல்லாக் குழந்தைக்கும் முதல் ஹீரோ அவங்க அப்பாதான்’னு சொல்லவும், எங்க அப்பாவுக்கு அவ்ளோ சந்தோஷம்.
முதன்முறையா இப்பத்தான் கமல் சாரோடு நடிக்கறேன். போன வருஷம் அவரோட பிறந்தநாளின் போது ‘விக்ரம்’ன் டீசர் ஒண்ணு வெளியாகியிருந்தது. அப்ப ‘குரல்’ படப்பிடிப்புக்காக துபாய்ல இருந்தேன். அங்கிருந்து லோகேஷ்கிட்டபோன் செய்து ‘அமேஸிங் டீஸர்’னு சொன்னேன். உடனே அவர் ‘நீங்களும் இந்தப் படத்துல இருக்கீங்க’ன்னார். வானத்துல பறக்க ஆரம்பிச்சிட்டேன். அதன் பிறகு கமல் சாரோட நானும் சேர்ந்து இருக்கற போட்டோ ட்விட்டர்ல வந்ததைப் பார்த்துட்டு என் நட்பு வட்டமும் சந்தோஷப்பட்டுச்சு.
நானே கமல் சார் ரசிகன். என்னைவிட பெரிய கமல் ரசிகர் லோகேஷ். அவர் ஒவ்வொரு ஷாட்டையும் ரசிச்சு ரசிச்சு எடுத்திருக்கார். விஜய்சேதுபதி, பகத்னு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கு. ஒரு பெரிய ட்ரீட் காத்திருக்கு.’’
“ ‘குரல்’ல நீங்க உடல் எடை அதிகரிச்சு வேற லுக்ல இருக்கீங்களே..?’’
‘`ஆமாங்க. ‘விக்ரம்’க்கு முன்னாடியே அதுல நடிச்சு முடிச்சிட்டேன். ஆட்டிசத்தால பாதிக்கப்பட்ட இளைஞனா நடிக்கிறேன். இதுக்காக பத்துக் கிலோ உடல் எடை கூட்டி நடிச்சிருக்கேன். பாலசரவணன் பெரிய ரோல் பண்ணியிருக்கார். ‘தில்லுக்கு துட்டு 2’ ஷிர்தா ஷிவதாஸ் நடிச்சிருக்காங்க. எனக்கும் பிலிப்பினோ மொழி பேசும் ஒரு பேய்க்கும் இடையே நடக்கற விஷயங்கள்தான் படம். மலையாளத்தில் ‘ஆர்டினரி’ (தமிழில் ‘ஜன்னலோரம்’) என்ற படத்தை இயக்கிய சுஜீத் இயக்கியிருக்கார். படத்துல நிறைய ஆங்கில டயலாக்குகள் வர்றதாலேயும், எல்லாரும் பாக்கணும் என்பதாலேயும் ‘குரல்’ படத்தை ஓ.டி.டி-யில் கொண்டு வர ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க.’’
“என்ன சொல்றார் உங்க குரு ராஜீவ்மேனன்?’’
‘`அவர்கிட்ட உதவியாளரா இருக்கும்போதே, எனக்கு நடிப்புலதான் ஆர்வம் அதிகம்னு சாருக்கும் தெரியும். என்னோட முதல் படம் ‘ஃபார் த பீப்பிள்’ பார்த்துட்டு, ரொம்பவே பாராட்டினார். அதைப்போல ‘கைதி’யைப் பார்த்துட்டு எனக்கு ஒரு கடிதமும், கேக்கும் அனுப்பி வாழ்த்தினார். அவர்கிட்ட இருந்த போது மூணு முறை வேலையை விட்டு நடிக்க வாய்ப்புத் தேடிப் போயிருக்கேன். முயற்சி கை கொடுக்காத மூணு முறையும் மறுபடியும் அவர்கிட்டேயே ஒர்க் பண்ணப் போயிருக்கேன்.’’
“மலையாளத்துல நிறைய படங்கள் பண்றீங்க… அங்கேயும் இங்கேயும் என்ன வித்தியாசம்?’’
“அங்கே ஒரு ஆர்ட்டிஸ்ட்னா, அவரை நடிகரா பார்ப்பாங்க. என் முதல் படம் ‘ஃபார் த பீப்பிள்’ல நான் ரொம்ப சீரீயஸான போலீஸ் ஆபீசர். ஆனா, அடுத்த படம் ஹீரோவா ஒரு காமெடி கேரக்டர் பண்ணினேன். ஆனா ‘சித்திரம் பேசுதடி’க்கு அப்புறம் ஒரு ஹியூமர் கேரக்டர் இதுவரைக்கும் நான் பண்ணல. ‘இவருக்கு இதான் செட் ஆகும்’னு இங்கே இமேஜ் பார்க்குறாங்க. சில படங்களைப் பார்க்கும்போது இப்படி ஒரு கேரக்டர் கிடைக்கலையேன்னு தோணியிருக்கு. ‘விக்ரமு’க்கு அடுத்து நட்டி சார், கதிர்னு சிலரோட ‘யூகி’ன்னு ஒரு த்ரில்லர் பண்ணி முடிச்சிட்டேன். இதுக்கடுத்து ரெண்டு படங்கள் கமிட் ஆகியிருக்கேன். அதுல ஒண்ணு போலீஸ் ஸ்டோரி.”