‘கூழாங்கல்’ திரை விமர்சனம்
உயிரை குடிக்கும் தீவிர தாகத்தை.. இரைப்பையை தின்று தீர்க்கும் அகோர பசியை.. அனுபவித்திருக்கிறீர்களா? பாதத்தை பொசுக்கும் தீ பாதையில் கால் கடுக்க நடந்திருக்கிறீர்களா ? உடம்பே சூரியனாக தகிக்கும் உக்கிர அனுபவம் உண்டா?..
இந்த கேள்விகளுக்கு ‘இல்லை’ என்பவர்கள் ‘கூழாங்கல்லை’ பார்க்கும்போது நிஜத்துக்கு நெருக்கமாக நின்று அதனை பார்க்கலாம். ‘ம்..’ என்பவர்கள் இன்னொருமுறை அதனை அனுபவிக்கலாம்.
அப்படியொரு அப்பட்டமான வாழ்வை, வலியை கடத்தும் சினிமாத்தனமற்ற, கலப்படமற்ற கலைப்படைப்பாக வெளிவந்திருக்கிறது ‘கூழாங்கல்’. கதை – திரைக்கதை – இயக்கம் : பி.எஸ்.வினோத்ராஜ்.
நயன்தாரா – விக்னேஷ்சிவன் தயாரிப்பில் உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை அள்ளி வந்த ‘கூழாங்கல்’ இப்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
வறட்சி மட்டுமே செழித்துக்கிடக்கும் கிராமம். கோபித்துக்கொண்டு போன மனைவியை வீட்டுக்கு அழைத்துவர பள்ளியில் படிக்கும் மகனுடன் மனைவி ஊருக்கு போகும் குடிவெறி கொண்ட கணவன். போன இடத்திலும் திரும்பி வரும் வழியிலும் நடக்கும் சம்பவங்கள், சந்திக்கும் மனிதர்கள், அவரவர் வாழ்வியல் என உணர்வுகளை குலைத்து குலைத்து பாசாங்கற்ற திரைமொழியில் பாதிக்க வைக்கும் படைப்பாக பாராட்ட வைக்கிறது இந்தக் ‘கூழாங்கல்’.
உடம்பு முழுக்க சாராயமும் ஆணாதிக்க வெறியும் ஊறிப்போன செயல்பாடுகளில் முகபாவனைகளில் கணபதி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கருத்தடையான் ஆகச்சிறந்த தேர்வு. தனது இயலாமையை பிஞ்சு மகனிடம் காட்டுவது. பீடியை பற்றவைத்து எரிச்சலை உமிழ்வது, மனைவியின் உறவுகளிடம் காட்டுமிராண்டித்தனம் காட்டுவது என இயல்பு இழையோடும் நடிப்பில் பாராட்ட வைக்கிறார்.
கருத்தடையானின் மகன் செல்லபாண்டியாக வரும் சிறுவனும் அற்புதம். நிஜமாகவே ஒரு குடிகார தந்தையை எதிர்கொள்ள திராணியற்ற மகனின் உணர்வும் உடல் மொழியும் எப்படி இருக்கவேண்டுமென்ற தத்ரூபம்.. செல்லபாண்டியின் நடிப்பை தேசிய விருத்துக்கு சிபாரிசு செய்கிறது.
தன்னிடம் அப்பா கொடுத்து வைத்த ரூபாய் நோட்டுக்களை கிழித்தெரிவது, தீப்பெட்டியை வைத்துக்கொண்டே இல்லையென்று ஏமாற்றுவது; உடைந்த கண்ணாடியின் ஒளி கீற்றை மேல் சட்டை இல்லாத கருத்தடையானின் உடம்பில் ஊடுருவச்செய்து பழி தீர்த்துக்கொள்வது போன்ற காட்சிகள் ஆஹா..
மெளனத்தை அதிகம் பயண்படுத்தி கதை போக்கின் கவனம் கலைக்காத யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அபாரம். அதேபோல் சிறப்பு சப்தங்களில் ஹரி பிரசாத்தின் பங்கு பாராட்டுக்குரியது. வெக்கை காட்டில் நாமே நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விக்னேஷ் குமுலை, ஜெயா பாரதியின் ஒளிப்பதிவு படத்தின் உயிர்நாடி.
உயிரற்று இருக்கும் குடிநீர் குழாயை சுற்றி காத்திருக்கும் காலி குடங்கள், செல்லபாண்டி சேர்த்துவைத்த கூழாங்கற்கள், பொட்டல் காட்டில் ஊறிவரும் தண்ணீரை மில்லி கணக்கில் சேர்க்கும் பெண்கள் என பல காட்சிகளில் இயக்குனர் உணர்த்தும் செய்திகள் மனசை பிசைகிறது.
கலைப்படம் அல்லது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுகிற படங்கள் மெதுவாகதான் கதையை நகர்த்த வேண்டும் என்று எந்த விதியும் இல்லாதபோது ஒரு காட்சியை இழு இழுவென்று இழுத்துச்சொல்லும் பாணி மட்டும் படத்தின் குறையாக தெரிகிறது.
மற்ற எந்த விதத்திலும் ‘கூழாங்கல்’ குறை வைக்கவில்லை.
– தஞ்சை அமலன்