சினிமா செய்திகள்

ரசிகர்களே எனது சக்தி : ‘ஜப்பான்’ விழாவில் கார்த்தி நெகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக கார்த்திக்கு இது 20-வது ஆண்டு.  ‘ஜப்பான்’ 25-வது படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜூமுருகன் இயக்கி இருக்கும்  ‘ஜப்பான்’ படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க,  சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது.

இதை தொடர்ந்து இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட விழா நடைபெற்றது.

தமிழ்த் திரையுலகமே திரண்ட இவ்விழாவில் நாயகன் கார்த்தி பேசியதாவது:-

“இன்று எனக்கு ஸ்பெஷலான ஒரு நாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மொத்த குழுவினரும் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்திருக்கிறது. முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.. ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது. இவர்கள் அன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்று விட்டேன். அவர்களுடைய அன்பு தான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி சொல்கிறேன்.. இந்த திரையுலகில் அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.. நடிப்பு பற்றி என்னவென்றே தெரியாத என்னைப் போன்ற ஒரு புதிய நபரான எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அமீர் அண்ணா. என்னை முதன் முதலாக ஊக்கப்படுத்திய மனிதர் ஞானவேல் ராஜாதான். கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட என்னுடைய படங்களில் சண்டை காட்சிகளில் எனக்கு தூணாக பின்னணியில் இருந்தவர் பாண்டியன் மாஸ்டர். சண்டைக் காட்சிகளின்போது ரிஸ்க்கான சூழ்நிலைகளில் அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நாட்களில் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. நேர்மறையின் ஒட்டுமொத்த உருவம் சிவா சார். பலரும் தாடி இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்தபோது பையா படத்தின் மூலம் என்னை வித்தியாசப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டினார் இயக்குநர் லிங்குசாமி. என்னுடைய இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒப்பனை குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வினோத் ரொம்பவே அரிதான மனிதர். சில வார்த்தைகள் மட்டும் பேசினாலும் தெளிவான சிந்தனை கொண்டவர். காஷ்மோரா போன்ற சிறந்த படத்தை கோகுல் எனக்காக கொடுத்திருக்கிறார். திரையரங்குகளில் அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட ஆன்லைனில் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது. எப்போதுமே நல்ல விமர்சனங்களுடன் எனது திரையுலக பயணத்தை செம்மைப்படுத்தி கொடுத்ததற்காக பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஷாலின் தூண்டுதன் காரணமாகத்தான் நான் நடிகர் சங்கத்திற்குள் இழுத்து வரப்பட்டேன். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது. ஜெயம் ரவி பிறக்கும்போதே ஒரு ஹீரோ ஆகவே பிறந்தவர். ஆர்யா ஒரு நல்ல சிகிச்சையாளர். கூலான மனிதர்.. நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்..இந்த நிகழ்வில் தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். மும்பையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கே வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது ஒரு குழுவாக மகதீரா படம் பார்ப்பதற்கு சென்றோம். அதுபோன்ற ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பாகுபலி படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாங்கள் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.. மூன்றுமே பிளாக்பஸ்டர் வெற்றி. இயக்குநர் ரஞ்சித்தை பொறுத்தவரை அவர் என்னிடம் மெட்ராஸ் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்க கொடுத்தபோது அதில் நான் ஒரு பாகமாக இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டை படித்தவுடன் அது ஈரானிய படங்களைப் போல சர்வதேச தரத்தில் இருந்தது”

நடிகர் சூர்யா பேசியதாவது:-

“ஒட்டுமொத்த தமிழர் உலகமும் கார்த்தியின் பயணத்தை அவ்வளவு அழகாக மாற்றி கொடுத்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில் நான் இருபது வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அழகான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை என்று ரஜினி சார் சொல்வார். அந்த வகையில் கார்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். மணிரத்னம் சாருக்கு இந்த பயணத்தில் நான் நன்றி சொல்கிறேன். ஞானவேல் ராஜா கார்த்தியின் தூணாகவே இருந்திருக்கிறார். பருத்திவீரன் போன்ற ஒரு அழகான காவியத்தை இயக்குனர் அமீர் உருவாக்கிக் கொடுத்தார்.

நாங்கள் இருவருமே சில நேரங்களில் தளர்ந்து போய் இவற்றையெல்லாம் விட்டு விடலாமா என்று நினைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் கொடுத்து எல்லைகளைக் கடந்து ஓட உந்துசக்தியாக ரசிகர்கள் நீங்கள் இருந்துள்ளனர். நீங்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறீர்கள். என்னைவிட கார்த்திக்கு தான் நாங்கள் ரசிகர்கள் என்று பலபேர் சொல்வதுண்டு. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு எனக்கு வேறு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கார்த்தி தன்னுடைய பாதையை தேர்வு செய்வதில் ரொம்பவே கவனமாக இருந்தார். நான் கார்த்தியை பார்த்து பொறாமையும் வியப்பும் கொண்டிருப்பேன். அவர் குடும்பத்திற்கும் வேலைகளுக்கும் சமமான நேரம் ஒதுக்குவதுடன் வருடத்திற்கு இரண்டு முறையாவது பெற்றோர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அவரது 25வது படத்தை கொண்டாடுவதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டில்லிக்கு பிறகு ரோலக்ஸ் என்பதை நானும் கூட கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்”

தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்த படத்திற்காக தங்களது கடின உழைப்பையும் ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்கிய மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கார்த்தி அண்ணாவின் 25-வது திரைப்படத்தை தயாரித்திருப்பதே மிகப்பெரிய கௌரவம் என்பதுடன் எங்களது முதல் திரைப்படத்தையும் கூட அவரை வைத்தே தயாரித்து இருக்கிறோம். எப்போதெல்லாம் நான் சற்று சோர்வாக இருக்கிறேனோ அந்த சமயத்தில் அவர் என்னை உற்சாகப்படுத்துவார். இந்த தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் திரைப்படம் குடும்பங்களுடன் பொழுதுபோக்க சிறந்த படமாக இருக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசும்போது, “கார்த்தி சாருடன் என்னுடைய முதல் படமாக ஆயிரத்தில் ஒருவன் இருந்தது. அதன்பிறகு கொம்பன், சர்தார் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தோம். தற்போது மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் அருமையான மெலோடி பாடல்களிலும் பின்னணி இசையிலும் சற்று தனித்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் சில விஷயங்களை முயற்சித்திருக்கிறோம். சூரரைப்போற்று படத்திற்கு பிறகு புறநானூறு படத்தில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி” என்றார்.

இயக்குனர் ராஜேஜூ முருகன் பேசியதாவது:-

“ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கான கதையை முடித்தவுடன் அதை தனித்துவமான படமாக உருவாக்கும் பாணிக்குத்தான் செல்வேன். திரைப்படங்களில் என்னை வசீகரித்தவர் சார்லி சாப்ளின். இப்போது அந்த வழியில் கார்த்தி சார் என்னுடைய இலக்கிய சிந்தனைகளுடன் கூடிய எண்ணங்களை உற்சாகப்படுத்துவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நிறைய பேர் இலக்கியத்தை சினிமாவுடன் இணைத்து ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் கார்த்தி சார் வட்டியும் முதலும் புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பருத்திவீரன் படத்தைப் போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எஸ்.ஆர் பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர் பிரபு இருவருமே நண்பர்களாக இருந்ததுடன் என்னுடைய எண்ணங்களுக்கு உருக்கொடுக்க ஆதரவாகவும் இருந்திருக்கின்றனர். கார்த்தி போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகருடன் அவரது 25வது படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜி.வி பிரகாஷ் குமார் எனது நெருங்கிய நண்பர். இந்த மொத்த பட குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளனர்” என்று கூறினார்.

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசும்போது, ‘கார்த்தி சாருடன் நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய கடின உழைப்பு எப்போதுமே எனக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. கார்த்தி சார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. அவருடைய முதல் டைரக்ஷனை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது புரட்சித்தலைவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விலைமதிக்க முடியாத பரிசாக ஆயிரம் முத்தங்களை கார்த்திக்கு வழங்கியிருப்பார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.. பொன்னியின் செல்வன் அவருக்கு கனவு திரைப்படமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே போனது. அப்படி இருந்திருந்தால் அவரது கனவு கதாபாத்திரத்தை கண்டு மகிழ்ந்திருப்பார்” என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE