‘ஜிகர்தண்டா XX’ விமர்சனம்
ஒரு ரவுடியை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர்.அவர் ஏன் அப்படி நினைக்கிறார்? என்கிற ஒற்றைவரிக் கதைக்குள் பல்வேறு கிளைக்கதைகளையும் இணைத்துக் கொடுத்திருக்கும் படம் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்.
ரவுடியாக நடித்திருக்கிறார் ராகவாலாரன்ஸ்.தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்ட முயன்றுள்ளார். அவர் கதாநாயகன் என்பதால் கடைசிவரை கெட்டவனாகவே இருக்கமுடியாது என்பதால் போகப்போக நல்லவனாகிறார். அதற்கேற்ற நடிப்பைக் கொடுத்துள்ளார்.
ராகவாலாரன்சைக் கொல்ல நினைத்து அவரிடம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.எதிர்த்துக் கெடுக்க முடியாது என்பதால் அடுத்துக் கெடுக்க முயல்கிறார். கெட்டவன் ஆனா நல்லவன் என்பதற்கேற்ப அவருடைய தோற்றம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத்தக்க நடித்திருக்கிறார்.
லாரன்சின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷாசஜயனுக்குப் பழங்குடிப்பெண் வேடம்.காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
காவலதிகாரியாக வரும் நவீன்சந்திரா மற்றும் இளவரசு, சத்யன் ஆகியோர் கவனிக்கத்தக்க நடித்திருக்கிறார்கள்.
திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு, காட்சிகளிலும் கதை சொல்லியிருக்கிறது.
சநதானத்தின் கலை இயக்கம் படத்துக்குப் பெரும்பலம்.சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் நடக்கும் கதை என்பதை நம்பவைக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார்.
சந்தோஷ்நாராயணனின் இசையில் மாமதுரை அன்னக்கொடி பாடல் அருமை. பின்னணி இசை முன்பின்னாக இருக்கிறது.
ரவுடி, திரைப்பட இயக்குநர் என்று முதல்பாகத்திலிருந்த விசயத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ்.
அதற்குள், கதாபாத்திரங்களைத் தாண்டி இராகவாலாரன்சுக்காகச் சில காட்சிகள், எஸ்.ஜே.சூர்யாவுக்காகச் சில காட்சிகள், தன்னுடைய தனித்துவத்தை நிறுவுவதற்காக சில பெயர்கள்,சில வசனங்கள் மற்றும் காட்சிகள் ஆகியனவற்றோடு, தனிப்பட்ட இருவர் வாழ்க்கைக்குள் ஒரு சமுதாயச்சிக்கலையும் திட்டமிட்டு இணைத்திருக்கிறார்.