‘செவ்வாய்க்கிழமை’ திரை விமர்சனம்
ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொலைகள் நடக்கின்றன.அவற்றிற்கு முன் அதுபற்றிய குறிப்புகளும் ஊர்ச்சுவற்றில் எழுதப்படுகின்றன. இக்கொலைகள் குறித்து காவல்துறை விசாரிக்கிறது. அவற்றில் வெளிப்படும் உண்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைகின்றன. அது என்ன? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம் செவ்வாய்க்கிழமை.
நாயகியாக நடித்திருக்கிறார் பாயல்ராஜ்புத். மையக்கதையும் திரைக்கதையும் அவரைச் சுற்றியே அமைந்திருக்கின்றன.அவருக்கு இருக்கும் சிக்கல் என்பது அறிவியல்பூர்வமானது.ஆனால் அதை அப்படிப் பார்க்காமல் பெண்களைக் கரித்துக் கொட்டுவார்கள். அப்படிப்பட்ட, பொதுவாகப் பெண்கள் ஏற்க விரும்பாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு மிகப்பொருத்தமாக நடித்திருக்கிறார் அவர்.எல்லாவித உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
இன்னொரு நாயகியான திவ்யாபிள்ளையும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நந்திதாஸ்வேதாவும் நன்றாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஆண்களுக்குக் கெட்டபெயர் வாங்கித்தரும் வேடத்தில் நடித்திருக்கிறார் அஜ்மல். சைதன்யா, அஜய்கோஷ் உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் அனைவரும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜ்னீஷ்லோக்நாத் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் காட்சிகளில் இருக்கும் குறைபாடுகளைச் சமன் செய்திருக்கிறார்.
தசரதிசிவேந்திராவின் ஒளிப்பதிவில் இருளில் நடக்கும் காட்சிகளிலும் தெளிவு.
குல்லப்பள்ளிமாதவ்குமாரின் படத்தொகுப்பு படம் இலகுவாக நகர உதவியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் அஜய்பூபதி. பேய்ப்படம் போல் திகிலுடன் படத்தை நகர்த்தியிருந்தாலும் அடிப்படைக் கதை அறிவியல்பூர்வமானது, யாரும் பேசத்துணியாதது என்பதால் பலம் பெற்றிருக்கிறது.
தெலுங்கிலிருந்து தமிழில் குரல்மாற்று செய்யப்பட்டிருக்கும் படமென்றாலும் படத்தில் பேசப்பட்டிருக்கும் விசயம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் தமிழுக்கும் சரியானது எனலாம்.