திரை விமர்சனம்

‘பார்க்கிங்’ திரை விமர்சனம்

நகரவாசிகள் பலரும் சந்தித்த; சந்திக்கும் பிரச்சனையின் ஒரு துளி. அதற்கு போரடிக்காத திரைமொழி வடிவம் கொடுத்து ஈர்க்கும் படமாக வெளிவந்திருக்கிறது  ‘பார்க்கிங்’.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஹரிஷ்கல்யாண் காதல் மனைவி இந்துஜாவுடன் வாடகை வீட்டில் குடியேறுகிறார். அதே வீட்டில் கீழ் தளத்தில் மனைவி மகளுடன் வசிக்கிறார் அரசு அதிகாரியான எம்.எஸ்.பாஸ்கர். வேலையில் நேர்மையானவராக இருந்தாலும் சிக்கனம் என்ற பெயரில் அநியாயத்துக்கு கஞ்சனாக இருக்கிறார்.

இந்நிலையில் புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஷ்கல்யாண். இதை பார்க்கிங் செய்வதில் எம்.எஸ்.பாஸ்கர் – ஹரிஷ் இடையே ஏழரையாகிறது. வார்த்தை போரில் தொடங்கும் ஈகோ சண்டை கைகலப்பு, காவல் நிலையம் என்று முற்றுகிறது. முடிவுக்கு வராத இந்த ஈகோ யுத்தத்தின் முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.

காதல் மனைவி கேட்டதையெல்லாம் வாங்கித்தரும் ஹரிஷ்; காயலான் கடைக்கு போடவேண்டிய பொருட்களைகூட  ரீ யூஸ் செய்யச்சொல்லி மனைவியை இம்சிக்கும் சிக்கன சிகரம் பாஸ்கர். நேர் எதிர் குணாதிசயம் கொண்ட இவர்களுக்குள்  கொதிக்கும் ஈகோவினால் இருவருமே செய்யும் வில்லத்தனம் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதுபோல் அடுத்தடுத்த சுவாரஷ்யத்துக்குள் ஆடியன்ஸை தள்ளுகிறது.

கதாநாயகன் என்றால் பாஸிட்டிவ் கேரக்டர் மட்டும்தான் செய்ய வேண்டுமா? இதோ நெகட்டிவ் ஏரியாவிலும் புகுந்து விளையாட முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஹரிஷ் சிக்ஸர்களாக தெறிக்கவிட்டிருக்கிறார்.

தன்னை காவல் நிலையம் வரை கொண்டுபோய் அவமானப்படுத்திய எம்.எஸ்.பாஸ்கரை பழிவாங்க குழி பறிக்கும் ஹரிஷ்கல்யாணின் முகபாவனைகளில் நடிப்பின் சுவடே தெரியாத எதார்த்தம் அவரை பாராட்ட வைக்கிறது. வெல்டன் ஹரிஷ்.

இன்னொரு பக்கம் நடிப்பின் ஒட்டுமொத்த பரிமாணத்தை பார்வையாளர்களுக்கு பந்தி வைக்கும் எம்.எஸ். பாஸ்கர் பிறவி கலைஞன் என்றால் மிகையாகாது. ஹரிஷ் கல்யாண் கார் வாங்கியதும் முகத்தில் தாண்டவமாடும் பொறாமை தீ, போலி மூலாம் பூசிய வாழ்த்து, லஞ்சப்புகாரில் மாட்டாமல் இருக்க அவர் செய்யும் ஐடியா, அலுவலகத்தை அதிகாரிகள் சோதனை போடும்போது பதற்றத்தை மறைத்துக்கொண்டு செய்யும் செயல்கள் என எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு விருதுகள் குவியட்டும்.

பாஸ்கருக்கு வாழ்க்கைப்பட்டு நொந்து நூலான கதாபாத்திரத்தில் ரமாவின் நடிப்பு அபாரம். கணவனை எதிர்த்து பேசும் பல இடங்களில் தியேட்டரில் வெடிக்கிறது சிரிப்பு வெடி.

ஹரிஷின் காதல் மனைவியாக இந்துஜாவின் நடிப்பும் கச்சிதம்.  பழிவாங்கும் உணர்ச்சியிலிருந்து கணவனை வெளியே கொண்டுவர எடுக்கும் முயற்சியும் அதற்கு அடங்காத ஹரிஷ் மீது காட்டும் ஆக்ரோஷமும் பாராட்டுக்குறிய நடிப்பு.

ஹவுஸ் ஓனராக வரும் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக வருபவர், இஸ்திரி போடுபவர், நக்கல் பிடித்த எதிர் வீட்டுக்காரர் என சிறு சிறு கேரக்டர்களில் வருபவர்களும் சிறப்பு.

ஷாம் சி எஸ்ஸின் சிறப்பான இசை, உறுத்தல் இல்லாத ஒளிப்பதிவு, கட்சிதமான எடிட்டிங் அனைத்தும் படத்திற்கு பலம்.

உலகளாவி இருக்கும் ஈகோ பிரச்சனையின் விளைவு எப்படியான பாதிப்பை எல்லாம் ஏற்படுத்தும்? விட்டுக்கொடுத்தலில் இருக்கும் நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வு என இந்த கதையில் சுவாரஷ்யம் கெடாமல் உணர்த்தும் இயக்குனருக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

இந்த ‘பார்க்கிங்’ பொழுதுபோக்கிற்கு பஞ்சம் வைக்காதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE