ஆக்ஷன் ஏரியாவில் நின்று விளையாடும் ‘ஃபைட் கிளப்’ – விமர்சனம்
வடசென்னை களத்தில் சொல்லப்படவேண்டிய கதைகள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து பல படங்கள் வன்முறை, போதை, வெறியாட்டம் என ஒரே தண்டவாளத்தில் தடதடக்கிறது. ‘ஃபைட் கிளப்’பும் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் மேக்கிங், ‘உறியடி’ விஜயகுமார் உள்ளிட்ட நடிகர்களின் எதார்த்த நடிப்பு இவற்றால் படத்தை ரசிக்க முடிகிறது.
வெட்டுக்குத்து பஞ்சாயத்து வளரும் மாணவர்களை திசை திருப்பும் அரசியல் என்று இருக்கும் மீனவ குடியிருப்பு பகுதியில் மாணவர்களை நல்ல பாதைக்கு இட்டுச்செல்ல போராடும் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). சிறு வயதில் இருந்தே பெஞ்சமினை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு கால்பந்து விளையாட்டில் சாதிக்க நினைக்கும் நாயகன் செல்வா ( ‘உறியடி’ விஜயகுமார்).
இதற்கிடையே தவறான வழியில் சம்பாதிக்க நினைக்கும் பெஞ்சமினின் தம்பி ஜோசப், தனது நண்பர் கிருபாவுடன் சேர்ந்து பெஞ்சமினை கொலை செய்கிறார். கிருபாவின் சூழ்ச்சியால் இந்த வழக்கில் ஜோசப் சிறைக்கு போக கிருபா கவுன்சிலர் ஆகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வரும் ஜோசப், கிருபாவை நேரம் பார்த்து போட்டுத்தள்ள துடிக்கிறார். தனக்கு ஆதரவாக செல்வாவையும் அவரது நண்பர்களையும் அழைத்துக்கொள்கிறார்.
ஜோசப்பின் தந்திரத்தால் கிருபாவுக்கு எதிராக தூண்டிவிடப்படும் செல்வா போதை, அடிதடி, படிப்பில் கவனம் சிதறுதல் என்று தடம் மாறுகிறான். அதே நேரத்தில் தன் குடும்பத்தையும் இழக்கிறார். ஒரு கட்டத்தில் இதற்கெல்லாம் ஜோசப், கிருபாவின் அரசியல்தான் காரணம் என்பதை புரிந்துகொண்டு கொதித்தெழுகிறார். இப்போது செல்வாவின் லட்சியம், கனவு, எதிர்காலம் என்னவாகிறது என்பது க்ளைமாக்ஸ்.
நாயகனின் முதல் படமான ‘உறியடி’யிலேயே ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளும் தன்னிடம் உண்டு என்பதை நிருபித்த விஜயகுமார் இதில் இன்னும் கூடுதலாக மிரட்டி இருக்கிறார். பள்ளிகூட காதலில் உருகி வழியும் விஜயகுமார் இடைவேளைக்கு பிறகு ரவுத்திர முகத்துடன் சீறிப் பாய்வது, விரட்டி விரட்டி வேட்டையாடுவது என ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார்.
ஜோசப் கதாபாத்திரத்தில் வரும் அவினாஷ் ரகுதேவன் நயவஞ்சகத்தை கண்களிலேயே வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களின் வெறுப்பை சம்பாதிப்பது அவரது நடிப்புக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் கிருபாவாக வரும் சங்கர் தாஸ், பெஞ்சமினாக கார்த்திக் சந்தானம் என மற்ற கதாபாத்திரங்களும் வட சென்னை முகங்களை கண்முன் நிறுத்தி நேர்த்தியாக நடித்துள்ளனர்.
நாயகியாக மோனிஷா மோகன் அழகு. ஆனால் முதல் பாதியில் ஓரிரு காட்சிகள் வந்து காணாமல் போபவர் க்ளைமாக்ஸில் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று வந்து நிற்பது கதைக்கு ஒட்டவில்லை.
ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பலம். குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பிற்கு உதவி இருக்கிறது. வித்தியாசமான கோணங்களில் காட்சிகள் ஈர்க்கிறது.
க்ளைமாக்ஸில் செத்த பாம்பை அடிப்பதுபோன்ற ரத்தசகதி காட்சிகள் ஓவரோ ஓவர். இதயம் பலகீனம் உள்ளவர்கள் கண்ணை மூடிக்கொள்க!
வழக்கமான வடசென்னை கதை என்றாலும் இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத்துக்கு இது முதல் படம் என்று நம்பமுடியாத அளவுக்கு படத்தை இயக்கி இருப்பதற்காக பாராட்டலாம்.
மொத்தத்தில் ஆக்ஷன் ஏரியாவில் நின்று விளையாடுகிறது இந்த ‘ஃபைட் கிளப்’ .