வசூல் வேட்டையில் ‘பைட் கிளப்’ : மூன்று நாட்களில் 5 1\4 கோடி அள்ளியது
இயக்கம், தயாரிப்பு என லோகேஷ் கனகராஜ் எதை தொட்டாலும் ஹிட்டாகிறது. அந்தவகையில் அவரது முதல் தயாரிப்பாக வெளிவந்துள்ள ‘ஃபைட்கிளப்’ வசூலை வாரி குவித்துக்கொண்டிருக்கிறது.
‘உறியடி’ படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்தவர் விஜயகுமார். முதல் படத்தின் தலைப்பே இவரது பெயருடன் ஒட்டிக்கொண்டுவிட்டது. இவர் கதாநாயகனாக நடித்து, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் ‘ஃபைட்கிளப்’.
இளைஞர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் அவர்களது எதிர்பார்ப்பை இரட்டிப்பாக திருப்தி செய்துள்ள நிலையில், படத்தின் ரிசல்ட்டும் தித்திப்பு செய்தியை தந்துள்ளது. படம் வெளியான மூன்றே நாட்களில் ஐந்தே கால் கோடி வசூலை அள்ளி ஆச்சர்யம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஃபைட்கிளப்’ ஆக்ஷன் விருந்தாக அமைந்துள்ளது.
கால்பந்து விளையாட்டில் சாதிக்க நினைக்கும் நாயகன்; கெட்ட வழியில் செல்லும் இளைஞர்களை சீர்படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் ஒருவர். இந்த இருவரின் கனவுகளை காவு வாங்க திட்டமிடும் வில்லன்கள், அரசியல்வாதி. இறுதியில் ஜெயிப்பது தீயதா? நல்லதா? என்ற கேள்விகளுக்கு விடை தரும் ஒரு கதைதான் ‘ஃபைட் கிளப்’.
ஆக்ஷன், காதல் இரண்டையும் கலந்த ரசனை மிகுந்த ஒரு திரைக்கதையாக வெளியாகியுள்ள ‘ஃபைட்கிளப்’ அந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர் என எல்லோருக்கும் நல்ல பெயரை கொடுத்துள்ளது.
இதன் மூலம் தயாரிப்பாளராகவும் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றுள்ளார். மூன்றே நாட்களில் 5 1\4 கோடி வசூலை கொடுத்துள்ள ‘ஃபைட்கிளப்’ தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுவருகிறது.