திரை விமர்சனம்

‘வட்டார வழக்கு’ – விமர்சனம்

மதுரை தோடனேரி கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பகையுணர்வு பல உயிர்களை பலி வாங்குகிறது. பகைக்கு இடையே மலரும் சேங்கை மற்ற்றும் தொடச்சியின் காதல் என்னவாகிறது என்பதை ரத்தமும் சதையுமாக பேசும் படம் ‘வட்டார வழக்கு’. அறிமுக இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்
வெட்டி வீராப்போடு சுற்றும் கிராமத்து இளைஞனாக சந்தோஷ் நம்பிராஜ் பக்காவாக பொருந்திப் போகிறார். கோபம், ஆக்ரோஷம், நையாண்டி போன்றவற்றுக்குத் தேவையான உடல்மொழியையும் முகபாவனையையும் வழங்கி சபாஷ் வாங்குகிறார். ஆனால், காதல் காட்சிகளிலும் சோக காட்சிகளிலும் இன்னும் மெனக்கெடல் தேவை. துடுக்கான கிராமத்துப் பெண்ணாக ரவீனா ரவி கச்சிதமான தேர்வு. நிதானம், தைரியம், காதல், கோபம், வேதனை என எல்லா உணர்வுகளையும் நேர்த்தியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார். வில்லனாக விஜய் சத்யா கொடுக்கப்பட்ட பணியைக் குறையின்றி செய்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் புதுமுகங்கள்.
டோனி சான் மற்றும் சுரேஷ் மணியனின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் ‘டிவி சீரியல்’ ஆக்கத்தையே நினைவூட்டுகிறது. பரபரப்பாக நகரும் காட்சிகளில் கேமராவின் வேகத்திலும், இரவுநேர காட்சிகளில் ஒலியமைப்பிலும் கொஞ்சம் ஆறுதல் தருகிறார்கள். பிரதான கதாபாத்திரங்கள் தவிர்த்து, பிறருக்கு ‘க்ளோஸ் அப்’ ஷாட்கள் பெரிதாக வைக்கப்படவே இல்லை.
இளையராஜா இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை. சில விறுவிறுப்பான காட்சிகளுக்கு மட்டும் கிராமிய இசை வாத்தியங்களால் பலம் சேர்த்திருக்கிறார். காதல் காட்சிகளில் `கேட்டுக் கேட்டுப் பழகிய’ அவரின் ஆர்கெஸ்ட்ரா இசையையே மீண்டும் தூசு தட்டிச் சேர்த்துள்ளார். சில காட்சிகளில் பின்னணி இசையாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பழைய இளையராஜா பாடல்கள் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன. 80களின் சினிமா போஸ்டர், ரேக்லா ரேஸ், கிடா சண்டை, கிராமத்து வீடுகள், டீக்கடை, திருவிழா எனக் கலை இயக்குநரின் உழைப்பால் படத்தில் யதார்த்த ரேகைகள் பலமாகப் பதிந்திருக்கின்றன.
ரேக்ளா ரேஸ், கிடா சண்டை, மாட்டுச் சந்தை வியாபாரம் முறை, கிராமத் திருவிழாவில் நடக்கும் வழக்காறுகளும் வழிபாட்டு முறைகளும், நல்ல தங்காள் கதை, பெண்கள் கையில் எடுக்கும் பிரத்யேக வன்முறை முறை என எக்கச்சக்கமான சுவாரஸ்யம் தந்திருக்க வேண்டிய காரணிகள் ஸ்க்ரிப்ட்டில் நிறையவே வருகின்றன. ஆனால், அவை எதுவுமே முறையாகத் திரைக்கதையோடு பொருந்தி வராமல் படத்தின் ஓட்டத்திற்கும் உதவாமல் துருத்திக்கொண்டு நிற்கின்றன.

பலவீனமான திரைக்கதையை, நடிகர்களின் நடிப்போ, தொழில்நுட்ப கலைஞர்களின் பணியோ காப்பாற்றவில்லை. அதனால், பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் அதிமுக்கியமான முடிவுகள், அவர்களின் இறப்பு, ரத்தம் தெறிக்கும் வன்முறை என எதுவுமே பார்வையாளர்களின் மனதில் பதியாமல், திரையை மட்டும் நிரைத்தபடி ஓடுகின்றன. கொலை செய்யக் கதாநாயகன் தயாராகும் காட்சித்தொகுப்பும் இளையராஜாவின் பழைய பாடல்களைப் பின்னணி இசையாகக் கொண்டும் நகரும் காதல் காட்சிகளும் மட்டும் சுவாரஸ்யம் தருகின்றன.

மதுரை கிராமத்து வட்டார வழக்கில் வரும் நையாண்டி வசனங்கள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. பிரதானமாக, பாட்டிகள் – இளவட்டங்களுக்கு இடையிலான உரையாடல்கள், மாமன் – மாப்பிள்ளை உறவுகளுக்கு இடையிலான வாய் சண்டைகள் ஆகியவை சிரிக்க வைத்து, ரசிக்க வைக்கின்றன. மொத்தமாகவே, படத்தின் வசனங்கள் கதைக்களத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும்படி அமைந்திருந்தாலும், இடைவிடாமல் வசனங்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டே இருப்பது நம்மையும் டயர்டாக்குகிறது. பெரும்பாலான நேரங்களில் திரையில் யாராவது ஒருவர் பேசிக்கொண்டே இருக்கிறார். குறைந்தபட்சம், அந்த வசனங்களாவது காட்சிக்குத் தேவையானதாக இருந்திருக்கலாம்.

கிராமத்தில் இருக்கும் சாதிய அமைப்பு, ஒரே சாதிக்குள் இருக்கும் வர்க்க வேறுபாடு, விளைநிலங்களின் மேல் குறிப்பிட்ட சாதிகள் காட்டும் உரிமை (?), விவசாயக் கூலிகளாக ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள், பண்ணை முறையில் இருக்கும் சாதியம், சாதியத்திற்குள் வன்முறைக்கான இடம் எனப் பல விஷயங்களைத் தொட்டிருப்பதற்காக மட்டும் இயக்குநருக்குப் பாராட்டுகள்.

நன்றி : விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE