‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ விமர்சனம்
ஒரு திரையரங்கில் ஒரே இரவில் நடக்கும் ஹாரர் காமெடி கதையே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படம். படம் பார்க்கத் திரையரங்குக்கு வரும் சிலர் அங்கிருக்கும் நான்கு பேயிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவற்றின் பிடியில் இருந்து ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கலகலப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.
பேய்ப்படங்கள் சிரிக்க வைக்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்வப்போது அப்படி ஒரு படம் வந்துகொண்டேயிருக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயன்று கொண்டிருக்கும் சத்யமூர்த்தி, விஜய்குமார், கோபி அரவிந்த், சுதாகர் உள்ளிட்ட நண்பர்கள் ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் செல்கிறார்கள். அதே திரையரங்கில் படம் பார்க்க யாஷிகா ஆனந்த் ஹரிஜா ஆகியோரும் வந்திருக்கிறார்கள். இவர்கள் எதிர்பார்த்துப் போன படம் ஓடாமல் அங்கே வேறொரு படம் ஓடுகிறது. அது பேய்ப்படம். அதனால் அங்கிருந்து வெளியேற நினைக்கிறார்கள்.ஆனால் வெளியேற முடியவில்லை. ஏன்? எப்படி? எதற்காக? என்ன நடந்தது? என்கிற கேள்விகளுக்கான விடைகள் தாம் படம்.
யூடியூபில் புகழ்பெற்ற எல்லோரையும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது.கோபி, சுதாகர், விஜய், சாரா, அப்துல், சந்தோஷ், அகஸ்டின், ஜெயசீலன், சத்யமூர்த்தி, கிரேன் மனோகர்,முனீஷ்காந்த்,ஷா ரா, ஜார்ஜ்மரியான் ஆகியோர் படம் நெடுக வந்து பயப்படுவது போல் நடித்து நம்மைச் சிர்க்க வைக்க முயன்றிருக்கிறார்கள். சில இடங்களில் பெரும் வெற்றியும் பல இடங்களில் கடும் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள்.
ஆண்களை மட்டும் வைத்து மட்டும் படமெடுத்தால் போரடித்துவிடும் என்பதற்காகவே யாஷிகா ஆனந்த்,மதுமிதா, ஹரிஜா,ரித்விகா ஆக்யோரையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.அவர்களும் கொடுக்கப்பட்ட வேலையைக் குறைவின்றிச் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜோஷ்வா ஜே பெரேஸ், காட்சிகளிலும் பயமுறுத்த வேண்டும் என நினைத்து ஒளியமைப்பு செய்திருக்கிறார்.
பேய்ப்படங்களுக்கு பின்னணி இசை மிக முக்கியம் என்பதற்காகக் கொஞ்சம் கூடுதலாகவே பணியாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் கௌஷிக் கிரிஷ்.
எழுதி இயக்கியிருக்கும் ரமேஷ்வெங்கட், பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற சொல்லைப் பெய்ராக வைத்தது முதல் காட்சியமைப்பு நடிகர் தேர்வு ஆகிய அனைத்திலும் ஒரு முழுநீள நகைச்சுவைப்படம் கொடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார். முயற்சி திருவினை.
– செல்வன்