இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும் லெமன் லீஃப் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ப்ளூஸ்டார்’. அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு மற்றும் பலர் நடிக்க ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இப்படம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் பலரும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ” படத்தை நான் பார்த்துட்டேன். ரொம்பவே நல்லா வந்துருக்கு. நீலம் படத்துக்கு சென்சார்ல பிரச்னைகள் வரும். இதுவரைக்கும் ரிவைஸிங் போனது இல்ல. இந்த படம் ரிவைஸிங் போய் U/A கிடைச்சிருக்கு. பாடகர் அறிவோட வேலை இந்த படத்துல ரொம்பவே ஸ்பெஷல். இந்த படத்துல ஒரு மெலடி பாடல் பாடியிருக்கான். அவன் அரசியல் பாடல்கள் மட்டும்தான் எழுதுவான்னு இல்ல. காதல் பாடல்களுமே எழுதுவான், ” என்றவர் சிரித்தபடி ,” ஒரு நிலபரப்பை புரிஞ்சுகிட்டு இசையைக் கொடுக்கிறது ரொம்பவே முக்கியம். அதே மாதிரி நிலபரப்பை சரியாக புரிஞ்சுகிட்டு ரொம்பவே அற்புதமான இசை வேலைகளை கோவிந்த் வசந்தா பார்த்திருக்கார்.” எனப் பேசியவர் கீர்த்தி பாண்டியனை நோக்கி, ” கீர்த்தி ரொம்பவே சூப்பரா பேசின.
இன்னைக்கு ரொம்பவே முக்கியமான நாள். நம்ம வீட்டுல நம்ம கற்பூரம் ஏத்தி வைக்கலைனா நம்மலாம் தீவிரவாதிகள். திவீரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்துட்டு இருக்கு. இன்னும் 10 வருஷத்துல எவ்ளோ மோசமான இந்தியாவுல இருக்கப் போறோம்னு பயத்தை உருவாக்குது. அப்படியான காலகட்டம் வர்றதுக்கு முன்னாடி நம்ம மூளைல ஏத்தி வச்சிருக்கிற பிற்போக்கு தனத்தையும், நம்மகிட்ட இருக்கிற மதவாதத்தையும் அழிக்கிறதுக்கு நம்ம கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்திகிட்டு இருக்கோம்.” என்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் பா.இரஞ்சித், “இன்னைக்கு ராமர் கோயில் திறப்பு நடக்குது. ஆனா, அதுக்கு பின்னாடி நடக்குற மத அரசியலையும் நம்ம கவனிக்கணும். மதச்சார்பின்மை இந்தியா எதை நோக்கி பயணமாகிட்டு இருக்குன்னு கேள்விகுறியாக இருக்கு. ராமர் கோயில் திறப்பை கடவுள் நம்பிக்கையோட பார்க்கலாம். அதை அரசியலாக்கிறதுதான் இங்க சிக்கலாக நான் பார்க்கிறேன்.
ரஜினிகாந்த் இந்த ராமர் கோயில் திறப்புக்கு போவது அவரோட விருப்பம். அவர் ஏற்கெனவே அவரோட கருத்தை முன் வச்சிருக்கார். அவர் 500 ஆண்டு பிரச்னை தீர்த்துவிட்டதாகச் சொல்றாரு. ஆனா, அந்த பிரச்னைக்கு பின்னாடி இருக்கிற அரசியலை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இருக்கு. அவர் பேசிய விஷயங்கள் சரி, தவறுங்கிறதைத் தாண்டி அதுல எனக்கு விமர்சனம் இருக்கு.” என்றார்.
ரஜினியை வைத்து படம் இயக்கியிருந்தாலும் கருத்து ரீதியில் சமரசம் செய்துகொள்ளாமல் பேசிய ரஞ்சித்துக்கு பறக்கும் முத்தம் தரலாம்.