’முடக்கறுத்தான்’ விமர்சனம்
நாட்டில் இப்படியெல்லாம் நடக்குதா என்ற அதிர்வலைகளை எழுப்பி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை தரும் படைப்பாக வெளிவந்திருக்கிறது ‘முடக்கறுத்தான்’.
நாயகன் டாக்டர் வீரபாபு, மூலிகைகளைச் சேகரித்து வியாபாரம் செய்து வருகிறார். அதோடு ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்களை பராமரித்து பாதுகாக்கும் சமூக சேவையும் செய்து வருகிறார்.
டாக்டர் வீரபாபுவுக்கும், நாயகி மஹானாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இருவரும் திருமணத்துக்கு புத்தாடைகள் வாங்க சென்னை செல்கிறார்கள். அங்கே மஹானாவின் அக்கா குழந்தை காணாமல் போயிருக்க, அதை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் டாக்டர் வீரபாபு. அப்போது பல திடுக்கிடும் உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார்.
அப்பாவி குழந்தைகளை அதிக அளவில் கடத்திச் செல்ல பெரிய கும்பல் இயங்குவதையும், அக்குழந்தைகளை ஏலம் போட்டு விற்பனை செய்ய தனி சந்தையே இருப்பதையும், அந்த சந்தைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து குழந்தைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வருவதையும் கண்டறிகிறார். இந்த கேடுகெட்ட நெட்வொர்க்கை அழித்து குழந்தைகளை மீட்க உறுதி பூணுகிறார். இதை அவர் எப்படி சாதிக்கிறார்? என்பதை அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் சொல்லுகிறது ‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் வீரபாபு, தனக்கு எது வருமோ அதை வைத்து தனது கதாபாத்திரத்தை குழப்பம் இல்லாமல் தெளிவாக வடிவமைத்திருப்பதால் எளிதாக, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதவாறு திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக, அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
நாயகியாக வரும் மஹானா குறைவான காட்சிகளில் வந்தபோதிலும் குறை சொல்ல முடியாதவாறு நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன், நடை, உடை, டயலாக் டெலிவரியில் தனக்கென ஒரு தனித்தன்மையை உருவாக்கிக்கொண்டு, தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
போலீஸ் உயர் அதிகாரியாக சிறப்புத் தோற்றத்தில் வரும் சமுத்திரக்கனி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். மயில்சாமி, பாவா லட்சுமணன், முத்துகாளை, வைஷ்ணவி, பேபி ஷாலினி ரமேஷ், தயாளன், சாம்ஸ், ‘காதல்’ சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல்ராவ், ரமேஷ், இந்திரஜித் உள்ளிட்டோர் அளவாக, அருமையாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் வீரபாபுவே இப்படத்தை சமூக அக்கறையுடன் எழுதி இயக்கியிருக்கிறார். இன்றைய தலையாய சமூகப் பிரச்சனைகளில் ஒன்றான குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை திரைக்கதையாக்கி, படத்தை போரடிக்காமல் நகர்த்தியிருக்கிறார். அவருடைய பின்னணி இசையும், சிற்பியின் பாடலிசையும், அருள் செல்வனின் ஒளிப்பதிவும், ஆகாஷின் படத்தொகுப்பும் இயக்குனருக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘முடக்கறுத்தான்’ விழிப்புணர்வு.