திரை விமர்சனம்

நடிப்பு ராட்சசி பூர்ணா : ‘டெவில்’ – திரை விமர்சனம்

ஒரு சிறு விபத்து வாழ்க்கையையே விபத்துக்குள்ளாக்கும் என்ற ஒற்றை வரியை கோட்டோவியமாக தீட்டி இதயம் ஈர்க்கும் படம் ‘டெவில்’

பயணம் செய்வதில் ப்ரியம் கொண்ட திரிகுன் பைக் ஓட்டி வரும்போது பூர்ணா ஓட்டி வந்த காரில் அடிபட்டு காயம் ஏற்படுகிறது. தன்னால் பாதிக்கப்பட்ட ரோஷனை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஹேமா. ரோஷனுக்காக சமையல் செய்து தருவது, காரில் ஊர் சுற்றிக்காட்டுவது, ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் செல்வது என ரோஷனுடன் நட்பை வளர்க்கிறார்.

அந்த நட்பு திசை மறி செல்வதை உணரும் பூர்ணா திரிகுன்னை விட்டு விலகி வீட்டுக்கு வருகிறார். அப்போது வீட்டில் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறார் பூர்ணாவின் கணவர் விதார்த். விதார்த் இருக்கும்போது பூர்ணா ஏன் திரிகுன்னை அடிக்கடி சந்தித்தார். விதார்த்துக்கும் பூர்ணாவுக்குமிடையேயான பிரச்சனை என்ன? என்ற அதிர்ச்சி ஏற்படுத்தும் காட்சிகளை அடுத்தடுத்த அத்தியாயமாக கோர்த்து ‘டெவிலை’ ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் தானும் நடிப்பு ராட்சசி என்பதை பூர்ணாவும் நிரூபித்திருக்கிறார். முகத்தில் கோபம், இறுக்கம், அழுத்தம், ஏக்கம் இயலாமை என அத்தனை உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலித்து மனசை பிசைந்தெடுக்கிறது பூர்ணாவின் நடிப்பு. உடைந்து அழும் காட்சிகளில் ஹேமா கதாபாத்திரத்தை உள்வாங்கி கச்சிதமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

பூர்ணாவுடன் பழகி ஒரு கட்டத்தில் அவரை பிரிய முடியாமல் தவித்து நிற்கும் காட்சிகளில் திரிகுன் சபாஷ். ஒருகட்டத்தில் அவருக்குள் எட்டிப்பார்க்கும் வில்லத்தனம் படம் பார்ப்பவர்க்களையும் அச்சப்படுத்துகிறது. அந்த அளவுக்கு மிரடி இருக்கிறார் திரிகுன். இரண்டாம் பாதியில் தன் நடிப்பால் படத்திற்கு வலுசேர்திருக்கிறார் விதார்த். காதல், காமம், கோபம், குரோதம், குற்றவுணர்வு எனப் பல பரிமாணங்களில் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படம் பார்ப்பவர்களுக்கு அந்த களத்தில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. இரவு நேரக் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அடித்து விளையாடியிருக்கிறது.

இசையமைப்பாளராகவும் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அவர் இசையமைத்து எழுதிய ‘விடியல் தேடும் மனிதருக்கு’ பாடல் இதயத்தின் எல்லா அறைகளையும் தொட்டுச் செல்கிறது. பின்னணி இசையில் இசைஞானியின் பாதிப்பு மிஷ்கினை ஆட்டி படைத்திருப்பது தவிர்க்கமுடியாத உண்மை. கதாபாத்திரங்கள் பேசாத இடங்களில் மிஷ்கினின் பின்னணி பிரமாதமாக குரல் கொடுக்கிறது. த்ரில்லராக உருமாறும் இரண்டாம்பாதியின் விறுவிறுப்புக்குக் கைகொடுத்திருக்கிறார் மிஷ்கின். அழகிய கூத்தனின் ஒலிக்கலவையும் கச்சிதம்.

முதல் பாதி படம் மன உணர்வுகளை கவிதையாக கடத்த,  இரண்டாம் பாதி ஹாரர் வகையறாவுக்குள் புகுந்து எங்கெங்கோ அலை பாய்வது சற்றே அதிருப்தி. இடையில் அகோரி வருவது கதை டைவ் அடிப்பது என  திரைக்கதை தடுமாற்றம் ஏமாற்றம்.

எனினும் புதிய கோணத்தில் புதிய உலகத்திற்குள் ஆடியன்ஸை டிராவல் செய்ய வைக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்!

‘டெவில்’ கடவுள் பாதி மிருகம் பாதி!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE