நவீன காதல் ஓவியம் ‘லவ்வர்’ : விமர்சனம்
ஆறு வருட காதல் கருகிவிடக்கூடாது என்று தவிக்கும் காதலன்… ஆறு வருட உறவுக்காக 60 வருட துயரத்தை சுமக்க தயார் நிலையில் இல்லாத காதலி. இந்த இருவருக்கும் இடையிலான ஊடலையும் கூடலையும் இதயத்தின் ஈரம் தொட்டு தீட்டி இருக்கும் நவீன காதல் ஓவியமே ‘லவ்வர்’.
கல்லூரி பருவத்தில் மணிகண்டனின் தனித்திறனால் ஈர்க்கப்பட்டு அவர் மேல் காதல் கொள்கிறார் நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியா. கல்லூரி முடித்து கெளரி ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய, தாழ்வு மனப்பான்மை, தவறான சேர்க்கை, ஆணாதிக்க மனப்பான்மையில் சிக்கி தவிக்கிறார் மணிகண்டன். உண்மையான காதல், அன்பு அக்கறை என்ற பெயரில் மணிகண்டன் கொடுக்கும் டார்ச்சரில் அவ்வப்போது பொசுங்கிக்கொண்டே இருக்கிறார் கெளரி ப்ரியா.
ஒரு கட்டத்தில் இவன் திருந்தப்போவதே இல்லை என்ற முடிவுக்கு வரும் கெளரி, காதலை முறித்துக்கொள்ளும் முடிவை எடுக்கிறார். எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்து பார் நீ நினைப்பது போலவே மாற்றிக்கொள்கிறேன் என்று மீண்டும் மீண்டும் கெளரியை பின் தொடர்கிறார் மணிகண்டன். கெளரியை தொலைத்துவிடவோமோ என்ற தவிப்புடன் காதலன். அதை தொந்தரவாகவே நினைக்கும் காதலி. இருவேறு தடத்தில் தடதடக்கும் இந்த காதல் ரயில் பயணத்தின் முடிவு சுபமா சுமையா என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
மணிகண்டன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு அபூர்வம். விரக்தி, வேதனை, தவிப்பு, குற்ற உணர்வு, இயலாமை, அவமானம், தன்மானம் என அத்தனை உணர்வுகளையும் மாற்றி மாற்றி பிரதிபலித்து சந்தேக பிராணியாக, காதலை கரடு முரடாக காட்டிக்கொள்ளும் இளைஞராக நடிப்பில் நூற்றுக்கு நூறு ஸ்கோர் செய்திருக்கிறார்.
‘மாடர்ன் லவ்’ வெப் தொடரில் இதயம் ஈர்த்த ஸ்ரீ கெளரி ப்ரியா.. இதிலும் உள்ளம் கொள்ளை கொள்கிறார். காதல் என்ற பெயரில் தன் சுயத்தின் மீது அவ்வப்போது மணிகண்டன் கல்லெறியும் காட்சிகளில் பார்வையால் சாட்டை சுழற்றும் நடிப்பு அபாரம். விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் கட்டங்களில்… நடிப்பில், தனக்கு அகோர பசி இருப்பதை உணர்த்தும் கெளரி ப்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரமும் விருதுகளும் காத்திருக்கிறது.
டீம் லீடராக வரும் கண்ணா ரவி, தோழிகளாக வரும் நிகிலா சங்கர், ரினி, நாயகனின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன், அம்மாவாக கீதா கைலாசம், குடிகார தந்தையாக ‘பருத்திவீரன்’ சரவணன் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் கச்சித தேர்வு.
இன்றைய காதலின் வடிவம், இன்றைய காதலர்களின் வாழ்க்கை முறையை எதார்த்தமாக பதிவு செய்யும் திரைக்கதை ரொம்ப ரொம்ப ஃபிரஸ். அதில் நேர்த்தி காட்டி தனது கெட்டிக்காரத்தனத்தை நிரூபிக்கும் இயக்குனர் பிரபுராமுக்கு பாராட்டுக்கள்!
அதே சமயம் படம் நெடுக கட்டிங், ஜாய்ண்ட் பார்ட்டி, புகை, போதை என நீண்டுகொண்டே செல்வது ஓவர் டோசேஜ்.ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. கதைப்பட கண்ணா ரவி அழைத்துச் செல்லும் லொகேஷன்களின் ஒளிப்பதிவாளரின் லென்ஸாக மாறி விடுகிறது படம் பார்ப்பவர்களின் கண்கள். எதுவெல்லாம் காதல், காதல் அல்ல என்று க்ளாஸ் எடுக்காமல் எதார்த்தம் பேசும் வசனம் படத்தின் பெரும் பலம்.
காதல் அது சார்ந்த நகர்வுகள், நகைச்சுவை என ஸ்மூத்தாக போகும் முதல் பாதியை ரசிக்கும் ஆடியன்ஸ்… இரண்டாம் பாதியிலும் மணிகண்டன் கதாபாத்திரம் திரும்ப திரும்ப ஸாரி கேட்கும் காட்சிகளை ஒரு கட்டத்தில் சகித்துக்கொண்டு பார்க்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது ஏமாற்றம்.
இந்த குறைகளை கவனித்து திரைக்கதை தொய்வை சரி செய்திருந்தால், இதயத்தை இன்னும் அதிகமாக வருடியிருக்கும் இந்த ‘லவ்வர்’.
- thanjai amalan