திரை விமர்சனம்

ஆதிராஜனின் ’நினைவெல்லாம் நீயடா’ விமர்சனம்

காதல் இல்லாத உலகமும் இல்லை காதல் பூக்காத உயிர்களும் இல்லை. அந்தவகையில் தமிழ் சினிமாவில் இன்னொரு காதல் கதையாக  தன் பங்கிற்கும் ரசிகர்களின் இதயம் ஈர்க்க வந்திருக்கிறது ஆதிராஜனின் ‘நினைவெல்லாம் நீயடா’ .

கதை…

பள்ளிப்பருவத்தில் கெளதம் – மலர்விழிக்கு இடையே பூக்கும் பனித்துளி காதல். ஒரு கட்டத்தில் மலர்விழியின் குடும்பம் வெளிநாடு சென்றுவிட, நினைவுகளில் மட்டும் வாழ்கிறது காதல். வாலிப வயதை எட்டியும் தன் நெஞ்சுக்குள் மலர்விழியுடனான காதலை பூட்டி வைத்து போற்றி வளர்க்கிறார் கெளதம்.

இந்தச்சுழலில் அத்தை மகளான ஆனந்தியுடன் திருமணம் ஆகிறது கெளதமுக்கு. திருமணத்திற்கு பிறகும் மலர்விழியை மறக்கமுடியாமல் தவிக்கும் கெளதம் ஆனந்தியை வெறுக்கிறார். மாமன் கெளதம் மேல் காதல் பைத்தியமாக இருக்கும் ஆனந்தி.. தன் காதலை புரிந்துகொள்ளாத மாமனை நினைத்து உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்படுகிறார்.

இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து கெளதமை பார்க்க திரும்பி வருகிறார் மலர்விழி.. இந்த முக்கோண டிவிஸ்டின் க்ளைமாக்ஸை காதல் மணக்க மணக்க சொல்கிறது  ‘நினைவெல்லாம் நீயடா’.

காதலையும் காதலியையும் மறக்க முடியாமல் தவிக்கும் கெளதம் கதாபாத்திரத்தில் பிரஜன் அனாயசமாக பொருந்தியிருக்கிறார். காதல் பிரிவு, அது கொடுக்கும் வலி, மனைவியின் மனநலம் பாதிக்கப்பட காரணமாகிவிட்ட குற்ற உணர்வு, வீட்டிலும் நண்பர்களிடத்திலும் காட்டும் வெறுப்புணர்வு என கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து மென்மையான நடிப்பை தந்திருக்கும் பிரஜனுக்கு பாராட்டுகள்.

பிரஜன் வெறுத்தாலும் அவருக்கு பிடித்தது மாதிரி நடந்துகொள்ள முயலும் காட்சிகளில் மனீஷா யாதவ் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் இடம் மனீஷாவின் நடிப்புக்கு செம தீனி. பிரஜனுடனான கனவு பாடல் இளசுகளை ஈர்க்கும் ரகம்.

பள்ளிப்பருவத்து கெளதம் – மலர்விழியாக வரும் ரோஹித் – யுவலட்சுமி ஜோடியியிடம் வேதியியல் வேலை செய்திருக்கிறது. குறிப்பாக யுவலட்சுமி அத்தனை அழகு. ஒளிபதிவாளரின் கூடுதல் அக்கறையில் ஆஹா… இளமை புதுமை.

பிரஜனின் நண்பராக ரெடின் கிங்ஸ்லி சோகம் அப்பும் இடங்களிலும் கவுண்ட் கொடுத்து கலகலப்பாகிறார். படத்திற்கு கிங்ஸ்லியின் டைமிங் காமெடி பெரிய பலம். பேராசிரியராக வரும் மனோபாலா, மலர்விழியின் தோழியாக வரும் மதுமிதா, பள்ளி பருவத்து கெளதமின் நண்பராக வருபவர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கின்றன.

படத்தின் இன்னொரு நாயகன் இசைஞானி இளையராஜா. என்பதுகளின் மெட்டுக்களை கேட்பது போல் பாடல்களில் அத்தனை தித்திப்பு. பின்னணி இசையும் இம்சிக்காமல் கதையின் போக்கில் போவது சிறப்பு.

ராஜா பட்டசர்ஜீயின் ஒளிப்பதிவு ஆகச்சிறப்பு. குறிப்பாக இளமை கால காதலை அத்தனை உயிப்பாக படமாக்கிய விதம் பிரமாதம்.

இத்தனை சிறப்புகளுக்கும் கேப்டனாக இருந்து பார்வையாளர்களின் மனசுக்குள் காதலை கடத்தும் இயக்குனர் ஆதிராஜனுக்கு பாராட்டுகள். படத்தில் அத்தனை கவனமாக இருந்தவர், இன்னொரு நாயகியாக வரும் சினாமிகாவை (வெளிநாட்டில் இருந்து திரும்பும் மலர்விழி) தேர்வு செய்வதில் பிசகி இருக்கிறார். சரியாக நடக்கக்கூட தெரியாதவர் டூயட் ஆடுவதெல்லாம் படம் பார்ப்பவர்களில் நெற்றியில் எழுதப்பட்ட விதி.

இப்படி சில குறைகள் இருந்தாலும்  வாலிப பருவத்து காதலை கிளறிவிட்டு வசியம் செய்கிறது இந்த  ‘நினைவெல்லாம் நீயடா’.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE