‘பர்த்மார்க்’ திரை விமர்சனம்
ராணுவத்தில் லெஃப்டினன்ட்டாக இருப்பவர் ஷபீர் கல்லராக்கல். இவர் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி மிர்னாவை இயற்கையான முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க இயற்கை சூழ்ந்த மலை கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு இருக்கும் மருத்துவர்கள், உதவியாளர்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது மிர்னாவுக்கு. இதனால் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என கணவரை வற்புறுத்துகிறார். அதேசமயம் தனது கணவரின் நடிவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதையும் தெரிந்துகொள்கிறார் மிர்னா.
ஒரு கட்டத்தில் அன்பான கணவனே தனக்கும் தனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எமனாக வந்து நிற்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறார் மிர்னா. ஷபீரின் மாற்றத்திற்கான காரணம் என்ன? மிர்னாவின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? என்ற திக் திக் கேள்விகளுக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
ராணுவ அதிகாரியாக வரும் நாயகன் ஷபீருக்கு மனைவி மீதான அக்கறை, ராணுவ வீரனுக்கான கோபம் என நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதற்கான அருமையான கதாபாத்திரம். ராணுவத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை விவரிப்பது, திடீர் திடீரென குணாதிசயங்களை மாற்றிக்கொள்வது என கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருப்பதற்கு சபாஷ்.
ஜெனிஃபர் என்ற கர்ப்பிணி பாத்திரத்தைச் சிறப்பாக உள்வாங்கி அதற்குத் தேவையான நடுக்கம், சந்தேகப் பார்வை, தயக்கம் எனப் பலவற்றைப் படு யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மிர்னா. கணவனே தனக்கு வில்லனாக அமைய அதை எதிர்கொள்ளும் காட்சிகள் அட்டகாசம். யாரும் எதிர்பாராதது.
உதவியாளராக, பேச்சுத் திறனில் சவால் உள்ளவராக இந்திரஜித்தின் நடிப்பு கதைக்குத் தேவையானதைச் செய்திருக்கிறது. பேறுகால உதவியாளராக தீப்தி, திருநங்கை மருத்துவராக (பேராமெடிக்) பொற்கொடி, பர்த்திங் வில்லேஜை நிர்வகிப்பவராக பி.ஆர்.வரலட்சுமி ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இயற்கை முறையில் பிரசவம் என்று ஒற்றை புள்ளியை அமானுஷ்யம் த்ரில்லர் கோட்டில் இணைத்து படத்தை போரடிக்காமல் கொண்டு செல்வதில் கெட்டிக்காரர் என்பதை நிருபித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன். இருப்பினும் திரைக்கதையில் தள்ளாடி இருப்பது படத்தின் மைனஸ்.
இயற்கை எழியில் சூழ்ந்த ரம்யமான லொகேஷன்களை அழகு குறையாமல் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
மொத்தத்தில் திரைக்கதையை மட்டும் பலமாக அமைத்திருந்தால் ‘பர்த்மார்க்’ நல்ல மார்க் வாங்கியிருக்கும்.