‘அதோமுகம்’ – விமர்சனம்
இரண்டே மணி நேரம்தான் படம். அந்த இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த திக்திக்கில் திகைக்கவைத்து படம் பார்ப்பார்களை அதிர்ச்சி உலகத்தில் அழைத்துச்சென்று பரபரப்பை பற்றவைக்கும் படமாக ஈர்க்கிறது ‘அதோமுகம்’.
தன் ஆசை மனைவிக்கு வித்தியாசமான பரிசை கொடுத்து அசத்த திட்டம்போடும் கணவன். அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்காக மனைவியின் செல்போனில் கண்கானிப்பு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து வைக்கிறான்.
அதன்மூலம் மனைவியின் ஒவ்வொரு செயல்பாடும் நொடிக்கு நொடி அப்டேட் ஆகிறது. அப்போது மனைவியின் ரகசிய செயல்பாடும் இன்னொரு முகமும் தெரியவர, தலையில் இடி விழுந்தது போல் அதிர்ச்சிக்குள்ளாகிறான் கணவன். அப்படி என்னதான் செய்கிறாள் மனைவி? சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கணவனும் மனைவியும் அதிலிருந்து மீள்கிறார்களா இல்லையா என்பதற்கு விடை பல திருப்பங்களை கடந்து கிடைக்கிறது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே இதுபோன்ற கான்செப்ட் இதுவரை வந்ததில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ‘என் வழி தனி வழி ‘ என புது ரூட்டில் தடதடக்கும் ‘அதோமுகம்’ த்ரிலர் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கிறது.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் எஸ்.பி.சித்தார்த் முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். நடிகர் அருண்பாண்டியனின் தங்கை மகனான சித்தார்த் அவரை போலவே ஆஜானு பாகுவான தோற்றத்தில் நடிப்பில் மின்னுகிறார். மனைவி மீதான காதலை வெளிப்படுத்தும் உணர்வு.. அதே மனைவியின் ரகசிய பக்கங்களை அறிந்து அதிர்ச்சியையும் குழப்பத்தையும் வெளிப்படுத்தும் பாவனைகள் என தமிழ் சினிமா கதாநாயகர்கள் பட்டியலில் தனக்கொரு துண்டை போடுகிறார். அவருக்கு வரவேற்பும் வாழ்த்தும்!
ஆரம்பத்தில் அப்பாவியாக கணவன் மனதிலும் ஆடியன்ஸ் மனதிலும் பதிந்து ஒருக்கட்டத்தில் அவளா இவள் என்னுமளவிற்கு டெரர் காட்டும் நடிப்பில் அடித்து தூக்கும் நாயகி சைத்தன்யா அருமையான தேர்வு. வழக்கமாக டெம்பிளேட் ஹீரோயின் கேரக்டர் அல்லாத ரோலில் அட்டகாசமாக தன்னை பொருத்திக்கொள்ளும் சைத்தன்யாவுக்கு பாராட்டுகள்!
சகோதரி மகனுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக உபரி காட்சியில் வந்தாலும் அருண்பாண்டியன் ஸ்கோர் செய்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருப்பதற்கு சபாஷ்!
கதையின் போக்கிற்கு பொருத்தமான பின்னணி இசையை கொடுத்து அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சரண் ராகவன். அருண் விஜய்குமாரின் ஒளிப்பதிவில் ஊட்டி, குன்னூர் அழகு கண்ணுக்குள் நிலைக்கிறது.
வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் இயக்குனர் சுனில் தேவ் கவனம் பெறுகிறார். பொழுபோக்கு அம்சத்துடன் கொஞ்சம் விழிப்புணர்வையும் பேசியிருப்பது சிறப்பு. திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் நம்பகத்தன்மைக்கு அருகே சென்றிருக்கலாம்.
சில குறைகள் இருந்தாலும் ‘அதோமுகம்’ நம்பி பார்க்கலாம்.