‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ – விமர்சனம்
காதல் வர்ணம் பூசப்பட்ட கெளதம் வாசுதேவனின் அதே ஆக்ஷன் டெம்ப்ளேட்தான். ஆனால் இந்தமுறை கொஞ்சம் தூக்கலான ஆக்ஷனில் நாயகன் வருணை வாட்டி எடுத்திருக்கிறார்.
படத்தின் கதை…
சர்வதேச அளவிலான குற்ற வழக்கில் வாதாடும் வக்கீல் ராஹி. சர்வதேச அளவில் கூலிக்கு கொலை செய்யும் குற்றவாளி வருண். எதிரெதிர் துருவங்களான இருவருக்குமிடையே பூக்கும் காதல் கருகிவிட. அவரவருக்கான அசைன்மெண்டில் பிரிகின்றனர். ஆனால் காலம் மீண்டும் அவர்களை சந்திக்க வைக்கிறது. இந்த முறை ராஹியை போட்டுத்தள்ள ஒரு கூட்டம் துரத்த, ராஹியை இமை போல் காக்கும் பொறுப்பு வருணுக்கு. காதலையும் காதலியையும் காக்கிறாரா வருண் என்ற கேள்விக்கு விடை சொல்கிறான் ‘ஜோஷ்வா’.
தமிழ் சினிமாவில் இன்னொரு ஆக்ஷன் ஹீரோக மிளிரும் தகுதி வருணின் துடிப்பிலும் நடிப்பிலும் தெரிகிறது. ஆனால் அதுமட்டும் போதாது. காதல் உணர்வுகளை கடத்துவது, சூழலுக்கு ஏற்ற பாவனைகளை வெளிபடுத்துவது என இன்னும் கொஞ்சம் தேற்றிக்கொண்டால் கொண்டாட வேண்டிய நாயகனாக நாளை மாறலாம்.
ஓப்பனா சொல்லப்போனா ஹீரோயின் ராஹி செட் ஆகல. ஜிவிஎம்மின் டேஸ்ட் இந்த விஷயத்தில் வேஸ்ட் ஆகியிருக்கிறது. ரொமான்ஸ் ஏரியாவில் வேறொரு நாயகியாக இருந்தால் இளசுகள் கிறங்கி இருக்கும். ஆனால் தியேட்டரில் ராஹியை பார்க்கும் ஆடியன்ஸின் முகத்தில் ஒரே இறுக்கம்.
நாயகியை போட்டுத்தள்ளுவதற்காக துடிக்கும் லோக்கல்களாக மன்சூர் அலிகான், கிருஷ்ணா மற்றும் அல்லு சில்லுகள். இதில் மன்சூர் வந்த சில நிமிடங்களில் வருணின் துப்பாக்கிக்கு இரையாகி பரலோகம் போக, கிருஷ்ணா அடுத்தடுத்த ரவுண்டுகள் சுட வருகிறார். அதனால் கதையின் போக்கு குட்டிக்கரணம் அடிக்கிறது.
வருணுக்கு கட்டளை போடுபவராக.. அசைன்மெண்ட் கொடுப்பவராக.. அவ்வப்போது அக்கறை காட்டுபவராக.. ஆபத்தில் மீட்பவராக வரும் திவ்யதர்ஷினி (டிடி) கேரக்டரும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?.. ரகம்தான்.
தனி பங்களாவா இருந்தாலும் சரி ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக இருந்தாலும் சரி போகிற இடங்களிலெல்லாம் டுமில் டுமில் என்று குண்டு மழை பொழிகிறது. உயிர் பலிகளும் ஆகிறது. ஆனால் ஒத்த போலீஸ்கூட எட்டிப்பார்க்காத அளவுக்கு லாஜிக்.. குப்பை வண்டியில் ஏற்றப்படுகிறது.
ஆக்ஷன் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென்னின் கம்போஸிங் ஆங்கில படத்துக்கு நிகரான அட்டகாசம். அதேபோல் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் மிரட்டல். கார்த்திக்கின் இசையில் ”நான் ஜோஷ்வா…” பாடல் ஈர்ப்பு.
படத்தில் 80 சதவீதம் ஸ்டண்ட் இயக்குனருக்கே வேலை என்பதால் கிடைத்த 20 சதவீதம் மட்டும் இயக்குனர் கெளதம் மேனன் கிடா வெட்டி இருக்கிறார். சறுக்கலற்ற லாஜிக்.. டிராக் மாறாத திரக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் ‘ஜோஷ்வா’ ஆகச்சிறந்த ஆக்ஷன் படமாக மாறியிருக்கும்.