‘அரிமாபட்டி சக்திவேல்’ –விமர்சனம்
இந்தியாவை வல்லரசாக்க எத்தனை பிரதமர்கள் வந்தாலும் சமத்துவ தமிழகத்தை உருவாக்க எத்தனை முதல்வர்கள் முயன்றாலும் சாதி வெறியையும் ஆணவ கொலைகளையும் வேரோடு அழிக்க முடியவில்லை. அப்படியொரு சாதி பித்து பிடித்து அலையும் ஒரு ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாகக்கொண்டு உருவாகியிருக்கும் படமே ‘அரிமாபட்டி சக்திவேல்’.
அன்பு சூழ்ந்த குடும்பத்தில் பிறந்த நாயகன் சக்திவேலுக்கு உடன்படித்த கவிதாவுடன் காதல் மலர்கிறது. சாதிகளை கடந்து உறவுகளை உதறிவிட்டு திருமணம் செய்துகொள்ளும் இருவரையும் ஒன்றாக வாழவிடாமல் ஊரும் உறவும் துரத்துகிறது. சாதி வெறி, கொலை வெறியில் இருந்து தப்பிக்க இந்த காதல் கிளிகள் சந்திக்கும் சோதனையும் வேதனையுமே கதை.
நாயகன் சக்திவேலாக அறிமுகம் பவன். இவரே படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். முடிந்தளவு இயல்பான நடிப்பை தர முயன்றிருக்கிறார். போகப்போக சினிமா இவருக்கு நிறைய கற்றுக்கொடுக்கும். இவரும் கற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கும் மேகனா எலன், கவிதாவாக வருகிறார். ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஒரு ரொமான்ஸ் சாங்கில் கொஞ்சமா கிறங்க வைக்கிறார்.
நாயகனின் தந்தையாக லிட்டர் கணக்கில் செண்டிமெண்ட் பிழிந்திருக்கிறார் சார்லி. ஒரு சில இடங்களில் மீட்டருக்கு மேலே சூடு வைக்கும் நடிப்பு. அரசியல்வாதி ஆறுமுகமாக இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்க முயன்றுள்ளார். நாயகின் அம்மா, அண்ணன்கள், நாயகனின் தாத்தா அழகு, அப்புறம் ஊர் பெரிசுகள், நெஞ்சை விடைக்கும் வில்லன்கள் எல்லோருமே அக்மார்க் நாடகத்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.
காசுக்கு தகுந்த தோசை மாதிரி பட்ஜெட்டுக்கு ஏற்ற லைட்டிங்கில் ஒளிப்பதிவை ஒப்பேத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் JP மேன். சும்மா சொல்லக்கூடாது மணி அமுதவன் இசையில் பழைய ட்யூன் என்றாலும் இரண்டு பாடல்கள் ஈர்க்கிறது.
படம் இந்தா முடியும் அந்தா முடியும் என்று எதிர்பார்த்தால் இரண்டாம் பாதி ஜவ்வாக இழுக்கிறது. கொஞ்சம் பொறுமையா பாருங்க பாஸ்.. என்பதுபோல நீட்டி முழக்கி ஒருவழியாக க்ளைமாக்ஸில் சுபம் போடுகிறார் இயக்குனர் ரமேஷ் கந்தசாமி.
‘அரிமாபட்டி கந்தசாமி’யேவ்…..