உணர்வுகளின் ஒளி வடிவம் ‘J பேபி’ – விமர்சனம்
நடிகை ஊர்வசிக்கு இன்னொரு தேசிய விருதை பெற்றுத்தரும் படைப்பாக வெளிவந்திருக்கிறது இந்த ‘J பேபி’.
அம்மா என்றொரு தெய்வம் கொடுத்த தாய் பாலுக்கும், பாசத்திற்கும் இந்த உலகத்தில் எதைக்கொடுத்தாலும் ஈடில்லை. அப்படியொரு தாயின் உண்மை கதையை அடிப்படையாக கொண்ட ‘J பேபி’ அவசியம் பார்க்கவேண்டிய படம்.
ஐந்து பிள்ளைகளை பெற்ற கணவனை இழந்த தாய் ஊர்வசி. கடன் பிரச்சனையில் சொந்த வீட்டை இழக்க நேரிட.. அந்த கவலையில் மன பிறழ்வுக்கு ஆளாகிறார். விளைவு.. மற்ற வீடுகளின் கதவுகளை சாத்தி பூட்டுப்போடுவது, மற்ற வீடுகளுக்கு வந்த தபால்களை எடுத்துக்கொண்டு வருவது, யாருக்காவது கஷ்டம் என்றால் கையில் இருக்கும் தங்க நகைகளை கொடுத்து மகிழ்வித்து மகிழ்வது என ஊர்வசியின் உலகம் சுயநல உலகத்திலிருந்து அந்நியப்பட்டது.
பெற்ற தாயின் நிலை புரியாமல் அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் பிள்ளைகள். அந்த சிறையிலிருந்து வீட்டுக்கு போக தவிக்கும் ஊர்வசி ஒரு சூழ்நிலையில் காணாமல் போகிறார். அவர் ஹவுராவில் இருப்பதை அறியும் ஊர்வசியின் மகன்கள் அவரைத் தேடிச் செல்கின்றனர். தேடிப்போன அம்மாவும் அவரது அன்பும் மீண்டும் கிடைக்கிறதா இல்லையா என்பதை பாசத்தின் ஈரம் தொட்டு எழுதியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.
ஐந்து பிள்ளைகளின் தாயாக, பாகுபாடு காட்டாத பாசத்தை வெளிப்படுத்தும் மனுஷியாக வாழ்ந்திருக்கிறார் பேபி… ஸாரி ஊர்வசி. நிறைய காட்சிகளில் கலக்கியிருக்கிறார் கலங்கடித்திருக்கிறார். குறிப்பாக மனநல மருத்துவமனையில் சுயம் தெரியாமல் இருக்கும் மன நோயாளிகளிடத்தில் காட்டும் அன்பு, பரிவு, அவர்களுக்கு கதை சொல்லி மகிழ்விப்பது போன்ற இடங்களில் அவ்வளவு நெகிழ்வு.
போலீஸ் வாகனத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அதிகாரியை எழுப்பி “நான் யார் தெரியுமா?.. சி. எம். ஃபிரண்ட். ஒழுங்கா டியூட்டி பார்க்கலைன்னா தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன் “ என்று அலப்பறை கூட்டும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. முகபாவனை, உடல்மொழி என பாடம்பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் தாயாகவே மாறிப்போகும் ஊர்வசிக்கு தங்கத்தட்டில் காத்திருக்கிறது விருதுகள்.
ஊர்வசியின் மூன்று மகன்களில் இருவராக தினேஷ், மாறன் இருவரின் நடிப்பும் நெஞ்சை தொடுகிறது. தன்னிடம் மனஸ்தாபத்தில் பேசாத அண்ணன் மாறன் தன்னை புரிந்துகொள்ளமாட்டாரா என்ற ஏக்கமும், தாயை தொலைத்த குற்ற உணர்விலும் தினேஷ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுவரை காமெடியனாகவே பார்க்கப்பட்ட மாறன், பக்குவ நடிப்பிலும் பாராட்டை பெறுகிறார். அம்மாவை தேடி ஹவுரா இரயிலில் பயணிக்கும்போது, கூட்ட நெரிசலை பார்த்துவிட்டு “இந்த ரயிலுக்கு ஹவுரான்னு பேரு வச்சதுக்கு பதிலா நவ்வுர்றான்னு வச்சிருக்கலாம்” என்று போகிற போக்கில் அடிக்கும் கமெண்ட் கலகலப்பு. இன்னொரு காட்சியில் “வெல்லம் விக்க போனா மழை வருது; பொரி விக்க போனா காத்து அடிக்குது” என்ற ஒருவர் சொல்ல, “பேசாம வெல்லம், பொரி ரெண்டையும் கலந்து பொரி உருண்ட விக்கலாமே” என்று மாறன் அடிக்கும் கவுண்டுக்கு செம அப்ளாஸ்.
அதேபோல் தினேஷின் மனைவியாக வருபவர், ஊர்வசியின் மகளாக வருபவர், ஊர்வசியை கண்டுபிடிக்க உதவும் மிலிட்டரிக்காரர் என அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பாக பொருந்தியுள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
முதல் பாதி படம் ஆங்காங்கே செயற்கை தண்டவாளம் ஏறி தடதடத்தாலும் இரண்டாம் பாதியில் மனதை கனக்க செய்யும் திரைமொழியில் வென்றிருக்கும் இயக்குனர் சுரேஷ் மாரிக்கு தமிழ் சினிமாவில் காத்திருக்கிறது சிறப்பான வெற்றிகள்.
‘J பேபி’ உணர்வுகளின் ஒளி வடிவம்.