‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – விமர்சனம்
சில நேரங்களில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம், அறிமுக இயக்குனரின் படம் அட பரவாயில்லையே… என்று கவனம் ஈர்க்கும். அந்த வகையறாவை சேர்ந்ததுதான் இந்தப்படமும்.
பெண்களை போகப் பொருளாக பார்க்கும் மதுரை இளைஞன் ரவி. அம்மாவின் கட்டுப்பாட்டில் வளரும் சுதந்திர பறவையாக ஊர் சுற்ற நினைக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த இளம்பெண் அரசி. முகநூல் நட்பில் பேசிக்கொள்ளும் இருவரும் ஒருநாள் வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்ற நினைத்து பூம்புகாரில் கரை ஒதுங்குகின்றனர். அரசியை அடைவதில் குறியாக இருக்கும் ரவி, ஒரு சந்தர்ப்பத்தில் எல்லை மீறும்போது அரசியின் தற்காப்பு ஆயுதம் ரவியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சேர்ந்து போன இருவரும் திரும்பி வரும் வழியில் நடப்பது என்ன என்பதை மதுரை டூ மயிலாடுதுறை; மயிலாடுதுறை டூ பூம்புகார் மார்க்கத்தில் பயணிக்கவைத்து மனதை தொடுகிறது ‘நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’.
பொதுவாகவே ஒரு இளைஞனையும் இளம்பெண்ணையும் தனியாக பார்க்கும்போது நமது எண்ண ஓட்டம் தறிகெட்டு ஓடும். ஆனால் இனியாவது அந்த பார்வையை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை அடெல்ஸ் காமெடி ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குனர் பிரசாத் ராமருக்கு வெல்டன்.
படம் ஆரம்பித்த அரைமணி நேரம் இழுவையான காட்சி அமைப்புகள் சோர்வை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும் அதன்பிறகு ஒரு சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வை தராமல் எதார்த்தத்தின் கரம் பிடித்து நம்மை படத்தோடு ஒன்ற செய்யும் எளிமை.. சபாஷ் ரகம்.
கண்ணில் படும் பெண்களுடன் கடலை போட்டு அடைய துடிக்கும் மதுரை இளைஞர் ரவியாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியனுக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை. மதுரைக்கே உரித்தான குசும்பு, கோபம் பெண்களிடம் வழிவது, நண்பனை தாஜா செய்வது என இயல்பான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.
நாயகி அரசியாக வரும் ப்ரித்தி கரணும் அப்படித்தான். முன்பின் பழக்கம் இல்லாதவன் என்று தெரிந்தும் ரவியுடன் சுதந்திர பறவையாக சுற்ற நினக்கும் ஆசை, அதே சமயம் அவனது தவறான நோக்கம் புரிந்து அந்த தருணத்தை தைரியமாக எதிர்கொள்வது என பிரமாதம்.
அரசியின் தோழிகளாக வரும் பெண்களின் ரீல்ஸ் ஆசைக்கு பலிகடாவாகி பல்ப் வாங்கிக்கொள்ளும் காட்சியில் நண்பராக வரும் சுரேஷ் மதியழகன் ஸ்கோர் செய்கிறார். மற்ற பிற கேரக்டர்களும் இயல்பான நடிப்பை கொடுத்திருப்பது ஆகச்சிறப்பு.
முதல்பாதி படத்தில் ‘ஏ’வகையறா வசனங்கள் தூக்கலாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் இன்றைய இளைய தலைமுறைக்கும் பெற்றோர்களுக்கும் அழகாக ஒரு விஷயத்தை உணர்த்தி நெகிழ வைப்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை போன்ற தொழில்நுட்பங்களில் இன்னும் கொஞ்சம் தரத்தை கூட்டியிருந்தால் புதுமுகங்களின் படம் என்பதை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். ஆனால் அந்த குறைகளே படத்தின் பெரிய மைனஸ்.