திரை விமர்சனம்

‘காமி’ – திரை விமர்சனம்

‘காமி’  ( GAAMI ) என்றால் தேடல் உள்ளவன் என்று பொருள். வித்தியாசமான முயற்சிகளில் தேடல் கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தப்படம் உங்களை திருப்திப்படுத்தும்.

கதை இதுதான்…

ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரியாக வாழ்ந்து வருகிறார். மனிதர்களை இயல்பாகத் தொடுவது என்றாலே அவருக்குப் பிரச்னைதான். உடல் முழுவதும் ஷாக் அடித்த உணர்வுக்குச் சென்றுவிடுவார் (Haphephobia). இதனைக் குணப்படுத்த இமய மலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும் தாவரம் ஒன்றை எடுக்கச் செல்கிறார். மற்றொரு புறம், சில பிற்போக்கான நம்பிக்கைகளால் தேவதாசியாக இருந்த துர்காவின் (அபிநயா) மகளைத் தேவதாசியாகப் பணிபுரியக் கட்டாயப்படுத்துகிறார்கள். இதற்குப் பயந்து அந்தச் சிறுமியும் தப்பி ஓடுகிறாள். மற்றொரு பக்கம், விநோதமான மருத்துவ ஆராய்ச்சிக்காகச் சிறையில் ஒரு சிறுவன் அடைக்கப்படுகிறான். அதிலிருந்து தப்பிக்க ‘Shawshank Redemption’ பாணியில் பல முயற்சிகளைக் கையில் எடுக்கிறான். இந்த மூவரும் அவர்கள் நினைத்ததை முடித்தார்களா, மூவருக்குமான தொடர்பு என்ன என்பதே இத்திரைப்படத்தின் கதை.

அகோரியாக நடித்திருக்கும் விஸ்வக் சென், இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார்.  சக பயணியாக சில சூழல்களால் ஷங்கருடன் இமயம் செல்லும் சாந்தினி செளத்ரி, நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். தேவதாசிகளின் துயரத்தையும் வலியையும் பார்வையாளர்களிடம் கடத்துகிறார் அபிநயா. சிறையிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்களுக்கு ஏற்பட வைக்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார் ‘தும்பட்’ புகழ் முகமது சமாத். இந்தப் பிரதான பாத்திரங்கள் தவிர, சின்ன சின்ன கதாபாத்திர நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கதைக்கரு தொடர்பான பல விஷயங்களும் தெளிவாகப் புரியும்படி, சரியான மீட்டரில் திரைக்கதையில் அமைத்திருக்கிறார்கள். அட்வென்சர் த்ரில்லர் திரைப்படங்களுக்கு உரித்தான முக்கியமான விஷயங்களைத் திரைக்கதையில் சரியான அளவில் சேர்த்து த்ரில் உணர்வைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

அதே சமயம், திரைக்கதையாசிரியர்கள் வித்யாதர் காகிதாவும் பிரத்யூஷ் வத்யமும் சில லாஜிக் மீறல்களையும் உன்னிப்பாகக் கவனித்திருக்கலாம். அதுமட்டுமின்றி தாய்க்கும் மகளுக்கும் இடையேயான எமோஷனல் கதையை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம். தேவதாசிகளின் துயரம், சிறைவாசிகளின் பரிதவிப்பு போன்றவை நம்மை உருக்கிய அளவுக்கு நாயகனின் முயற்சிகளோ, அம்மா – மகள் பாசமோ பெரிதாக நம்மை அசைத்துப் பார்க்கவில்லை. சிறையில் நடக்கும் கதையில் என்ன வகை ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள் உள்ளிட்ட பின்னணியில் இன்னுமே தெளிவு இருந்திருக்கலாம்.

பனிப் பிரதேசங்களின் கடும் குளிரையும், சிறையில் நிகழும் கொடூரங்களையும் தனது கேமராவின் மூலம் படம்பிடித்து அந்தச் சூழலின் அசல் உணர்வைப் பார்வையாளர்களிடம் கொடுத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா. கதாபாத்திரத்தின் இக்கட்டான சூழல்கள், உச்சக்கட்ட காட்சிகளை நெருங்கும் வேளைகளில் எல்லாம் கட் வைத்து அடுத்த காட்சிக்கு மாற்றிய படத்தொகுப்பின் நுட்பம் பார்வையாளரின் எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைக்கிறது. இலக்கை நோக்கி நகரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையமைப்பாளரின் நரேஷ் குமரனின் பின்னணி இசை கச்சிதமாகக் கடத்துகிறது. இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள் படத்திற்குத் தடுப்பணை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருப்பது ஆறுதல்.

‘காமி’ கவனம் ஈர்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE